“நீ உன்ரை மகனோடை உக்கார்ந்திருந்து, தனிப்பட்ட பொறுப்புணர்வு பற்றிப் பேசவேணும்.” அவுஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகச் சிறுவனொருவனின் ‘ஷேர்ட் கொலரைப்’ பற்றிப் பிடித்தவாறு, அவனது தந்தையிடம், அதே சமூகத்துக் காவற்துறை அதிகாரி ஒருவர் இவ்வாறு அலறுகின்றார்! ஒரு ‘பியர்’த் தகரக் குவளையைக் கையில் ஏந்தியபடி மதுபோதையில் நிற்கும் தந்தையோ “அப்பிடியோ …! அவன்ரை பேரென்ன….. அப்ப…?” என்று அந்த அதிகாரியிடம் திருப்பிக் கேட்கின்றார். The Australia என்ற செய்திப் பத்திரிகை இந்த உரையாடலுடன் கூடிய காட்சியைச் சித்திரிக்கும் கேலிச்சித்திரம் ஒன்றைக் கடந்த 04-08-2016 வியாழக்கிழமை வெளியிட்டிருந்தது. அவுஸ்திரேலியாக் கண்டம் இன்று அல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிக்க, இந்தச் சின்னஞ்சிறு கேலிச் சித்திரம் காரணமாகிவிட்டது! சர்ச்சைக்குரிய இந்தக் கேலிச் சித்திரத்தை வரைந்தவர் ப்பில் லீக் (Bill Leak) என்பவர். இதனால் ஒரு புறத்தில் கோபத்துடன் கிளர்ந்தெழுந்து, ஆர்ப்பரித்து நிற்பவர்கள் அவுஸ்திரேலியப் பழங்குடியினர். அவர்களுக்கு ஆதரவாகக் குரலெழுப்புபவர்கள் சில அரசியல்வாதிகள், நடுநிலை ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், உள்ளூர் – வெளியூர் பழங்குடியினரின் அடிப்படை உரிமைகளுக்கான அமைப்பினர் – முகவர் நிலையத்தினர் எனப் பலதரப்பட்டவர்கள். இனவெறுப்பாளர்களுடன் மறுதரப்பில் கைகோர்த்து நின்று கள்ள மௌனம் காப்பவர்கள் வெள்ளை நிறப் பெரும்பான்மையினர். இடையில் நின்று இருபக்க மத்தளம் போல அடிபடுவோர் அரசயந்திரச் சாரதிகளும் சங்கூதிகளுமான அரசாங்கத்தினர்!
Cartoons எனப்படும் கேலிச் சித்திரங்கள் அதன் ஆரம்ப காலங்களில் அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, பண்பாடு போன்ற அம்சங்கள் குறித்த வர்ணனைகளையும் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் வெளிப்படுத்தும் வரைபடங்களாக இருந்து வந்துள்ளன. அங்கதத்துடனும் நையாண்டியுடனும் நகைச்சுவையுடனும் நுட்பமான விமர்சனங்களை மிகுந்த புத்தி சாதுரியத்துடன் அவை முன்வைத்து வந்துள்ளன.
இந்த வகையில், மேற்கூறப்பட்ட கேலிச்சித்திரத்தை வரைந்த ப்பில் லீக், தனது கேலிச்சித்திரத்தைக் கண்டு, ‘புனிதமான இனிய பறவைகள் வீறிட்டெழுந்துள்ளன’ என்று குறிப்பிட்டிருப்பதுடன், இதன் விளைவாக ஆத்திரம் கொண்ட சமூக ஊடகப் பாவனையாளரிடம், காவல் துறையினர் தம்மைக் கையளிப்பது போன்ற ஒரு புதிய கேலிச்சித்திரத்தையும் தற்போது வெளியிட்டுள்ளார். மேலும், பிரச்சினைக்குரிய அந்தக் கேலிச்சித்திரத்தைப் பிரசுரித்த பத்திரிகையின் ஆசிரியர், தமது செயலை நியாயப்படுத்தி இருக்கின்றார். பழங்குடி இனத்தவரின் அலுவல்களுக்கெனத் தமது பத்திரிகை கணிசமான மூலவளங்களை ஏற்கனவே அர்ப்பணித்துள்ளது எனவும், இந்தக் கேலிச்சித்திரம் அவர்களை இழிவுபடுத்தும் ஒன்றல்ல எனவும் அவர் வாதிட்டிருக்கின்றார்.