முனைவர் ஆர் .தாரணி (Dr. R. Dharani M.A.,M.Phil., M.Ed., PGDCA., Ph.D) அவர்களை எனக்குக் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத்தெரியும். இணையம் மூலம் அறிமுகமான இலக்கியவாதிகள், கல்வியாளர்களில் இவரும் முக்கியமான ஒருவர். இவரை நான் முதலில் அறிந்துகொண்டதே சுவாரசியமானதோர் அனுபவம். இணையத்தின் முக்கியமான பயன்களை எனக்கு உணர்த்திய அனுபவம் அது. அப்பொழுது நான் இணையத்தில் எனக்கொரு பக்கத்தை வைத்திருந்தேன். அதில் என் சிறுகதைகள் மற்றும் ஏனைய ஆக்கங்கள் பலவற்றைப் பதிவு செய்திருந்தேன். அக்காலகட்டத்தில் மான்ரியாலிலுள்ள மூன்று பல்கலைக்கழகங்கள் இணைந்து கனடிய எழுத்தாளர்களின் படைப்புகளைப்பற்றி , கனடிய அரசின் நிதி உதவியுடன் Bibliography of Comparative Studies in Canadian, Québec and Foreign Literatures!’ என்னும் தலைப்பில் ஆய்வுத்திட்டமொன்றிலீடுபட்டுக்கொண்டிருந்தன. அதற்காக அவர்கள் கனடிய எழுத்தாளர்களின் விபரங்கள் அடங்கிய இணையத்தளப்பக்கமொன்றினை ஏற்படுத்தியிருந்தார்கள். அதில் கனடாவில் வாழும் பல்லின எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள், அவர்கள்தம் இணையத்தளங்கள் மற்றும் அவ்விணையத்தளங்களுக்கான இணைப்புகள் என அப்பக்கத்தில் தகவல்களைப்பதிவு செய்திருந்தார்கள். (இந்தத்தளம் இப்பொழுது இயங்குவதில்லை.)
அக்காலகட்டத்தில் புகலிடத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுக்கட்டுரையொன்றினை எழுதுவதற்காக, அது பற்றிய தகவல்களை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தார் முனைவர் தாரணி. அவர் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் பற்றியே அச்சமயம் இணையத்தில் தேடிக்கொண்டிருந்ததாகப்பின்னர் என்னுடன் தொடர்பு கொள்ளும்போது தெரிவித்திருந்தார். அச்சமயம் அவரது கண்களில் மான்ரியால் பல்கலைக்கழகம் மேற்பார்வையில் இயங்கிக்கொண்டிருந்த கனடிய எழுத்தாளர்கள் பற்றிய இணையத்தளமும், அதிலிருந்த என் பக்கத்துக்கான இணைப்பும் பட்டிருக்கின்றது. என் பக்கத்திலிருந்த புகலிட வாழ்வினை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த கதைகளை, சிறு நாவலான ‘அமெரிக்கா’ ஆகியவற்றை வாசித்திருக்கின்றார்.அவற்றை வாசித்ததும் என் கதைகளையே மையமாக வைத்துத் தான் எழுதவிருந்த புகலிட ஆய்வுக்கட்டுரையினை எழுதுவதாகத்தீர்மானித்து என்னுடன் தொடர்புகொண்டிருந்தார். அப்பொழுது அவர் எழுதிய என் படைப்புகளைப்பற்றிய ஆய்வுக்கட்டுரையின் தலைப்பு “‘Seeking the invisible Humanness in an Alien Land’ : A review of the Diasporic issues as revealed through the selected Short stories of V.N. Giridharan” . இவ்வாய்வுக் கட்டுரையினைத் தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வரங்கொன்றில் சமர்ப்பித்திருந்தார்.