அஞ்சலி: வாழ்வின் துன்பியல் அரங்காற்றுகையில் கானல் திரைக்குப்பின்னால் வாழ்ந்த எழுத்தாளர் கே. விஜயன் படைப்புகளின் மூலப்பிரதியை தொலைத்துவிட்டுத் தேடாமல் நினைவில் தேங்கியிருந்ததை மீண்டும் பதிவுசெய்தவர்

அமரர் கே.விஜயன்அடுத்தடுத்து  எம்மிடமிருந்து  விடைபெறுபவர்களின்   வரிசையில் இலக்கிய   நண்பர்  கே. விஜயனும்  அண்மையில்   இணைந்துகொண்டு எம்மிடமிருந்து  அகன்றுவிட்டார். இவருடைய   பெயரில்  சென்னையில்  ஒரு  திரைப்பட  இயக்குநர் இருந்தார்.   ஜெயகாந்தனின்   நண்பர்.    அதனால்  ஈழத்து  எழுத்தாளர் விஜயனை   நான்   காணும்   சந்தர்ப்பங்களில்  ”  எப்படி  இயக்குநர்  சார்?” என்று   வேடிக்கையாக  அழைப்பதுண்டு. கே. விஜயன்  என்ற  பெயர்   ஈழத்து  இலக்கிய  உலகிலும் தமிழ்ப்பத்திரிகைச்சூழலிலும்   நன்கு  பிரசித்தி  பெற்றிருந்தது. சிறுகதை,  தொடர்கதை,   நாவல்,  கட்டுரை,  விமர்சனம்,  பத்தி எழுத்துக்கள்,   கலை  இலக்கிய  நிகழ்ச்சிகள்  பற்றிய விவரணச் சித்திரம்   என  நிறைய  எழுதிக்குவித்தவர்தான்  விஜயன்.   அத்துடன் வீரகேசரி,   சுடரொளி  ஆகிய  பத்திரிகைகளிலும்  பணியாற்றியவர். நான்   எழுதத்தொடங்கிய  காலத்திற்கு  முன்னே   எழுதியவர். இவருடைய   தொடர்கதை  ஒன்று  மித்திரன்  நாளிதழில்  வெளியான சமயத்தில் அதனை (Proof Reading)  ஒப்பு நோக்கியிருக்கின்றேன். அச்சமயத்தில்   அவர்  வெள்ளவத்தையில்   ஒரு ஆடைத்தொழிற்சாலையில்  பணியிலிருந்தார்.

இலங்கையில்  தேசிய  இலக்கியம்,   மண்வாசனை,  பிரதேச  மொழி வழக்கு   முதலான  சொற்பதங்கள்  பேசுபொருளாக  இருந்த  அக்கால கட்டத்தில்   விஜயன்,  கொழும்பு  வாழ்  மக்களின்  பேச்சுத்தமிழில் தமது   கதைகளை   எழுதியவர்.

1977 – 1987   காலப்பகுதியில்   கொழும்பிலிருந்து  வெளியான தினகரன்,   வீரகேசரி,  ( தினபதி ) சிந்தாமணி  ஆகிய   பத்திரிகைகளின் வாரப்பதிப்புகளில்   இலக்கிய  பத்தி  எழுத்துக்கள்  பரவலாக அறிமுகமாகியிருந்தன.    சிந்தாமணியில்  அதன்  ஆசிரியர்  எஸ்.டி. சிவநாயகம்    இலக்கிய  பீடம்   என்ற  தலைப்பில்  பத்தி  எழுதினார். தினகரனில்    எஸ். திருச்செல்வம் –  எஸ்.தி. பக்கம்  என்ற   தலைப்பில் எழுதினார். வீரகேசரி   வாரவெளியீட்டில்  இலக்கியப்பலகணி   என்ற  தலைப்பில் ரஸஞானி  என்ற  புனைபெயரில்  நான்  எழுதிவந்தேன். அதற்கெல்லாம்   முன்னர்,  எச். எம். பி. மொஹிதீன்,  தினகரன் வாரமஞ்சரியில்  அபியுக்தன்,   அறிஞர்கோன்   என்ற   தலைப்புகளில் எழுதினார்.  அவர்  இலங்கை  வானொலியில்  நிகழ்ந்த  ஊழல்கள் பற்றியெல்லாம்  அதில்  அம்பலப்படுத்தினார்.   அத்துடன்  சில அரசியல்  வாதிகளையும்  சீண்டினார்.   அதனால்  வெகுண்ட  அன்றைய   கல்வி   அமைச்சர்  அல்ஹாஜ்  பதியுதீன்  முகம்மத் லேக்ஹவுஸ்   மேலிடத்திற்குச்சொல்லி , மொஹிதீனின்  அந்த பத்திஎழுத்துக்களை    தடைசெய்தார். பின்னாளில்  மொஹிதீன்    அபியுக்தன்   என்ற    பெயரிலேயே    ஒரு மாத   இதழையும்   சிறிதுகாலம்     வீம்புக்கு    நடத்தி    ஓய்ந்துபோனார்.

எஸ்.தி. , தினகரனில்   எழுதிய  சில  பத்தி  எழுத்துக்களினால்  அலை யேசுராசா,   புதுவை  இரத்தினதுரை  முதலானோரும்  தமிழ்க்கதைஞர் வட்டத்தினரும்   கோபமுற்ற   செய்திகளும்  உள்ளன. மொஹிதீன், அறிஞர்கோன்   எழுதியபொழுது,   வித்துவான்   ரஃமான் எரிச்சலுற்று  “அது  என்ன ? அறிஞர்கள்  சூப்பிய  ஐஸ்கிறீம் கோனா?”  என்று   எள்ளிநகையாடினார்.

எனது   இலக்கியப் பலகணியில்  முடிந்தவரையில்  விவகாரத்துக்குரிய  சர்ச்சைகளை   நான்  உருவாக்காமல் இருந்தமைக்கு   எனது  இயல்புகள்  மட்டுமல்ல,  எனக்கு  வீரகேசரி ஆசிரியர்கள்    ஆ. சிவநேசச்செல்வனும்,    பொன். ராஜகோபாலும் இட்டிருந்த   கடிவாளமும்   ஒரு  காரணம்தான். அதனால்  எனது  பத்தியில்  ” ரஸமும்  இல்லை.   ஞானமும்  இல்லை ”  எனச்சொன்னவர்களும்  வாரம்தோறும்  அந்தப்பத்திகளை படிக்கத்தவறவில்லை.

Continue Reading →