மீள்பிரசுரம்: கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி?:

ஸ்டீபன் ஹாக்கிங்ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மகத்தான கேள்விகளைக் கேட்கவும் பிரபஞ்சத்தைத் துருவி ஆராயவும், சுதந்திரம் கொண்டவன்.

ஒருகாலத்தில், காலப் பயணம் பற்றிப் பேசுவதே விஞ்ஞான நிந்தனையாகக் கருதப்பட்டது. ஒரு பித்துக்குள்ளியாக முத்திரை குத்தப்படலாம் என்ற பயத்தில், நான் இதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினங்களில், நான் அப்படியொன்றும் எச்சரிக்கையுடன் இருப்பதில்லை. உண்மையில், ஸடோன்ஹெஞ்ச் கட்டிய ஜனங்களைப் போன்றவனாய் நான் இருக்கிறேன். காலம் பற்றிய சிந்தனை என்னை ஆட்டிப்படைக்கிறது எனலாம். என்னிடம் ஒரு கால எந்திரம் இருந்தால், மர்லின் மன்றோவை அவளது உச்சநிலைக் காலத்தில் போய் சந்திப்பேன். அல்லது ஆகாயவெளியை நோக்கி தனது தொலைநோக்கியைக் கலிலியோ திருப்பிய சமயத்தில் அங்கே போய்ச் சேர்வேன். பிரபஞ்சத் தோற்றத்தின் கதை எப்படி முடிவுக்கு வருகிறது என்பதைக் கண்டடைய நமது பிரபஞ்சத்தின் இறுதிக்குப் பயணம் போவதற்கும், ஒருவேளை நான் முனையலாம்.

இது எவ்விதத்தில் சாத்தியம் என்று பார்க்க, இயற்பியல்காரர்கள் காலத்தைக் கவனிப்பதுபோல், நாம் பார்ப்பது அவசியமாகிறது – நான்காவது பரிமாணத்தில். அது அப்படியொன்றும் கடினமானதல்ல. எல்லா தூலப் பொருள்களுக்கும் – எனது நாற்காலியில் அமர்ந்தபடி இருக்கும் எனக்கும்கூட – பரிமாணங்கள் இருக்கின்றன என்பது கவனமுள்ள எந்தவொரு பள்ளிப்பிள்ளைக்கும் தெரிந்ததே. எல்லாப்பொருள்களுக்கும் அகலம், உயரம், நீளம் உண்டு. ஆனால், இன்னொருவகை நீளம் இருக்கிறது – காலத்தின் நீளம். மனிதன் ஒருவன் 80 ஆண்டுகள் உயிர் பிழைத்திருக்கலாம். எடுத்துக்காட்டாக, ஸ்டோன்கெஞ்சில் உள்ள கற்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் குழுமி நின்று கொண்டிருக்க முடியும். சூரிய மண்டலமோ கோடிக்கணக்கான ஆண்டுகள் நிலைத்திருக்கலாம். அனைத்தும், காலத்தின் நீளத்தையும் அதேபோல் வெளியின் நீளத்தையும் பெற்றிருக்கின்றன. காலத்தினுள் பயணித்தல் என்பதன் அர்த்தம், இந்த நான்காவது பரிமாணத்தினூடே பயணிப்பதுதான்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 169: நாவல் ‘குடிவரவாளன்’ பற்றிய வாசிப்பனுவமும், புலம் பெயர் அனுபவங்களும்…

'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நேற்று நண்பர் எல்லாளன் தொலைபேசியில் அழைத்தார். அழைத்தவர் வழமைக்கு மாறாக நீண்ட நேரம் உரையாடினார். எதனைப்பற்றியென்று நினைக்கின்றீர்கள்? எல்லாம் அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்த என் நாவலான ‘குடிவரவாளன்’ பற்றித்தான்.
நாவலை வாசித்தபொழுது தன் நெஞ்சினைத்தொட்டு விட்டதாகக் கூறினார். தன் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் அசை போட வைத்துவிட்டதென்றார். இந்த நாவல் புலம் பெயர்ந்த தமிழர்களில் முதலாம் தலைமுறையினர் பலரும் அனுபவங்களை விபரிப்பதால் பலருக்குத் தம் வாழ்வின் அனுபவங்களை நிச்சயமாக நினைவூட்டியிருக்கும்.

மேலும் தனது அனுபவங்கள் பலவற்றை விபரித்தார். ‘காலம்’ செல்வம் ‘தாய் வீடு’ பத்திரிகையில் இது போன்று தன் அனுபவங்களை எழுதியிருக்கின்றார் என்று நினைவு கூர்ந்தார். ஆனால் அவரது அபுனைவு. இது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவு. அதுதான் வித்தியாசம்.

