ஈழத்து நாவல் இலக்கியம் தன்னளவிலான முயற்சிக்கும் சிந்தனைக்குமேற்ப இலக்கியப் பாதையில் முன்னேறிச் சென்றுகொண்டிருப்பினும் அது தன்மேல் பூட்டப்பட்ட விலங்குகளையும் சுமந்துகொண்டேதான் செல்கிறதென்று ஒரு விமர்சகனால் சொல்லமுடியும். இலகு யதார்த்தப் போக்கில் மூழ்கி கருத்துநிலையால் தன்னைச் சுற்றி முன்னேற்றத்தின் சகல சாத்தியங்களையும் சிரமமாக்கிக்கொண்டேதான் அது நடந்திருக்கிறதென்பது கசப்பானதெனினும் உண்மையானது.
ஆரம்ப காலங்களில் மரபு சார்ந்து நடந்த ஈழத்து தமிழ் இலக்கியம் பின்னால் முற்போக்குப் பாதையில் திரும்பிய வேளையிலும் நவீனத்துவத்துக்கான ஒரு மொழியையும் நடையையும் பார்வையையும் கண்டடைந்து தொடர்ந்துசெல்ல முடியாமற்போனமை துர்ப்பாக்கியமே. அதனுடைய முன்னேற்றமென்பது அளந்து அளந்து வைக்கப்பட்டதாக ஆயிற்று. யதார்த்தத்திற்குப் பின்னால் நவீன யதார்த்தம் தோன்றியதென்பதையோ பின்நவீனத்துவப் போக்கு பரீட்சிக்கப்பெற்றதென்றோ அதன் வழி இலக்கியம் மொழியால் நடத்தப்படுகிறதென்பதையோ அது இன்றைவரைக்கும் புரிந்ததாய்ச் சொல்லிவிட முடியாதே இருக்கிறது. தலித் இலக்கியத்துக்கான முன்னோடி எழுத்துக்களை ஈழத்து இலக்கியம் தந்திருந்தபோதும் பெருமைப்படக்கூடிய புனைவிலக்கியமொன்றை அது தரமுடியாதிருந்ததின் காரணம் இங்கே இருக்கிறதெனக் கொள்வதில் தவறில்லை.
தமிழகத்தில் முதல் தமிழ் நாவலான வேதநாயகம்பிள்ளையின் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ 1879இல் தோன்றியதெனில் ஈழத்து முதல் தமிழ் நாவலான சித்திலெவ்வை மரைக்காரின் ‘அசன்பேயுடைய சரித்திரம்’ 1885இல் தோன்றிற்றென்பது விமர்சகர் யாவர்க்கும் ஒப்பமுடிந்த முடிவு. எனில் ஈழத்து முதல் தமிழ் நாவல் தோன்றி இன்றைக்கு ஒன்றேகால் நூற்றாண்டுக்கு சிறிது மேலேயாகியிருக்கிறது. இந்த நீண்ட கால வரலாற்றில் எடுபொருள் குறித்த தன்மையால் எஸ்.பொ.வின் ‘தீ’யும் புதிய களநிலை குறித்த தன்மையால் பாலமனோகரனின் ‘நிலக்கிளி’யும் தெளிவத்தை யோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’யும் பேசப்பட்டாலும் மொழியமைப்பின் வசீகரத்தாலும் வலுவான உரையாடல்களாலும் இறுகியதும் வேறுபட்டதுமான நடையினாலும் மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம்’ தீவிர வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது. இதுவே இந்நீண்ட வரலாற்றுப் புலத்தில் ஈழத்து இலக்கியத்தின் சாதனையெனச் சொல்லக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் அண்மையில் வெளிவந்திருக்கும் நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’ நாவல் இதுவரையிருந்த ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மொண்ணைத்தனத்தினை நொருக்கிப்போடும் மொழி நடை உரையாடல் மற்றும் பொருள் சார்ந்த வி~யங்களின் வல்லபத்தோடு வெளிவந்திருப்பதை அதன் திசைமாற்ற முன்னறிவிப்புக் குரலாக நான் காண்கிறேன். இருந்தும் ஈழத்திலேயே இது பெருங்கவனம் பெற்றிராதது ஆச்சரியகரமானது.