அவளுடைய அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அது என்னை ஒரு கணம் நிலை குலைய வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் என்னை மறந்து அவளைப் பார்த்தேன். அவளோ ஒரு கண்ணசைவோடு என்னைக் கடந்து மெதுவாகச் சென்றாள். அதுவே எனக்குள் ஏதோ நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி என்னைக் குளிரவைத்தது. அவள் என்னை அசட்டை செய்தாளா அல்லது என்னை ஏங்க வைத்தாளா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை. வீட்டிற்கு வந்து படுக்கைக்குச் சென்ற போதும் அவள் நிiவாகவே இருந்தது. அவளது புன்னகையும், கண்ணசைவும் அடிக்கடி மனக்கண் முன்னே வந்து போனது. அந்தக் கணம்தான் அவள் நினைவாக என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது.
உண்மைதான், அவள் என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது. நானுண்டு என்பாடுண்டு என்று தான் இது வரை காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று மட்டும் ஏன் இந்த மயக்கம் என்பது தெரியவில்லை. ஒருவேளை பிறந்த மண்ணின் வாசனை என்னை எதிலும் ஈடுபாடு கொள்ள விடாமல் இதுவரை தடுத்து வைத்திருந்திருக்கலாம். அல்லது எனது பெற்றோர் அடிக்கடி தந்த போதனை என்னைப் பெண்கள் பக்கம் திரும்பாமல் தடுத்திருக்கலாம். ஆனாலும் காலவோட்டத்தில் எனது பதுமவயதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ ஓட்டியாகி விட்டது.
இனியும் இந்த உடம்பும் மனசும் பொறுமையாக இருக்குமா என்பதில் எனக்குள் சந்தேகம் இருந்தது. புலம் பொயர்ந்த இந்த மண்ணின் சூழ்நிலை அடிக்கடி மனதைச் சஞ்சலப் படுத்தியது. மதில் மேல் பூனைபோல இதுவரை தவிப்போடு இருந்த மனசு மறுபக்கம் தாவிக் குதித்துவிடு என்று அடிக்கடி ஆசை காட்டியது. வீட்டிலும், உறவுகளிடமும் ஒரு முகத்தைக் காட்டி, வெளியே மற்றவர்களிடம் மறு முகத்தைக் காட்டி எத்தனை நாட்கள்தான் ஆசைகளை எல்லாம் துறந்தவன் போல, இப்படி நடிப்பது. என் வயதை ஒத்தவர்களைப் பார்க்கும் போது, இயற்கையின் தேடலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது.