காதலர்தினக் கதை: கண்களின் வார்த்தை புரியாதோ..?

காதலர் தினச்சிறுகதை: ஆசை வெட்கமறியாதோ..?   குரு அரவிந்தன் அவளுடைய அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அது என்னை ஒரு கணம் நிலை குலைய வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தேன். அவளோ ஒரு கண்ணசைவோடு என்னைக் கடந்து மெதுவாகச் சென்றாள். அதுவே எனக்குள் ஏதோ நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி என்னைக் குளிரவைத்தது. அவள் என்னை அசட்டை செய்தாளா அல்லது என்னை ஏங்க வைத்தாளா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. வீட்டிற்கு வந்து படுக்கைக்குச் சென்ற போதும் அவள் நிiவாகவே இருந்தது. அவளது புன்னகையும், கண்ணசைவும் அடிக்கடி மனக்கண் முன்னே வந்து போனது. அந்தக் கணம்தான் அவள் நினைவாக என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது.

உண்மைதான், அவள் என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. நானுண்டு என்பாடுண்டு என்று தான் இது வரை காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று மட்டும் ஏன் இந்த மயக்கம் என்பது தெரியவில்லை. ஒருவேளை பிறந்த மண்ணின் வாசனை என்னை எதிலும் ஈடுபாடு கொள்ள விடாமல் இதுவரை தடுத்து வைத்திருந்திருக்கலாம். அல்லது எனது பெற்றோர் அடிக்கடி தந்த போதனை என்னைப் பெண்கள் பக்கம் திரும்பாமல் தடுத்திருக்கலாம். ஆனாலும் காலவோட்டத்தில் எனது பதுமவயதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ ஓட்டியாகி விட்டது.

இனியும் இந்த உடம்பும் மனசும் பொறுமையாக இருக்குமா என்பதில் எனக்குள் சந்தேகம் இருந்தது. புலம் பொயர்ந்த இந்த மண்ணின் சூழ்நிலை அடிக்கடி மனதைச் சஞ்சலப் படுத்தியது. மதில் மேல் பூனைபோல இதுவரை தவிப்போடு இருந்த மனசு மறுபக்கம் தாவிக் குதித்துவிடு என்று அடிக்கடி ஆசை காட்டியது. வீட்டிலும், உறவுகளிடமும் ஒரு முகத்தைக் காட்டி, வெளியே மற்றவர்களிடம் மறு முகத்தைக் காட்டி எத்தனை நாட்கள்தான் ஆசைகளை எல்லாம் துறந்தவன் போல, இப்படி நடிப்பது. என் வயதை ஒத்தவர்களைப் பார்க்கும் போது, இயற்கையின் தேடலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.

Continue Reading →

தமிழினி: இலக்கிய வானிலொரு மின்னல்!

தமிழினி ஜெயக்குமாரன்– ‘போர்க்காலம் – தோழிகளின் உரையாடல்’ என்னும் தலைப்பில் அண்மையில் மறைந்த தமிழினி ஜெயக்குமாரனின் கவிதைகள் அடங்கிய தொகுப்பொன்றினை, அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் உதவியுடன், சிவகாமி ஞாபகார்த்த நிறுவகம் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தத்தொகுப்புக்கு வ.ந.கிரிதரன் எழுதிய முன்னுரையினைப் ‘பதிவுகள்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். – பதிவுகள்


தமிழினி விடுதலைப்புலிகளின்  மகளிர் அணியின் அரசியற் பிரிவின் பொறுப்பாளராக விளங்கியவர். அத்துடன் இராணுவத்தாக்குதல்களிலும் பங்கு பற்றியவர். யுத்தத்தின் பின்னர் சிறிது காலம் சிறை வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர். அதன் பின்னர் அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியத்தில் தன் பங்களிப்பினை ஆற்றத்தொடங்கியிருந்தார். தமிழினி எழுதுவதில் திறமை மிக்கவர். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்துக் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக்கொண்டிருந்தார். ‘பதிவுகள்’ இணைய இதழுக்கும் அவர் தன் படைப்புகளை அவ்வப்போது அனுப்புவார். அவர் தன் அனுபவங்களை மையமாக வைத்து இன்னும் பல படைப்புகளைத்தருவார் என்றெண்ணியிருந்த சமயத்தில் அவரது மறைவுச்செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உண்மையில் ஈழத்துத்தமிழ் இலக்கிய வானில் கணப்பொழுதில் ஒளி தந்து மறையும் மின்னலைப்போல் , தன் குறுகிய வாழ்வினுள் ஒளிர்ந்து மறைந்தவர் தமிழினி. இவரது படைப்புகள் குறைவாக இருந்தபோதிலும், அவை நூலுருப்பெற வேண்டியதவசியம். தமிழினியின் கவிதைகளைத்தொகுத்து சிறு தொகுப்பாக வெளிக்கொணர முனைந்திருக்கும் அவரது கணவர் திரு.ஜெயக்குமாரனின் இந்த முயற்சியானது மிகவும் பாராட்டுதற்குரியதும், பயனுள்ளதுமாகும். முக்கியமானதொரு தொகுப்பாக விளங்கப்போகும் தொகுப்பிது என்றும் கூறலாம்.

தமிழினி அண்மைக்காலமாகத்தான் எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தினாரா? உண்மையில் அவர் கடந்த காலத்திலும் பல்வேறு பெயர்களில் அவர் எழுதியிருப்பதை அவரே ஒருமுறை தன் முகநூலில் பகிர்ந்திருக்கின்றார். அவரது ‘மழைக்கால் இரவு’ சிறுகதையின் வரிகளிலிருந்து ‘யுத்தம்’ என்றொரு கவிதையினை உருவாக்கிப் ‘பதிவுகள்’ இணைய இதழில் பிரசுரித்திருந்தேன். அது பற்றித் தன் முகநூலில் கருத்துத்தெரிவித்திருந்தபோது தன் கடந்த காலத்து இலக்கிய முயற்சிகளைப்பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

Continue Reading →