ஆய்வு: சங்க காலத்தில் புலம் பெயர்வு

புலம் பெயரும் மானுட சமுதாயம் ...- பா.சிவக்குமார்,    முனைவர் பட்ட ஆய்வாளர்,  தமிழ்த்துறை,  பாரதியார் பல்கலைக்கழகம் கோவை-46 -மக்கள் தொன்று தொட்டு தங்கள் வசித்து வந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லுதல் புலம் பெயர்வு எனப்படும். இயற்கை பேரிடர்களாலோ, மனிதனால் தோற்றுவிக்கப்படுகின்ற போர் முதலான செயற்கைப் பேரிடர்களாலோ, தங்களுக்கு (மக்களுக்கு) வாழக்கூடிய சூழல் நிலவாத பொழுதோ, உயிர்க்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் பொழுதோ, மக்கள் தங்கள் வசித்த புலங்களை விட்டு வேறு இடத்திற்குச் செல்கின்றனர். தற்காலத்தில் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் சிங்களவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைப்பெற்ற போரின்போது பல இலட்சம் தமிழ் மக்கள் தங்களின் நாட்டை விட்டு பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்துள்ளனர். இவை போன்ற புலம் பெயர்வு சங்ககாலத் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதை வெளிக்கொணர்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. சங்க காலத்தில் புலம் பெயர்வு சங்ககால  மக்களின் புலம் பெயர்வானது, இயற்கைப் பேரிடர், ஆறலைக் கள்வரால் உயிர்க்கும் உடைமைக்கும் ஏற்பட்ட பாதிப்பு, அரசாதிக்கப் போரால் ஏற்பட்ட அழிவுகள் போன்றவற்றின் போது மேற்கொள்ளப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.

இயற்கைப் பேரிடரால்  புலம் பெயர்ந்த மக்கள்
நிலம், நெருப்பு, காற்று, நீர், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் தன் நிலையிலிருந்து திரியும் பொழுது இயற்கைப் பேரிடர் ஏற்படுகின்றது. தொடர்ந்து பெய்யும் பெருமழையால் உருவான வெள்ளத்தினால் தம் கால்நடைகள் மற்றும் தமக்கு ஏற்படும் துன்பத்தினைக் கண்டு அஞ்சிய கோவலர்கள் தங்கள் பழகிய நிலத்தை விட்டு, வேறிடம் நோக்கிப் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் பொழுது தங்கள் நிலத்தை விட்டுப் பிரிய மனமின்றி உள்ளம் கலங்கியதை,

“புலம்பெயர் புலம்பொடு கலங்கி”                                             (நெடுநல். 5)

என்ற நெடுநல்வாடை வரி புலப்படுத்துகிறது. இவ்வாறு இயற்கைப் பேரிடர் ஏற்படும் சூழல்களில் சங்ககால மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். ஆறலைக் கள்வரால் ஏற்பட்ட அழிவுக்கு அஞ்சி புலம் பெயர்ந்த மக்கள் ஆறலைக் கள்வர்கள் வழிப்போவாரைக் கொன்று பொருள் கொள்வதோடு மட்டுமன்றி ஆயர் புலத்திற்குச் சென்று ஆநிரைகளையும் களவாடிச் சென்றுள்ளனர். தீக்கொள்ளியையும் நீண்டு திரண்ட அம்புகளையும் கையிற் கொண்டவராய், இரவு நேரத்தில் ஆயர்களின் ஊரினுள் புகுந்து, அவர்களைத் தாக்கி அழித்து, அங்கிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து வருகின்றபொழுது, எழுந்த ஆரவார ஒலி கொடிய சுரவழி எங்கும் மாறிமாறி ஒலித்தது என்பதனை, அகம். 239ஆம் பாடல் வழி அறியமுடிகிறது. இரவில் யாரும் அறியாமல் ஆநிரை கவர்ந்து வருகின்றபோது, அதை அறிந்த ஆயர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, ஆரவாரத்துடன் அக்கள்வரின் பின்னே ஓடிச்சென்று பசுக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை,

Continue Reading →