– ஈழத்தமிழ் இலக்கியத்தின் முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த எழுத்தாளர்களில் ஒருவருமான அறிஞர் அ.ந.கந்தசாமியின் நினைவு தினம் பெப்ருவரி 14. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் சகல துறைகளிலும் சிறந்து விளங்கியவர் அ.ந.க என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அறிஞர் அ.ந.கந்தசாமி. அவரைப்பற்றி ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஆளுமைகள் சிலர் எழுதிய கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றினைத் தொகுத்து , அவர் நினைவாக வழங்குகின்றோம். – பதிவுகள் –
சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்~
– அந்தனி ஜீவா –
– ‘சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்’ என்னும் அறிஞர் அ.ந.கந்தசாமி பற்றிய அந்தனி ஜீவாவின் இக்கட்டுரைத் தொடர் ஈழத்தில் தினகரன் வாரமஞ்சரியில் 12-02-1984 அன்றிலிருந்து தொடராக வெளிவந்த கட்டுரைத் தொடராகும். ‘பதிவுகள்’ இணைய இதழிலும் மே 2003இலிருந்து அக்டோபர் 2003 வரை தொடராக மீள்பிரசுரம் செய்யப்பட்டது. தற்போது அ.ந.க.வின் நினைவு தினத்தினை ஒட்டி மீள்பிரசுரமாகின்றது. பெப்ருவரி 14, 1968 அவர் அமரரான நாள். – பதிவுகள் –
அறிஞர் அ.ந.கந்தசாமிஅந்தனி ஜீவா “வாலிபத்தின் வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகரக் கல்லூரிக்கு வந்து விட்டு, மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது என் கண்கள் வயல் வெளிகளையும், தூரத்துத் தொடு வானத்தையும் உற்று நோக்கும்….உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே என் சிந்தனையால் அளந்து விட வேண்டுமென்று பேராசை கொண்ட காலம்…..”
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்தாளரும், சிந்தனையாளரும், முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் தன் இளமைக்கால நினைவலைகளை இவ்வாறு எழுதியுள்ளார். எழுத்தாளர்களின் இளமைக்கால நினைவலைகள் இவ்வாறாகத்தானிருக்கும். அமரரான அ.ந.க.வின் எழுத்துகளை மீண்டும் படிக்கும் பொழுது அந்தத் துள்ளும் தமிழும், துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டும் படிக்கத் தூண்டுகின்றன.