அவர் அப்பொழுது பகிர்ந்துகொண்ட அவரது அனுபவங்களில் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஒருமுறை அவர் வன்கூவரில் வேலை தேடி மோட்டேல்கள் (Motel) ஏறி இறங்கியிருக்கின்றார். சென்ற இடங்களிலெல்லாம் மோட்டேல்களில் Vacancy என்ற அறிவிப்பு இருப்பதைக்கண்டு அவ்விதம் அறிவிப்புக்காணப்படும் இடங்களிலெல்லாம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார். ஆனால் ஓரிடத்திலும் வேலை கிடைக்கவில்லை. இவருக்கு ஒரே ஆச்சரியம் : ‘என்ன இது எல்லா இடத்திலும் ‘வேகன்ஸி’யென்று அறிவித்திருக்கின்றார்களே. ஆனால் ஓரிடத்திலும் வேலை இல்லையென்று கூறுகின்றார்களே’ என்று. எப்பொழுதுமே பத்திரிகைகளில் வேலைக்கான ‘வேகன்ஸி’ விளம்பரங்களைப்பார்த்துப்பார்த்து ‘வேகன்ஸி’ என்றதும் மனது தவறுதலாக மோட்டேல்களில் அறைகளுக்கான ‘வேகன்ஸி’ அறிவிப்பை வேலைக்கானதாக எண்ணிவிட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் புகலிடத்தமிழர்களின் இழந்த ஊர் நினைவுகள் பற்றிய கழிவிரக்கம், புதிய இடத்தில் காணப்படும் நிறவேற்றுமை போன்ற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை எழுதுவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் இவ்விதமான அனுபவங்களும் புகலிடத்தமிழர்களின் அனுபவங்களே.

Bum / Bomb ( வீதி வழியே, பிச்சையெடுத்துக்கொண்டு அலைந்து திரிபவர்களையும் Bum என்று கூறுவது மேற்கு நாடுகளில் வழக்கம்.) இரண்டு சொற்களும் கேட்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் தமிழ் பாதுகாவல் அதிகாரியொருவர் அடைந்த அனுபவத்தை ‘புலம் பெயர்தல்’ என்னும் என் சிறுகதையொன்றில் விபரித்திருக்கின்றேன். வாடிக்கையாளர்களொருவர் இரண்டாம் தளத்தில் Bum இருப்பதாகக் கூறியதைக்கேட்ட அந்த அதிகாரி Bomb இருப்பதாகக்கருதி அடையும் பதற்றத்தை விபரிக்கும் கதை அது. இது போன்ற புகலிட அனுபவங்கள் பல சிரிப்பை வரவழைக்கும்.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 168: ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ சின்னத்தம்பி சண்முகநாதன் நினைவாக…..

நெடுந்தீவு சண்முகநாதன்இன்று தோழர் சின்னத்தம்பி சண்முகநாதன் அவர்களின் இறுதி அஞ்சலிக்காக எழுத்தாளர் தேவகாந்தனுடன் சென்றிருந்தேன். தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் ஆரம்பகர்த்தாக்களில் முக்கியமான ஒருவர் சண்முகநாதன். இவரை நான் ஒருமுறை 81.82 காலகட்டத்தில் சந்தித்திருந்த விடயத்தை இன்றுதான் உணர்ந்தேன். அவருக்கு அஞ்சலி செய்வதற்காக வந்திருந்த வந்திருந்த ‘ஜான் மாஸ்ட்டர்’ பழைய நிகழ்வொன்றினை நினைவு படுத்தியபோதுதான் அதனை உணர்ந்தேன். ஒருமுறை 81/82 காலகட்டத்தில் வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்திருந்த அநாதைகள் இல்லத்தில் நடைபெற்ற, காந்தியம் அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த   ‘தமீழீழ விடுதலை’ பற்றிய மூன்று நாள் கருத்தரங்கில் பல்வேறு  அமைப்புகளைச்சேர்ந்த பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அந்நிகழ்வில் சண்முகநாதனும் கலந்து கொண்டிருந்தார். அந்த ஒரு நிகழ்வில் மட்டும்தான் அவரைச்சந்தித்திருக்கின்றேன். நீண்ட நேரம் அவருடன் உரையாடியுமிருக்கின்றேன். அதன் பின்னர் அவர் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியின் கோப்பொன்றினை (ரோனியோப் பிரதி) எனது கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார். அது பற்றி ‘தாயகம்’ (கனடா) பத்திரிகை / சஞ்சிகையில் கட்டுரையொன்றினை ‘நாவலர் பண்ணை நினைவுகள்’ என்று எழுதியிருந்தேன். பின்னர் அதனைப் ‘பதிவுகள்’ இணைய இதழிலும் மீள்பிரசுரம் செய்திருந்தேன். அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கும்”

“அந்தக் கருத்தரங்கில் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’ என்று தன்னை அறிமுகப்படுத்திய நெடுந்தீவைச் சேர்ந்த சண்முகநாதன் என்பவரை சந்தித்ததும் நினைவிற்கு வருகின்றது. பின்னர் இவர் ‘றோனியோ’ பிரதியாக தமது கட்சியின் கொள்கைப்பிரகடன அறிக்கையினைத் தபால் மூலம் கொழும்பு முகவரிக்கு அனுப்பியிருந்தார்..” (பதிவுகள், ‘நாவலர் பண்ணை நினைவுகள்‘ – 24 ஏப்ரில் 2012).

