அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’

மதமாற்றம் - அறிஞர் அ.ந.கந்தசாமி -நாடக விமர்சனம்: "மதமாற்றம்" - அ.ந.கந்தசாமி -ஈழத்துத்தமிழ் நாடக உலகைப்பற்றி எழுதும் எவரும் அறிஞர் அ.நகந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகத்தை மறக்க முடியாது. 1967இல் கொழும்பில் லும்பினி அரங்கில் நான்கு தடவைகள் மேடையேறி மிகுந்த வரவேற்பினைப்பெற்ற நாடகம் மட்டுமல்ல , அதன் கூறு பொருள் காரணமாகப் பலத்த சர்ச்சைக்குமுள்ளாகிய நாடகமும் கூட.

எழுத்தாளர் காவலூர் இராசதுரையின் தயாரிப்பில், நடிகவேள் லடீஸ் வீரமணியின் நெறியாள்கையில் கொழும்பில் அரங்கேறிய நாடகமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘மதமாற்றம்’ நாடகத்தில் ஆனந்தி சூரியப்பிரகாசம், சில்லையூர் செல்வராசன், வீ.எஸ்.இரத்தினம், சங்கரசிகாமணி, சிவபாதசுந்தரம், மஞ்சுளாதேவி, கிறிஸ்டி இரத்தினம், முத்தையா இரத்தினம், சுரேஷ் சுவாமிநாதன், லடீஸ் வீரமணி, மஞ்சுளாதேவி, பத்மநாதன் மற்றும் சங்கர வேலுப்பிள்ளை ஆகியோர் நடித்திருந்தனர்.

சைவப்பழமான சிவப்பிரகாசம் அவர்களின் மகளான மீனாவும், கிறிஸ்தவ இளைஞனான யோசப்பும் காதலிக்கின்றனர். அதற்கு மீனாவின் பெற்றோரிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்புகின்றது. தம் காதலில் உறுதியாக நிற்கின்றார்கள் காதலர்கள். பெற்றோர் அவளுக்கு இந்து சமயத்தைச்சேர்ந்த ஒருவரைத்திருமணம் செய்து வைக்க முயல்கின்றனர். அதனால் மீனா வீட்டை விட்டே ஓடுகின்றாள்.  இதே சமயம் இந்துவான மீனாவை மணம் முடிப்பதற்காக யோசப் பாலச்சந்திரன் என்னும் இந்துவாக மதம் மாறுகின்றான். மீனாவோ அவனை மணம் முடிப்பதற்காக ஷீலா என்னும் கிறிஸ்தவப்பெண்ணாக மதம் மாறுகின்றாள்.  உண்மையில் இந்துவாக மதம் மாறிய யோசப்பைத்தான் மீனாவுக்கு மணம் முடிக்க அவளது பெற்றோர் தீர்மானித்திருந்தனர். அவர்களுக்கும் யோசப்பதான் அவ்விதம் இந்துவாக மதம் மாறியிருந்தான் என்ற விடயம் தெரியாது.

மீண்டும் மதம் மாறிய காதலர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இருவருமே தாம் மாறிய மதங்களைத்தீவிரமாகப்பின்பற்றும் விசுவாசிகளாக மாறி விட்டனர். ஷீலாவாக மாறிவிட்ட மீனா பாலச்சந்திரனாக மாறிவிட்ட யோசப்பை மீண்டும் தான் தற்போது நம்பும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால்தான் அவனுடன் ஒன்று சேர முடியும் என்று உறுதியாக நிற்கின்றாள். அதுபோல் பாலச்சந்திரனாக மாறிய யோசப்பும் ஷீலாவாக மாறிய மீனா  மீண்டும் ஷீலாவாக மாறினால்தான் அவளுடன் சேர முடியுமென்று உறுதியாக நிற்கின்றான். மிகவும் கிண்டலும், ஆழமான கருத்துகளையும் உள்ளடக்கிய உரையாடல்களுன் மேற்படி நாடகத்தின் கதையினை அற்புதமாக வடிவமைத்திருக்கின்றார் அறிஞர் அ.ந.க

Continue Reading →