தமிழ் இலக்கியங்களில் இறைவழிபாடு முறையில் நோக்கிடும்போது தமிழகமக்களின் பழமையும், ஆய்வுக்குட்பட்ட பல செய்திகளும் புலப்படுகின்றன. வழிபாடு என்பது பின்பற்றுதல் என்ற பொருளினைத் தரும். பலதரப்பட்ட கடவுள்களைச் சைவசமயத்தினர் வணங்கி வருகின்றனர். இறைவனை நேரில் காண இயலாததாகி இருப்பினும் இறைவனுக்குப் படையல் இடுவதும், தன்னையும், தமது குடும்பத்தாரையும் காக்கும் சக்தியாக எண்ணியும் வழிபட்டு வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமாக அமையப்பெற்ற அய்யனார் வழிபாடு குறித்து இவ்வாய்வுக்கட்டுரை அமையப்பெறுகிறது.
அய்யனார் விளக்கம்
அய்யனாரைப் பல சாதி சமயத்தினரும் வழிபாடு செய்துவருகின்றனர். அய்யனார் என்ற சொல்லானது அய்(ஐ) அன், ஆர் என்ற மூன்றால் ஆனதாகும். இதில் ஐ என்ற எழுத்து தலைவன் என்றும் அன் என்பது ஆண்பால் ஈறு ஆகும். ஆர் என்பது மரியாதைக்குரிய விகுதியாகும். பழங்காலம் முதற்கொண்டே அய்யனார் வழிபாடு தமிழகத்தில் இருந்து வந்ததற்கான ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன. சமணர்கள் கோயிலிலும் அய்யனார் தெய்வத்தைப் பரிவாரத் தெய்வமாய் வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள். அவர்கள் இவரைப் பிரம்மயட்சணர் என்றும் அழைத்து வருகின்றார்கள். யானை வாகனம் அவருக்குரியது என்றும் கூறி வழிபட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள சிறுதெய்வ வழிபாடு முழுவதும் அழகர்மலையிலுள்ள பதினெட்டாம்படி கருப்பர் வழிபாட்டிற்குக் கட்டுப்பட்டதேயாகும். அய்யனார் கோயில்களில் இருக்கும் தெய்வச்சிலைகள், எல்லாம் களிமண்ணால் செய்யப்பட்டு சூளையில் வைத்துச் சுட்டுச் செய்யப்பட்டவைகளாய் இருந்து வருகின்றன.(நன்றி-வலைத்தளம்)
சைவமும்,வைணவமும் ஒருங்கிணைந்ததுபோல அய்யனாரின் பிறப்பு அமைந்துள்ளது. அய்யப்பனே அய்யனார் எனவும், சாஸ்தா எனவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. சாத்தன்’, அல்லது ‘சாத்தனார்’ என்னும் பெயர் ‘சாஸ்தா’ என்னும் வடமொழிப் பெயரின் திரிபு. ‘சாஸ்தா’ என்பது புத்தருக்குரிய பெயர்களுள் ஒன்று என்பது ‘அமரகோசம்’, ‘நாமலிங்கானுசாசனம்’ முதலிய வடமொழி நிகண்டுகளால் அறியப்படும். எனவே, ‘சாஸ்தா’ என்னும் சொல்லின் திரிபாகிய ‘சாத்தன்’ என்னும் பெயர் புத்தரைக் குறிக்கும் பெயராகப் பண்டைக் காலத்தில் வழங்கப்பட்டு வந்தது. இந்தப் பெயரைப் பௌத்த மதத்தினர் பெரும்பான்மையும் தத்தம் சிறுவருக்குச் சூட்டினர். பண்டைக் காலத்தில், அதாவது கடைச்சங்க காலத்தில், தமிழ் நாட்டிலிருந்த பௌத்தர்கள் ‘சாத்தன்’ என்னும் பெயரைப் பெரும்பாலும் மேற்கொண்டிருந்தனர் என்பது சங்க நூல்களினின்றும் தெரியவருகின்றது. காப்பியச் சிலம்பில் சாஸ்தாவைப் பற்றிப் பல தகவல்கள் காணக் கிடைக்கின்றன. கனாத்திறமுரைத்தகாதையில் பாசண்டச் சாத்தன் பற்றிய குறிப்பும் வரலாறும் வருகிறது. சாத்தன் கோயிலை சிலம்பு புறம்பணையான் கோட்டம் என்கின்றது. அங்கு வழிபாடு நிகழ்தலையும், அத் தெய்வம் தம்மை அண்டியவரைக் காத்து நிற்பதையும் சிலம்பு கூறுகிறது.