அண்மையில் ரொறன்ரோ, கனடாவில் உள்ள பிரபல இசைக்கல்லூரியான பாரதி கலைக்கோயிலின் வருடாந்த இசைத் திறன் காண் போட்டி நடைபெற்றது. தமிழ் மொழி, தமிழ் இசை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைப் புலம்பெயர்ந்த கனடிய மண்ணில் பேணிக்காப்பதற்காக சிறந்த நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த கலைக்கல்லூரி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணவர்களைக் கலைத்துறையில் இந்தப் புலம்பெயர்ந்த மண்ணில் உருவாக்கியிருக்கின்றது. மாலை நான்கு மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களும் வைத்திய கலாநிதி செந்தில்நாதன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போட்டியில் சுமார் 250 மாணவ, மாணவிகள் பங்கு பற்றித் தமது திறமையை வெளிப்படுத்தினர். சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில்,
‘புலம் பெயர்ந்த இந்த மண்ணில் கடந்த 25 வருடங்களாக நடக்கும் நிகழ்ச்சிகளை அவதானித்து வருபவன் என்ற முறையில், இந்த மண்ணில் எங்கள் தமிழ் மொழியையும், பண்பாடு கலாச்சாரத்தையும் பேணிக்காப்பதில் பல மன்றங்களும், கல்லூரிகளும் முன்னின்று பாடுபடுகின்றன என்பதையிட்டுப் பெருமைப்படுகின்றேன். அந்த வகையில் பவதாரணியின் பாரதி கலைக்கோயில் கனடிய மண்ணில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இசை என்பது வெறும் இசையல்ல, அது மனதில் ஆரோக்கியத்தை வளர்க்கின்றது. இங்கே இசைபயிலும் பிள்ளைகள் கல்வியிலும் சிறந்தவர்களாக மிளிர்வதை அவதானிக்க முடிகின்றது. தவறான வழியில் செல்லாமல் தங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் இசை, கலை, பண்பாடு, கலாச்சாரத்தைக் கற்பிக்கும் பெற்றோர்களாகிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள். எங்கள் தமிழ் மொழி இந்த மண்ணில் அழிந்து போகாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மட்டுமல்ல, அடுத்த தலைமுறையிடம் விட்டுச் செல்ல வேண்டிய கடமையும் பெற்றோர்களாகிய உங்கள் கைகளிலேதான் இருக்கின்றது. சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழும் இந்த மண்ணில் கலையை மட்டுமல்ல மொழியையும் காப்பாற்ற வேண்டும். மொழி அழிந்தால் நம் இனம் அழிந்து விடும் என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். எமது இலட்சியங்களை நிறைவேற்ற முடிந்தவரை ஒன்றுபட்டு உழைப்போம்.’