சிக்காகோ ஓ ஹரே சர்வதேச விமானநிலையத்தில் இருந்து காலை 10:40க்குப் புறப்பட்ட அமெரிக்கன் எயர்லைன்ஸ் விமானம் ரொறன்ரோ நோக்கி;ப் பறந்து கொண்டிருந்தது.
“முப்பத்தாறு வருடங்களுக்குப் பிறகு எனது நண்பன் குமாரினை சந்திக்கப் போறேன் என்று நினைக்க மகிழ்ச்சியாகவும், மிகவும் நெருங்கிப் பழகிய நண்பன் ஒருவனுடன் கடந்த முப்பத்தாறு வருடங்களாக எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்திட்டன் என்று நினைக்க குற்ற உணர்வும் என் மனதைப் போட்டு உறுத்துது” என்று புலம்பிக் கொண்டு விமானத்தில் இருக்கையில் இருந்தவாறு தனது இளமைக்கால நினைவுகளை மனதில் மீளோட்டம் செய்து கொண்டிருந்தான் சுதன். அவனோடு பயணம் செய்து கொண்டிருந்த மனைவி ரேகா நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். விமானத்தின் பறப்பு வேகத்தையும் மேவிய வேகத்துடன் கடந்த கால நினைவுகள் சுதனின் மனதில் அலையலையாக எழுந்தன……………
யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரித் தொகுதியில் அமைந்து எண்ணற்ற கலைத்துறை மாணவர்களையும் ஒருசில விஞ்ஞான மாணவர்களையும் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் அனுப்பி வரும் சாதனையால் சாவகச்சேரி இந்துக்கல்லூரி என்று எல்லோராலும் நன்கு அறியப்பட்ட ஒரு முதன்மைநிலைக் கல்லூரியாக விளங்கும் கல்லூரியில் தரம் நான்கு முதல் சாதாரண தரம் வரை ஒன்றாகப் படித்தவர்கள் சுதனும், குமாரும். அவர்களின் வீடுகள் கல்லூரியிலிருந்து எதிர்த்திசைகளில் பத்து மைல் தூர இடைவெளியில் இருந்தபோதும் கல்லூரியில் இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள்.
சாதாரணதரக் கல்விக்குப் பின்னர் உயர்தரத்தில் சுதன் உயிரியல் துறைக்கும், குமார் கணிதத்துறைக்கும் சென்று படிக்க வேண்டியிருந்ததால் எற்பட்ட பிரிவினைக் கூட ஏற்றுக்கொள்ளமுடியாது இருவரும் திண்டாடியவர்கள். உயர்தர வகுப்பிலும் இரசாயன பாடத்துக்குச் சுதனின் வழிகாட்டலும், பௌதீகப் பாடத்திற்கு குமாரின் வழிகாட்டலும் பெற்றுக் கொண்டு இருவரும் தத்தமது துறைகளில் சிறப்பாகப் படித்தார்கள்.
உயர்தரப் பரீட்சையில் சுதன் கொழும்பு மருத்துவக் கல்லூரிக்கும், குமார் பேராதனைப் பொறியியல் துறைக்கும் அனுமதி பெற்றார்கள். பல்கலைக்கழகம் செல்வதற்காகக் காத்திருந்த காலத்தில் சாவகச்சேரியில் புகழ்பெற்ற ஆங்கில ஆசிரியரான சிரோன்மணி ஆசிரியரிடம் பிரத்தியேகமாகச் சென்று ஆங்கிலம் படித்தார்கள். இவர்களைப் போன்று பல்கலைக்கழக அனுமதி பெற்ற பல மாணவர்களும் அந்த வகுப்புக்கு வந்திருந்தார்கள். ஆங்கிலம் கற்பதற்கு மேலாக அங்கு வந்த மாணவர்கள் ஒருவருக்கொருவர் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தார்கள்.