ஈழத்தமிழா்களின் வலியினை எழுதிச்செல்லும் தீபச்செல்வன் கவிதைகள்

எழுத்தாளர் வ,ந,கிரிதரன் -

கவிதை கவிஞனின் அகத் தேடலில் விழைவது. கவிதை கவிஞனுக்குள் நிகழ்ந்த பாதிப்பிலிருந்து விடுபட்டுவிட முடியாத ஒரு மையத்திலிருந்து உருவாக்கம் பெறுவது. கவிதை  உருவாக்கப்படுபவை அல்ல, மனித உணா்வினில் உருவாவது. காட்டிடை வைக்கப்பட்ட சிறுகனல் காடெங்கும் பரவுவது போல மனிதனின் உணர்வினைத் தாக்கிய சிறுவடு கவிதையெனும் தீயாய் பற்றிப் படர்கிறது. அந்த சிறுவடுவே கவிதைக்கான தொடக்கப்புள்ளி. அந்த வடு இல்லாமல் கவிதையும் இல்லை. கவிஞனும் இல்லை. கவிஞனை உரசி காயப்படுத்திய அந்த நிகழ்வே கவிஞனுக்கான முகமும், அவனது அடையாளமும் கூட. இவ்வாறாக கவிதைக்கு ஆயிரம் விளக்கங்களை அவரவர் அனுபவத்தில் இருந்து அள்ளிக் கொடுக்கலாம்.

ஈழத்துப் போர்ச்சூழலில் கவிதையின் உருவாக்கம் பற்றி குறிப்பிடும்  பெண்கவிஞர் கவிதா,

“ஒரு சமூகத்தின்
சோகம் சுமந்த பாரத்தில்
கூனிமுடமாகி
உருக்குலைந்து
கண்களைக் குருடாக்கிய
கொலைக் களத்திலிருந்து
உயிர் தப்பிய கவிதை இது”
(முள்ளிவாய்க்காலுக்குப்பின், ப-37)

என்று குறிப்பிடுகின்றார். இப்பதிவு ஈழத்தமிழர்களின் கவிதைகளை ஒரு சமூகத்தின் வலிநிறைந்த வரலாற்று ஆவணமாக நம்மை நோக்கச் செய்கின்றது. இது போன்ற அழுத்தமும் அடர்த்தியும் நிறைந்த பதிவுகள் இன்னும் வேறுபட்ட நிலைகளில் வெவ்வேறு படைப்பாளிகளால் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியதாகும்.

Continue Reading →

மக்கள் வாழ்வியல் பேசும் சீவக சிந்தாமணி

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்)

தலைசிறந்த காப்பியங்கள் அனைத்தும் கற்பனைக் களஞ்சியமாகவே தோன்றுகின்றன. கற்பனையின் சொல்லாற்றல் இலக்கியமாகின்றது. அந்த இலக்கியங்கள் சிறந்த காப்பிய நூலாய் மிளிர்கின்றன. அக் காப்பியங்களுள் தலை சிறந்தது சீவக சிந்தாமணியாகும். இது ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றானது. இதைக் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருத்தக்க தேவர் எனும் புலவர் யாத்துத் தந்தனர். இக் காப்பியத்தின் தலைவன் சீவகன் என்ற அரசன் காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை ஒன்றன்பின் ஒன்றாகத் திருமணம் புரிந்து அவர்களுடன் ஒன்றுபட்டுக் கூடி மகிழ்வுற்று  ஏமாங்கத நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தில் இருந்து அரசாண்டு வந்தான் என்று கதை நீண்டு போகின்றது. இனி, கதைப் போக்கைத் தவிர்த்து, வாழ்வியல் தொடர்பில் சீவக சிந்தாமணி பேசும் பாங்கினையும் பார்ப்போம்.

