யுவனின் நீள் கவிதை “இருத்தலும் இலமே”
காலச்சுவடு ஏப்ரல் 2016 இதழில் யுவனின் நீள்கவிதைக்கான இணைப்பு இது. தமிழ்ச் சூழலில் கவிதை வாசிப்பு, விமர்சனம், கவிதை பற்றிய புரிதல் இவை படைப்பாளிகளுக்கே பிடித்தமான ஒன்று இல்லை. தனக்குக் கவிதை பற்றியும் கொஞ்சம் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காக ஒரு பார்வையைப் பதிவு செய்பவர்களே விரல் விட்டு எண்ணக் கூடிய மூத்த படைப்பாளிகளில் வெகு சிலர். பிறர் நேர்மையாளர்கள். கவிதை என்ற ஒன்று இலக்கியத்தில் இருக்கிறது என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாத நிம்மதி உடையவர்கள்.
கவிதை வெளிப்படுவது புனைகதை படைப்பாக்கத்தை விட அடிப்படையில் கற்பனை, காட்சிப்படுத்துதல் மற்றும் ஆன்மீகம் ஆகிய மூன்று புள்ளிகளில் வேறுபடுவது. ஒரு குழந்தையின் பார்வையுன் உலகைப் பார்ப்பவன் கவிஞன். அவனுக்கு காட்சிகளில் இருந்து சாதாரண விழிகளுக்கு அன்னியமான, மிகவும் புதுமையான, கொப்பளிக்கும் கற்பனை விளம் மிகுந்த தரிசனங்கள் கிடைக்கின்றன. அந்தப் புள்ளியிலிருந்து அவன் நகர்ந்து அந்த மனவெளி அனுபத்தை கவிதையாகப் படைக்கும் போது சொற்களின் இயலாமையைக் கடக்க முயல்கிறான். இப்படிக் கடக்கும் முயற்சி புதிய சொல்லாடல்களுக்கு, மொழிக்கு அசலான வளம் சேர்க்கும் பயன்படுத்துதலுக்கு அவனை இட்டுச் செல்கிறது. புனைகதை வாசகன் பழகிய சொற்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் முன்னெச்சரிக்கையோடு நகர்வது. கவிதை சொற்களை, மொழியைப் பயன்படுத்துவதில் வாசிப்பதில் கற்பனையும் புதுமையுமான தளத்துக்கு வாசகரை இட்டுச் செல்வதாகும். ஆன்மீகத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையான ஒற்றுமை இரண்டுமே வாழ்க்கையின் புதிர்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை முன் வைப்பதே. வாழ்க்கையின் விடை தெரியாத கேள்விகளை, வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளை ஆன்மீகமும் கவிதையும் எப்போதும் தொடுகின்றன. குறிப்பாக நவீன கவிதை இந்த இயங்குதலினாலேயே முக்கியத்துவம் பெறுவது.
யுவனின் நீள் கவிதை பற்றிய மனத்தடை ஒன்றே. அதை நான் கடக்கவில்லை. ஆனாலும் இன்னும் மீள் வாசிப்பில் எனக்குள் விவாதித்தபடி இருக்கிறேன். கவிதையின் மிகப்பெரிய பலம் அது சொற்களை விரயம் என்னுமளவு வாரி இறைக்கும் புனைவு எழுத்தை – கதை அல்லது கட்டுரை – தனது சொற்சிக்கனத்தில் எள்ளுவது. குறிப்பாக யுவன் புனைகதை, கவிதை இரண்டுமே கைவரும் அபூர்வ உயிரினமானவர். காவியமாயில்லாத ஆன்மீகப் பொறியின் அடிப்படையிலான கவிதை எழுதியவர் ஏன் நீள் கவிதை எழுதினார்? இந்தக் கேள்வி என்னுள் இன்னும் நெருடியபடி தான் இருக்கிறது.
Continue Reading →