கனடாவிலிருந்து வெளிவரும் ‘தமிழர் தகவல்’ இதழின் பெப்ருவரி (2016) மாத இதழ் அதன் இருபத்து ஐந்தாவது ஆண்டு மலராக வெளிவந்துள்ளது. இதனை வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இவ்விதம் ஈழத்துப் பத்திரிகை உலகில் நன்கு அறியப்பட்ட பத்திரிகையாளரான எஸ்.திருச்செல்வத்தை ஆசிரியராகக்கொண்டு அவரால் வெளியிடப்படுவது.
மாதா மாதம் வெளியாகும் இதழ்கள் கனடாத் தமிழருக்கு, புதிய குடிவரவாளர்களுக்குப்பயனுள்ள விபரங்களை, ஆக்கங்களைத்தாங்கி வெளிவருவன. அவற்றை இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூற முடியாது.. ஆனால் இவ்விதழின் ஆண்டு மலர்கள் சிலவற்றை வாசித்திருக்கின்றேன். அவை நிச்சயம் இலக்கியச்சிறப்பு மிக்கவை என்று கூறலாம். அந்த வகையில் இலக்கியச்சிறப்பு மிக்க மலராக இம்மாத இதழும் வெளிவந்திருப்பதை அவதானிக்க முடிகிறது.
இம்மலர் கனடாத்தமிழர் வாழ்வின் பல்வேறு பரிமாணங்களையும் வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியிருக்கும் அதே சமயம், உலகின் பல்வேறு பாகங்களிலும் வாழும் தமிழர் பற்றிய விபரங்களையும் தாங்கி வெளிவந்திருக்கின்றது. அவ்வகையில் புலம் பெயர் தமிழர் சிறப்பு மலராகவும் இவ்விதழைக்கூறலாம். மலரின் கலை, இலக்கியச்சிறப்பு மிக்க கட்டுரைகளாகப்பின்வரும் கட்டுரைகளைக்குறிப்பிடுவேன்.
1. கனடாவில் தமிழ் ஒலிபரப்பு கால் நூற்றாண்டு வரலாறு – பொன்னையா விவேகானந்தன். கனடாவில் தமிழ் ஒலிபரப்பு வளர்ந்த கதையினை விரிவாக விபரிக்கும் கட்டுரை இது.
2. திரை விலகுகிறது.. மேடை நாடகங்கள் – ப.ஶ்ரீஸ்கந்தன். இக்கட்டுரையும் கனடாத் தமிழரின் நாடக வரலாற்றை விரிவாகப்பேசுகிறது; ஆவணப்படுத்துகிறது.
3. இது படமல்ல. புலம்பெயர் திரைப்பட கவழிகை. – ரதன். திரைப்படங்களைப்பற்றிய பொதுவான கட்டுரை. இறுதியில் கனடாவில் வெளிவந்த திரைப்படங்களைப்பட்டியலிடுகிறது. இதற்குப்பதிலாக கட்டுரை முழுவதுமே கனடாவில் வெளியான தமிழ்த்திரைப்படங்களைப்பற்றியதாக இருந்திருக்கும் பட்சத்தில், கனடாத்தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய நல்லதோர் ஆவணக்கட்டுரையாக விளங்கியிருக்கும். கவழிகை என்றால் திரைச்சீலை. ‘புலம்பெயர் திரைப்பட கவழிகை’ என்ற தலைப்பு ‘புலம்பெயர் திரைப்படத்திரைச்சீலை’ என்ற பொருளினைத்தருகின்றது. அது பற்றிய குழப்பகரமான சிந்தனையைத்தருகிறது. இன்னும் எளிமையாகத் தலைப்பினை வைத்திருக்கலாமென்று தோன்றுகிறது.