மாநகரின் சிறப்பு:- மலைகள், குன்றுகள், பொய்கைகள், குளங்கள், வாவிகள், ஏரிகள், ஆறுகள், நீர் வீழ்ச்சிகள், மரங்கள், சோலைகள் ஆகிய இயற்கை வளங்கள் நிறைந்துள்ள நாடுகளையும் காண்கின்றோம். நகரைச் சுற்றி வன்மையான கல் மதில்கள், அவற்றின் மீது பல்வேறு போர்க் கருவிகள், மதில்களைச் சூழ்ந்து அகழிகள் போன்றனவும் அமைத்திருந்தனர். அந்நகரத்தைக் கடைநகர், இடைநகர், உள்நகர் என மூன்று பிரிவாக வகுத்துள்ளனர். கடைநகரில் யானையின் மருப்பிற்குப் பூண் இடுவோர் வாழும் வீதிகள் அமைந்திருந்தன. அங்கு தேர் ஏறும் இடமும், வாட்போர் பயிலும் இடங்களும் இருந்தன. இடைநகரில் அழகிய மாடங்கள், அதன் உச்சியில் நீல மணியால் செய்யப்பட்ட அழகிய இடங்களும் அமைந்திருந்தன. உள்நகரில் பரத்தையர் சேரி அமைந்திருந்தது. கடைகளின் தரையை நாள் தோறும் மெழுகி, அகிற்புகை, சந்தனப் புகை இட்டு, குலதெய்வங்களை வணங்கி நிற்பர்.

அரசன் அரண்மனையைச் சுற்றி ஆழமான அகழி அமைந்துள்ளது. தற்பாதுகாப்பிற்காக அந்த அகழியில் முதலைகள் நிறைந்திருக்கும். கால்வாய்களில் எவரும் விழாதபடி என்றும் மூடப்பட்டிருக்கும். அரசன் தங்குவதற்குப் பூங்காவில் பள்ளிமாடம் அமைந்திருக்கும். ஆங்கே கண்கவர் சிலைகள் காணப்படும். அரசன் அரண்மனையில் என்றும் இன்னிசை, யாழ் ஒலி, முரசொலி, நடன ஒலி நிறைந்திருக்கும்.

Continue Reading →

சிறுகதை: நிலங்கீழ்வீடு

- பொ.கருணாகரமூர்த்தி - எமது 15 வருஷ கனடியவாழ்வின் அருஞ்சேமிப்பில் இந்தவீட்டை நோபிள் ரியல் எஸ்டேட்ஸ் என்கிற ஒரு குழுமத்தின் அனுசரணையுடன்தான் வாங்கினோம். இங்கே வீடுகளைவாங்கும் தமிழர்கள் அநேகமாகச் செய்வதைப்போலவே நாங்களும் இவ்வீட்டை  நிலவறைகள் உள்ள வீடாகத்தேர்வுசெய்தோம். ஆனாலொன்று எப்படி ஒரு அடுக்ககத்தின் உச்சிமாடத்தில் கூரைமுகடுகளுக்குள் அமைந்த வீடுகளை குடியிருப்பாளர்கள் தவிர்த்துக்கொள்வார்களோ, அதேபோல் இந்த நிலங்கீழமைந்த வீடுகளும் குடியிருப்பாளர்களின் முதல் விருப்புக்குரியவையல்ல. நிலங்கீழ்வீட்டையும் யாருக்காவது வாடகைக்கு விட்டால் அவர்கள் தரக்கூடிய வாடகையும் எமது மாதாந்த தவணைத்தொகையைச் செலுத்துவதற்கு உதவும் என்பதே இவ்வீட்டைத் தேர்வுசெய்ததின் சூக்குமம். நிலவறைகள் என்றால் நீங்கள் கிட்டங்கி மாதிரிகளையோ, அலுவலகங்களில் இருக்கும் பொருட்களை வைப்பதற்கான களஞ்சியவறைகளையோ உருவகப்படுத்திவிடக்கூடாது. அவையும் வதியுமறை, படுக்கையறை, குளிப்பறை, கழிப்பறை எல்லாவற்றுடனும்கூடியதும் மானுஷர் வதிவதற்கேற்றமான (பேஸ்மென்ட்ஸ்)  மனைகள்தான்.

