அப்பா வழக்கம் போல 5 மணிக்கு எழுந்து கடன் முடித்து, குளித்து, ஸ்லோகம் சொல்லிக் கொண்டே வேஷ்டி உடுத்தி, நெற்றியில் பட்டையிட்டு, பொட்டு வைத்து, காவித்துண்டை பெல்ட்டுப் பட்டையாகக் கட்டிக்கொண்டு 6 மணிக்கு கோயிலுக்குச் சென்றவர் சரியாக ஒருமணி நேரம் கழித்துத் தான் வீடு திரும்புவார்.
போகும் போது “மலர், கனகா எழுந்திரிங்க. பொம்பளப் பிள்ளைங்களுக்கு ஆறு மணிக்கு மேல என்ன தூக்கம்?” என்று குரல் கொடுத்துவிட்டுத்தான் சென்றார். என்றாலும் கூட இருவரும் அப்பாவின் காலடி சத்தம் கேட்டுப் பாய், தலையணைகளை சுருட்டிக் கொண்டு படுத்திருந்த சுவடு தெரியாமல் எழுந்து ஆளுக்கொரு திக்காக ஓடினார்கள்.
“கனகா . . . . . கனகா .
. . . .”
“என்னப்பா”. குளியலறைக்குள்ளிருந்து குரல் கொடுத்தாள் கனகா,
“மலர் . . . . . மலர் . . . . .”
“இந்தா வந்துட்டேம்பா…” படித்துக்கொண்டிருந்தவளைப் போல பாவணை செய்து கொண்டிருந்த மலர் புத்தகமும் கையுமாக அப்பாவின் முன் வந்து நின்றாள்.
“படிச்சிட்டுருக்கியா. சரிசரி அம்மா எங்கன்னு சொல்லிட்டுப் போ”
“அம்மா அடுப்படில உங்களுக்கு இட்லி ஊத்திட்டிருக்காங்கப்பா”.
“உங்கப்பன் தலையைக் கண்டதும் தானே உங்கம்மா அடுப்படியில கால வைப்பா” என்று மலரிடம் திட்டிவிட்டு தன்னுடைய எழுத்து வேலையைத் தொடர்ந்தார் அப்பா. பத்து நிமிடம் கூட கழிந்திருக்காது அடுப்படியைப்பார்த்துக் குரல் கொடுத்தார்.