கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது. முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.
கனடாவின் கல்வித்துறை – தமிழ், அதிகாரி திரு. பொ. விவேகானந்தன் அவர்கள் அன்பின் ஐந்திணை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் வெட்சித்திணை என்ற தலைப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். திரு. க.குமரகுரு அவர்கள் தொல்காப்பியம் செப்பும் செய்யுள் உறுப்புகளும் பா வகைகளும் என்ற தலைப்பில் அரியதோர் ஆய்வுரை வழங்கினார். திருமதி லோகா இரவிச்சந்திரன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் இசையும் இசைப்பண்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு. சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் ஆசிரியர் மாணவர் என்ற தலைப்பில் உரை வழங்கி மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிட்டார். முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கம் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.