– ஆரவாரமில்லாமல், எனில், அழுத்தமாகத் தமிழ் இலக்கியவெளியில் தொடர்ச்சியாக இயங்கிவருபவர் கவிஞர் சொர்ணபாரதி (இயற்பெயர்: முகவை முனியாண்டி) கல்வெட்டு பேசுகிறது என்ற சிற்றிதழைப் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக வெளியிட்டுவருவதன் மூலம் எழுதும் ஆர்வமுள்ள பலருக்குக் களம் அமைத்துத் தருபவர். நுட்பமான கவிஞர். கல்வெட்டு பேசுகிறது இதழ்களில் இடம்பெற்றுள்ள தலையங்கங்கள் இவருடைய சீரிய சமூகப் பிரக்ஞைக்கும், அரசியல் பிரக்ஞைக்கும் சான்று பகர்பவை.
சமீபத்தில் ‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ என்ற தலைப்பிட்ட இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. நல்ல இலக்கிய நூல்களை ஆர்வமாக வெளியிட்டு வரும் தோழர் உதயக்கண்ணனின் அன்னை ராஜேஸ்வரி பதிப்பக (bookudaya@ gmail. com) வெளியீடு இது. சென்னையில் நடந்த இந்த நூலுக்கான அறிமுக விழாக் கூட்டத்தில் கவிஞர்கள் கிருஷாங்கினி, அரங்க மல்லிகா, தமிழ் மணவாளன், நான் மற்றும் பலர் கலந்துகொண்டு நண்பர் சொர்ணபாரதியின் கவிதைவெளி குறித்த எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டோம். – லதா ராமகிருஷ்ணன்
‘எந்திரங்களோடு பயணிப்பவன்’ _ சொர்ணபாரதியின் கவிதைத் தொகுப்பில் இடம்பெறும் என் எண்ணப்பதிவுகள்! – – லதா ராமகிருஷ்ணன் –
யோசித்துப்பார்த்தால் நாம் [நான் அல்லது நீங்கள் அல்லது அவர்(கள்)] எப்போதுமே மற்றவர்களோடு தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அப்படியென்றால், நம்மோடு நாம் பேசிக்கொள்வதேயில்லையா….? கண்டிப்பாக பேசிக்கொண்டுதானிருக்கிறோம். நம் எண்ணம் என்பது உண்மையில் நம்மோடு நாம் நடத்துகின்ற தொடர் உரையாடல் தானே! இன்னும் சொல்லப்போனால், மற்ற எவரோடும் பேசிக்கொண்டிருக்கும் போதுகூட நமக்குள் நாம் நடத்துகின்ற இந்த ‘நம்மோடு நமக்கான’ உரையாடல் (குறுக்கீடுகளோடும், குறுக்கீடுகளின் றியும்) நடந்துகொண்டேதானிருக்கிறது.
இதில் கவிதை என்பது என்ன? கவிதைக்கான தேவை என்ன? இலக்கியப் படைப்புகள் யாவுமே (மேம்போக்கானவை உட்பட) ஒரே சமயத்தில் பல பேரோடு நாம் மேற்கொள்கின்ற உரையாடல்கள்தான். ஒரு கருத்தை, அல்லது உணர்வை ஒரே சமயத்தில் பலருக்கு எடுத்துச்செல்லும் எத்தனம்தான். ஆனால், நல்ல படைப்பு அல்லது நிஜமான படைப்பு என்பதைப் பொறுத்தவரை, எழுதும்போது படைப்பாளி இந்த உரையாடலை முதலில் ஆத்மார்த்தமாக தனக்குத் தானே, தானாகிய தன்னிலிருந்து கிளைபிரிந்திருக்கும் எண்ணிறந் தோரிடம்தான் மேற்கொள்கிறார்.