ஆய்வு: தமிழ்நாட்டில் அய்யனார் வழிபாடு

ஆய்வுகட்டுரை வாசிப்போமா?தமிழ் இலக்கியங்களில் இறைவழிபாடு முறையில் நோக்கிடும்போது தமிழகமக்களின் பழமையும், ஆய்வுக்குட்பட்ட பல செய்திகளும் புலப்படுகின்றன. வழிபாடு என்பது பின்பற்றுதல் என்ற பொருளினைத் தரும். பலதரப்பட்ட கடவுள்களைச் சைவசமயத்தினர் வணங்கி வருகின்றனர். இறைவனை நேரில் காண இயலாததாகி இருப்பினும் இறைவனுக்குப் படையல் இடுவதும், தன்னையும், தமது குடும்பத்தாரையும் காக்கும் சக்தியாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக அமையப்பெற்ற அய்யனார் வழிபாடு குறித்து இவ்வாய்வுக்கட்டுரை அமையப்பெறுகிறது.

அய்யனார் விளக்கம்
அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்துவருகின்றனர். அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆண்பால் ஈறு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதியாகும். பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு  வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவரைப் பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்துச் சுட்டுச் செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.(நன்றி-வலைத்தளம்)

சைவமும்,வைணவமும் ஒருங்கிணைந்ததுபோல அய்யனாரின் பிறப்பு அமைந்துள்ளது. அய்யப்பனே அய்யனார் எனவும், சாஸ்தா எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது.   காப்பியச் சிலம்பில் சாஸ்தாவைப் பற்றிப் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.

Continue Reading →

இந்த மண்ணின் கதைகள்: வெளிவரவுள்ள குந்தவையின் “ஆறாத காயங்கள்” சிறுகதைத் தொகுப்புக் குறித்து

இந்த மண்ணின் கதைகள்: வெளிவரவுள்ள குந்தவையின் “ஆறாத காயங்கள்” சிறுகதைத் தொகுப்புக் குறித்து  சு. குணேஸ்வரன் “கதை எழுதவேண்டும் என்ற உந்துதலை புறச்சூழலும் நாட்டின் நடப்பு நிகழ்வுகளுமே ஏற்படுத்துகின்றன. பேரினவாதம் தலைதூக்கியாடும் எம் நாட்டில் மனத்தைச் சலனப்படுத்தி சஞ்சலப்படுத்தும் நிகழ்வுகள் பல. நான் அனேகமாக அவற்றை வைத்தே கதைகள் எழுத விரும்புகிறேன்.” என்று ஊடறு நேர்காணலில் பதிவுசெய்துள்ளார். குந்தவையின் அதிகமாக கதைகள் சாதாரண மனிதர்களைப் பற்றிய கதைகள். அவர்களின் பாடுகளைக் கூறும் கதைகள். போரின் பின்னர் சிதைந்துபோன மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் கூறும் கதைகள்.

‘யோகம் இருக்கிறது’ என்ற முதற்தொகுப்பு வெளிவந்து 13 வருடங்களுக்குப் பின்னர் இத்தொகுதி வெளிவருகிறது. இவற்றில் சில கதைகள் தவிர, அதிகமானவை இறுதியுத்தத்திற்குப் பின்னர் எழுதப்பட்டவை. யுத்தப் பிரதேசத்திற்கு வெளியே வாழ்ந்தவர் குந்தவை. சகமனிதர்களின் சந்திப்பின் ஊடாகவும் வாசிப்பின் ஊடாகப் பெற்றுக்கொண்ட அனுபவங்கள் ஊடாகவும் இக்கதைகளைப் படைத்திருக்கிறார்.  காலிழப்பும் பின்பும், இரும்பிடைநீர், நீட்சி, பாதுகை ஆகியவை தனித்தனிக் கதைகளாக இருந்தாலும் அக்கதைகளில் ஒரு மையச்சரடு ஓடிக்கொண்டிருப்பதை வாசகர் அறிவர். யுத்தத்தில் தன் கால்களை இழந்துபோனவன் தன் பிளாஸ்ரிக் கால்களைத் தடவிக்கொண்டு கண்முன்னே சுருண்டுபோன உறவுகளைக் கண்களில் தேக்கிக் கொண்டு எதிர்காலம் பற்றிய திசையிழந்து பேதலிக்கும் கதையும்; தன் தந்தையின் உடல் கண்முன்னாலேயே சிதறியதைக் கண்ட பிள்ளையில் மனதில் ஏற்பட்ட மாறாத வடுவும்; காணாமற்போன மகனின் நினைவுகளோடு அவன் காலில் அணிந்திருந்த சிலிப்பரை தன் சேலைத் தலைப்பில் சுற்றிக்கொண்டு உறங்கும் தாய்மையின் அன்பும், நிச்சயம் ஆறாத காயங்களாகவே உள்ளன.

மறுபுறம் இருக்கும் ஏனைய கதைகள் போரால் மட்டுமல்ல, வறுமையாலும் தனிமையாலும் விரக்தியாலும்  அதிகாரத்தாலும் உள்ளும் புறமும் அமுங்கிப்போன மனங்களைக்காட்டும் கதைகள். ‘ஊழியமும் ஊதியமும்’ மிக நேர்த்தியான எழுதப்பட்ட மாதிரிச் சிறுகதையாகவே இளைய சமூகத்திற்கு அறிமுகப்படுத்தக்கூடியது. குடும்பத்தில் ஒரு பெண் எதிர்கொள்ளும் உடல் – உள வாதை இக்கதையிலும் ‘நீட்சி’யிலும் வருகிறது. மேலும் மாடுகளைவிரட்டும் மனிதனை, மனிதர்களை விரட்டும் அதிகாரத்தின் குறியீடாகக் கொண்டு எழுதப்பட்ட கதையும் குறிப்பித்தக்கது. நொந்துபோன சமூகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி வளத்தைச் சூறையாடிச் செல்லும் மனிதர்களின் கதையாக ‘இரும்பிடைநீர்’ அமைகிறது. ஒட்டுமொத்தமாக எல்லாக்கதைகளும் இழப்பும் வேதனையும் ரணமும் நிறைந்தவை. கண்முன்னே கடந்து செல்லும் காலங்கள் பற்றியவை. குந்தவையின் கதைகளில் காணப்படும் தனித்துவமான பண்புகளில் முதன்மையானது சம்பவ விபரிப்பும் கதை சொல்லும் நேர்த்தியும். இது குந்தவைக்கே உரிய தனிப்பாணி. ஈழத்து இலக்கியப் பரப்பில் மிகக்கூடிய கவனத்தைப் பெற்ற பெயர்வு, வல்லைவெளி முதலான கதைகளிலும் இந்த அம்சம் அழகாக அமைந்திருந்தது.

Continue Reading →