இரண்டு வயதில் வாசிக்கத்தொடங்கி, நான்கு வயதில் கட்டுரை எழுதி, பதினேழு வயதில் சLateKuramagalிறுகதை படைத்து, உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து, ஆசிரியராகி, வெளிவாரி பட்டப்படிப்புடன் நாடகத்துறையிலும் பயின்று, எழுத்தாளராக, பெண்ணிய ஆளுமையாக, சமூகச்செயற்பாட்டளராக, பேச்சாளராக பரிமளித்து அயற்சியின்றி இயங்கி, கனடாவில் மௌனமாக விடைபெற்ற ஈழத்தின் மூத்த எழுத்தாளர் பற்றி அறிந்திருக்கிறீர்களா…? அவர்தான் வள்ளிநாயகி என்ற இயற்பெயருடனும் குறமகள் என்ற புனைபெயருடனும் வாழ்ந்து தமது 83 ஆவது வயதில் இம்மாதம் 15 ஆம் திகதி கனடா ரொரண்டோவில் மறைந்த இலக்கியவாதி.
இலங்கையின் வடபுலத்தில் 1933 ஆம் ஆண்டு ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்த வள்ளிநாயகியையும் அன்றைய சமூக அமைப்புத்தான் ஒரு படைப்பாளியாக்கியிருக்கிறது. ” வாழ்வின் தரிசனங்களே தாம் எழுதும் படைப்புகள் ” என்றுதான் எழுத்தாளர்கள் சொல்வார்கள். வள்ளிநாயகியும் இதற்கு விதிவிலக்கல்ல. அவருக்கு பன்னிரண்டு வயதிருக்கும்போது அவர் வீட்டுக்கு அயலில் ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த மனதை உருக்கும் சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிப்படைந்திருந்து ஐந்து ஆண்டுகள் கடந்தும் அந்தச்சம்பவம் தந்த அழுத்தத்தினால் தமது 17 வயதில் அவர் எழுதிய முதலாவது சிறுகதைதான் போலி கௌரவம். அந்நாளில் வடக்கில் வெளிவந்த ஈழகேசரியில் பதிவாகியது.
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஒரு அண்ணனும் தங்கையும் திருமணச் சீதனப்பிரச்சினையால் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்பொழுது அந்தத்தங்கை நிறைமாதக்கர்ப்பிணி. சீதனம் கேட்டு தொல்லை தந்த அவள் கணவனால் அந்தக்குடும்பத்தில் நேர்ந்த பேரவலம் 12 வயதுச்சிறுமியான வள்ளிநாயகியை பாதித்திருக்கிறது. சமூகம் இப்படித்தான் இருக்கும். ஆனால், சமூகம் எப்படிருக்கவேண்டும் என்பதை அந்த இளம்வயதிலேயே சிந்தித்து, அவர் எழுதிய முதல்கதையில் சீதனப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் கொடுத்ததை வாங்கிக்கொள்ளும் நாயகனை அவர் படைத்துக்காண்பித்திருக்கிறார். பின்னர் சீதன முறையை ஆதரிக்கும் சமூகச்சீர்கேட்டுக்கு எதிராக தனது எழுத்துக்களை போர்க்குரல் ஆக்கியிருக்கிறார்.
Continue Reading →