சிறுகதை: கார் ஓட்டம்

-பேராசிரியர் கோபன் மகாதேவா -‘தம்பி, இது நல்ல விறுத்தம். பாக்கிறதுக்குத் திறமாய் இருக்குது.  இப்பிடி ஒண்டை இந்தப் பக்கத்திலை, நானெண்டால் ஒரு நாளும் காணேல்லை.  இதுக்கு என்ன பேர், தம்பி?’

‘இதை வொக்சோல் வெலொக்ஸ் எண்டு சொல்லறது, பெரியையா!’

‘நல்ல விசாலமான கார் தான், ஒரு சப்பறம் மாதிரி.  கண்ணைப் பறிச்சுக் கொண்டு மினுங்குது. அதோடை, கதவைத் திறந்த உடனை சடார் எண்டு மூக்குக்கை வந்து அடிக்கிற இந்த வாசனையையும் நான் வேறை ஒரு வண்டிலிலும் காணேல்லைத் தம்பி . . .  அங்கை! ஏதோ தூசி மாதிரி இருக்குது. துடையும்!’

‘ஓம் பெரியையா. இதைப் புதிசாய்த் தானே வாங்கின நான்.  அது தான் பளிச்செண்டு மினுங்குது, நல்லாய் மணக்குது.’

‘இங்கையும் வைச்சு ஓடுறாங்கள், இரண்டு கசவாரங்கள். முந்தி உனக்கு கார் பழக்க மறுத்த மருதங்குளத்துச் சின்னராசன்ரை ஒசுட்டின் ஏ-போட்டியும், கண்சிமிட்டிக் கதிரவேலன்ரை படான் போட்டும், உன்ரை இந்த வொசுக்கோல் காரிட்டைப் பிச்சை எடுக்க வேணும் தம்பி.  உன்ரை இந்தக் கார் எந்த ஊரிலை தம்பி செய்தது?’

‘இதுகும் அவையின்ரை போட்டு, ஏ-போட்டி, மொறிசைப் போலை இங்கிலாந்திலை தான், பெரியையா.’

‘அதுதானே நானும் பாத்தன். இங்கிலீசக் காறர், அவங்கள் வெள்ளையங்கள் எல்லே. எப்பிடியும் கெட்டிக்காறர் தான்!’

‘ஓம் பெரியையா, அவையிட்டை நாங்கள் படிக்கிறதுக்கு எத்தினையோ விசயம் இருக்குது தான். எண்டாலும் நாங்களும் முன்னேறி வாறம் தானே?  நாங்களும் இப்ப இப்ப நல்ல வடிவான கட்டிடங்கள், பாலங்கள், பெரிய தார் றோட்டுகள் எல்லாம், கொழும்பிலையும் மற்றஇடங்களிலையும் கட்டுறம் தானே?’

‘அது சரி ராசா.  அது தானே உன்னைக் கோபாலுத் தம்பியும் நானும் எஞ்சினியருக்குப் படிக்க வைச்ச நாங்கள், உன்ரை கொம்மா செத்தாப்போலை. உனக்குத் தெரியுமோ தெரியாது, கோபாலு வருத்தமாய் யாழ்ப்பாணம் திரும்பி வர முன்னம், குருநாகல், குளியாப்பிட்டியா, தண்டகமுவவிலை எட்டுக் கடையள் எல்லாம் வித்துப் போட்டுக் கொந்துறாத்து வேலை செய்ததெல்லே, புத்தளம், சிலாபம் பகுதியிலை. அப்ப கோபாலு சந்திச்ச ஆகப் பெரிய உத்தியோகத்தர், ஒரு எஞ்சினியர் தான். அது தான், அவரைப் போலை உன்iயும் படிப்பிக்க வேணுமெண்டு . . . . .   இப்ப சரி. தூசி போட்டுது. ‘

Continue Reading →