ஆரம்பத்தில் அவரது பெயர் உடனடியாக ஞாபகம் வர மறுத்தது. நெடுந்தீவு ராமநாதன் என்று எண்ணியிருந்தேன். பின்னர்தான் ‘நெடுந்தீவு சண்முகநாதன்’ என்பது ஞாபகத்துக்கு வந்தது. ஆனால் ‘தேடகம்’ நிகழ்வுகளில் அவ்வப்போது கண்டிருக்கும் சின்னத்தம்பி சண்முகநாதன்தான் அவர் என்பது இன்றுவரை தெரியாமலே இருந்தது இன்று ஜான் மாஸ்ட்டர் நினைவுபடுத்தும்வரை.

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 167: தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்..’ பற்றிய குறிப்புகள்!

தமிழினியின் சுயசரிதையான 'ஒரு கூர்வாளின் நிழலில்' பற்றி1. தவளைப்பாய்ச்சல்’

தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்.’ அதில் கூறப்பட்டுள்ள சுய விமர்சனங்களுக்காக அந்நூலினை எதிர்ப்பவர்களால் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் அந்நூல் விமர்சனங்களுடன் பல தகவல்களையும் ஆவணப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப்புலிகளின் பல வெற்றிகரமான தாக்குதல்களை, அவை வெற்றிகரமானவையாக அமைவதற்காகப்போராளிகள் செய்த பயிற்சிகள், கொடுத்த விலைகள் ,இவற்றைப்பற்றியெல்லாம் விரிவாகவே விபரிக்கின்றது நூல். தமிழினியின் எழுத்தாளுமை நூலுக்கு மேலும் இலக்கியச்சிறப்பினை அளிக்கின்றது. யுத்தங்களை விபரிக்கையில் ஏற்படும் சக தோழிகளின் இழப்புகள் நெஞ்சைத்தொடும் வகையில் நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. போதிய உணவின்றி, போதிய ஆடைகளற்று பல சிரமங்களுக்குள்ளான நிலையிலும், தமது இலட்சியத்துக்காகப்  போராடும் அவர்களது நடவடிக்கைகள், உணர்வுகள் ஆகியனவும் நூலில் விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நூலின் ஆவணச்சிறப்பு அதிகரிக்கின்றது.

நூலில் பூநகரி முகாம் மீதான ‘தவளைப்பாய்ச்சல்’ பற்றி விரிவாகவே விபரிக்கப்பட்டுள்ளது. அதற்காகப் போராளிகள் சுமார் ஒரு வருடமாக எடுத்த பயிற்சி பற்றியெல்லாம் விபரிக்கப்பட்டுள்ளது. பூநகரிச்சமர் பற்றி நூலிலிருந்து சில பகுதிகளை இங்கு தருகின்றேன்:

“1993 இறுதிப் பகுதியில் அச்சுவேலிப்பகுதியில் வல்லை வெளியோடு சேர்ந்திருந்த கடல் நீரேரியில் ஒரு மாதிரி இராணுவ தளம் அமைக்கப்பட்டு எமது அணிகளுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன. ஆனால் அது எந்த இராணுவத்தளத்தின் மாதிரி வடிவம் என்பது அபோது தான் எங்களுக்குப் புரிந்தது. நான் முதன் முதலாகப் பங்கெடுத்த தாக்குதல் பூநகரி இராணுவ முகாம் மீதானதாகும்.” (பக்கம் 55; இலங்கைப்பதிப்பு)

” இத்தாக்குதல் நடவடிக்கைக்காக  விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வருடத்திற்கும் மேலான தயார்படுத்தல்களை மேற்கொண்டிருந்தது.. வன்னி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலிருந்து தாக்குதல் பயிற்சி பெற்ற  ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளைக்கொண்ட  தாக்குதலணிகள்  இந்தச் சமரில்  ஈடுபடுத்தப்பட்டன.” (பக்கம் 56)

இந்தச் சமருக்குத் ‘தவளைப்பாய்ச்சல்’ என்று விடுதலைப்புலிகள் பெயர் வைத்திருக்கின்றார்கள். அவ்விதமான பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணம் சுவாரசியமானது. அது பற்றித் தமிழினி பின்வருமாறு விபரிப்பார்:

“புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ- கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடாத்தப்பட்ட ஈரூடகத் தாக்குதல் இதுவாகும். இதனால் இந்நடவடிக்கைக்கு ‘ஒப்பரேசன் தவளை’ என இயக்கம் பெயர் சூட்டியிருந்தது.” (பக்கம் 56)

தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடாத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட பெயர்தான் ‘தவளைப்பாய்ச்சல்’.

Continue Reading →