– அண்மையில் மறைந்த ‘சின்ன மாமியே! உன் சின்ன மகளெங்கே?’ பாடலை எழுதிய எம்.எஸ்.கமலநாதன் அவர்கள் எழுதிய கட்டுரையிது. இதில் அவர் தான் ‘சின்ன மாமியே!’ பாடலை எழுதி, மெட்டமைத்த விபரங்களைப்பதிவு செய்திருக்கின்றார். இதனைப் பதிவுகள் இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள். அவருக்கு எம் நன்றி. – பதிவுகள் –
வதிரியூரில் பல்வேறு குடும்பக் குழுமங்கள் மத்தியில் யாவத்தை என்ற நீண்டகால வர்த்தகம்,கல்விப் பாரம்பத்திற்குரிய குடும்பங்களில் சீனித்தம்பி தங்கரத்தினம் தம்பதியினருக்கு மூத்த மகனாக 1939 ஆம் ஆண்டு மாசி 26 ஆம் திகதி பிறந்தேன். யாவத்தையில் வசித்த கூட்டுக்குடும்பங்களின் மத்தியில் நான் மூத்தவன். ஆண் பிள்ளை என்பதனாலும் என்னிடம் பற்றுப் பாசம் என அபிரிமித்மாகக் கிடைக்கப் பெற்ற எனக்கு தேவையான சகல வசதிவாய்ப்புக்களும் ஏற்படுத்தப் பட்டிருந்தன.
கல்விப் பருவத்தையடைந்த நான் யா/தேவரையாளி இந்துவில் (அப்போதைய தேவரையாளிச் சைவ கலைஞானசபைப் பாடசாலை) ஆரம்பக்கல்வியினைத் தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கற்றுப் பின் எனது தகப்பனார் தென்னிலங்கை மாத்தறையில் தொழில் நிமிர்த்தம் இருந்தமையால் தென்மாகாணம் மாத்தறை சென்தோமஸ் கல்லூரியில் (1946-1948) கல்விதனைத் தொடர்ந்தேன்.அதனையடுத்து யா/சென்யோன்ஸ் கல்லூரியில் 1949-1952 வரை கல்லூரி விடுதி (BOARDING) யில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்தேன். இக்காலப்பகுதியில்தான் அங்கு பதினொரு வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணியில் ஒருவராக இணைந்து விளையாடினேன். இதுதான் எனது உதைபந்தாட்ட முதல் பிரவேசமுமாகும்.