இவ்வகைமனைகளைக் குடியிருப்பாளர்கள் தேர்வுசெய்யாமைக்கு காரணங்களும் இல்லாமலில்லை. பனிவீழ்ச்சியும், நீண்ட குளிர்காலங்களுமுள்ள நாடுகளில் ஏனைய வீடுகளை விடவும்  இவ்வீடுகளை குளிர் மிகையாகத் தாக்கும், அதனால் கணப்புகளுக்கான மின்சாரம்/எரிவாயுச்செலவுகளும் சற்றுக்கூடுதலாகவே இருக்கும். இன்னும் கடவுளர்கள்தான் மலைகளில் குளிர் அதிகமாகியோ, கொஞ்சம் பணிஓய்வுகொள்வோமென்றோ, இல்லை ரொறொன்டோ தேவதைகளைக் கொஞ்சம் அணுக்கத்தில் பார்த்து ஒத்திவிட்டுப்போகலாமென்றோ இவ்வகை  மனைகளுக்கு வெளியே வந்திறங்கி நின்றாலும் அம்மனைவாசிகளுக்கு அவர்களின் தரிசனம் கிட்டாது. அஃதாவது நேரடியான சூரியஒளிக்கதிர்கள் இவ்வகை மனைகளுக்குள் கடவுள்களில் பட்டுத்தான் தெறித்துவந்தாலும் பாயாது. ஒரேயொரு பொருண்மிய அநுகூலம் என்னவென்றால்  அவற்றின் மலிவான வாடகைதான். 100 ச.மீட்டர்கள் விஸ்தீரணமான சாதாவீட்டொன்றுக்கு வாடகை 1000 டாலர்கள் என்றால் இதுபோன்றவற்றை 500, 600 க்குள் தேற்றிவிடலாம். ஆதலால் இவ்வகை வீடுகளிலும் கணிசமான மக்கள் வதிவதும் லௌகீக, மற்றும் வர்க்க நியதியே.

Continue Reading →

சிறுகதை: போதி மரம்

குரு அரவிந்தன் (அவள் கசக்கப்பட்ட மலராய் அலங்கோலமாய் கட்டிலில் மயங்கிக் கிடந்தாள். மார்பகம் நனைந்திருந்தது. ‘அம்மா’ என்று அவள் அப்போது எழுப்பிய அந்த அவலக் குரல் கூட குழந்தையின் அழுகைக்குள் புதைந்து போயிற்று…’)

அதிகாலையின் மங்கிய இருட்டில் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு அருகே உள்ள பௌத்த விஹாரையிலிருந்து ஒலிபெருக்கியில் ‘பிரித்” ஓதும் சத்தம் அந்த இராணுவ மருத்துவமனைக்குள் எதிரொலித்தது.

புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி..!

அந்த மருத்துவ மனையில் தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த பண்டா ‘நான் ஒரு நல்ல பௌத்தனா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டான். ‘இல்லை’ என்ற அவனது மனச்சாட்சியின் பதில் அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. ‘நான் ஏன் இப்படிச் சாக்கடைப் புழுவாய் மாறினேன்? நாட்டுப்பற்றா? மதவெறியா? இல்லை மொழிவெறியா?’

எதுவுமே இல்லை! குடும்பத்தின் வறுமை தான் அவனை இராணுவத்தில் தொழில் புரிய இழுத்து வந்தது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்குப் பள்ளிப் படிப்பு அதிகம் வரவில்லை. அவனது கட்டுமஸ்தான உடம்பிற்கு இந்தத் தொழில் ஒன்றுதான் அந்த நேரம் ஏற்றதாக இருந்தது. எனவே தான் வேறுவழியில்லாமல் இராணுவத்தில் சேர்ந்தான். அவன் இராணுவத்தில் சேர்ந்த காலத்தில் தினமும் பயிற்சி செய்வதுஇ சாப்பிடுவதுஇ தூங்குவதுஇ போன்றவை தான் இராணுவத்தின் தொழிலாக இருந்தது. எப்போதாவது எங்கேயாவது மழை வெள்ளமென்றால் அங்கே போய் மக்களுக்கு உதவி செய்வார்கள். அவ்வளவுதான். எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் இப்படித்தான் அவனது இராணுவ வாழ்க்கை ஆரம்பமானது.

Continue Reading →

‘டொராண்டோ’வில் பாலன் தோழரின் ‘சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்’ நூல் வெளியீட்டு நிகழ்வு!

– வாசகர்களே! பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுக்காக, குறிப்பாகத் தமிழகத்தமிழர்களுக்காக, அவர்கள்தம் மத்தியில் தமிழகத்தின் சிறப்பு முகாம்களென்ற சிறைச்சாலைகள் பற்றி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக, அங்கு வாடும் ஈழத்தமிழ் அகதிகளின் நிலை பற்றி எழுதப்படும் புனைவுகள், அபுனைவுகள் ஆகியன தொடர்ச்சியாகப்பிரசுரிக்கப்படும். தமிழகத்துச்சிறப்பு முகாம்களில் நீங்கள் அடைபட்டிருக்கின்றீர்களா?  அப்படியானல் உங்களது அனுபவங்களை எம்முடனும் பகிர்ந்துகொள்ள விரும்பினால் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அவற்றை அனுப்பி வையுங்கள். – பதிவுகள் –


'டொராண்டோ'வில் பாலன் தோழரின் 'சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்'  நூல் வெளியீட்டு நிகழ்வு!

