முன்னுரை:
சங்க இலக்கியம் முழுமைக்கும் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் உரை எழுதியுள்ளார்.ஆற்றுப்படை நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படையானது இவரது உரையின் மேற்கோள் திறத்தினால் சிறப்பினை அடைந்தது என்றே கூறலாம்.எனவே,இவரின் மேற்கோள் திறத்தினைப் பற்றி இக்கட்டுரையின்மூலம் அறியலாம்.
மேற்கோள்:
மேற்கோள் என்பது சுருக்கமாகவும் சிந்திக்கக் கூடியதாகவும்,கருத்துடன் உறவினையுடையதாகவும் இருக்க வேண்டும். மேற்கோளினை நாம் அளவாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.உரையாசிரியர்கள் தங்களின் புலமையினைக் காட்டுவதற்கு மேற்கோள்கள் உதவிபுரிகின்றன.
”உப்புபோல் இருக்க வேண்டுமே தவிர
அதுவே உணவாகி விடுதல் கூடாது”1
என்பார் இலக்குவனார்.குறியீடுகள்,மேற்கோள்கள் ஆய்வு நிகழ்த்தும் அறிஞர்களுக்குப் பெரிதும் உதவுகின்றன. அறிஞர்கள் மேற்கோளினை இரண்டு நிலையாகக் குறிப்பிடுகின்றனர்.அவை ஒற்றை மேற்கோள்,இரட்டை மேற்கோள் என இரு வகைப்படும்.
மேற்கோளின் தேவை:
ஒரு நூலிற்கு மேற்கோள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒன்றிற்கு மேற்பட்ட நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் கூறலாம்.எளிதில் விளக்கந் தர வேண்டிய இடங்களில், எடுத்துக்காட்டுத் தேவைப்படும் இடங்களிலும் மேற்கோள்களை மிகுதியாகப் பயன்படுத்துகின்றனர்.மேற்கோளின்மூலம் கருத்துச் சிக்கல் என்பது இல்லாமல் இருக்கின்றது.எல்லா இடங்களுக்கும் மேற்கோள்கள் தேவைப்படுவதில்லை.சில இடங்களுக்கு மட்டுமே மேற்கோள்கள் அவசியமான ஒன்றாகக் கருதப்படுகின்றன.