நேற்று , நவம்பர் 29, 2015 அன்று, பாலன் தோழரின் ‘சிறப்பு முகாம் சித்திரவதை முகாம்’ நூல் வெளியீட்டுக்குச் சென்றிருந்தேன்.  வழக்கமாக இது போன்ற நிகழ்வுகளுக்கு வரும் எண்ணிக்கையிலானவர்களே வந்திருப்பார்கள் என்றெண்ணிச் சென்ற எனக்கு , நிகழ்வு நடந்த கூடம் நிரம்பி வழிந்ததைக்கண்டபோது ஆச்சரியமும், கூடவே மகிழ்ச்சியும் தோன்றின.

எழுத்தாளர் பா.அ.ஜயகரனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வு அமைப்புகள் பலவற்றின் கூட்டு முயற்சியாக நடைபெற்றதாக அறிந்தேன். இந்த நூல் வெளியீட்டின் இன்னுமொரு சிறப்பு அரசியல்ரீதியில் பல்வேறு முரண்பட்ட கருத்துகளைக்கொண்டவர்கள் இணைந்து இந்த நூல் வெளியீட்டினை நடாத்தியிருப்பதுதான். இது வரவேற்கத்தக்கது. முரண்பாடுகளுக்குள் நட்புரீதியிலான ஐக்கியத்தைக்காணல் ஆரோக்கியமானதே. நிகழ்விலும் பல்வேறு அரசியல் கருத்துள்ளவர்களையும் காண முடிந்தது. குறிப்பாக மயில், ராதா , சேனா, சிவா  போன்ற தேடகம் நண்பர்கள் பலரையும், ஜான் மாஸ்ட்டர், அலெக்ஸ் வர்மா, பரதன் நவரத்தினம், நிருபா நாகலிங்கம், ரதன், எஸ்.கே.விக்கினேஸ்வரன், மீராபாரதி , சிவவதனி பிரபாகரன் என்று பலரைக்காண முடிந்தது.

நிகழ்வின் ஆரம்பத்தில் மார்க் அந்தனி என்னும் இளைஞர் தமிழகச்சிறப்பு முகாமொன்றில் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனுபவத்தை விபரித்து உரையாடினார். ‘நாடு கடந்த தமிழீழம்’ அமைப்பின் பிரதிநிதிகளிலொருவரான உஷா ஶ்ரீஸ்கந்தராசா தனதுரையில் தமிழகத்துச் சிறப்பு முகாம்கள் மூடப்படுவதனை வற்புறுத்தி உரையாற்றினார். அத்துடன் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை புலப்படும் வகையில் ஜெயலலிதாவுக்கு எல்லாரையும் கடிதங்கள் எழுதும்படியும் அறிவுரை பகிர்ந்தார்.

அவரைத்தொடர்ந்து சர்வதேச மன்னிப்புச்சபையினைச்சேர்ந்த ஜான் ஆர்கியு  உரையாற்றினார். அவர் தனதுரையில் தனக்குக் கடந்த இருபத்து ஐந்து வருடங்களாக இலங்கைத்தமிழர் பிரச்சினை பற்றி ஆழமான புரிதல் இருப்பதாகவும், ஆனால் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ் நாட்டில் இவ்விதம் ஈழத்தமிழர்கள் சிறப்பு முகாம்கள் என்னும் சிறைக்கூடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடயம்  பற்றி அவ்வளவான புரிதல் இல்லை என்றும், ஆனால் இனிமேல் தன்னால் முடிந்த அளவுக்கு இந்த விடயத்தைச் சர்வதேச மன்னிப்புச்சபையின் கவனத்துக்குக் கொண்டுவர முயற்சி செய்யப்போவதாகக்குறிப்பிட்டார்.

இவர்களைத்தொடர்ந்து நூல் பற்றிய ஆய்வுரைகள் இடம் பெற்றன. முனைவர் சேரன், எழுத்தாளர் த.அகிலன், கணன் சுவாமி , பரதன் நவரத்தினம் மற்றும் ஈழவேந்தன் ஆகியோர் உரையாற்றினர்கள்.

Continue Reading →