மாலை வேளையில் அது. கோவில் அலுவலகத்தில் தலைவரும் செயலாளரும் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தீபாவளி விருந்து நிகழ்வு பற்றி தீவிர ஆலோசனை செய்கின்றனர்.
“காளி…இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில்ல தீபாவளி விருந்த நிகழ்ச்சியை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்…. நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் மாயாண்டி கேட்கிறார்.
“புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? பல வருசமா தீபாவளி விருந்து நிகழ்ச்சிய நடத்தி வரோம். இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது சந்தோசமா ஆட்டுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். சந்தோசமா ஆடி பாடி மகிழனும். நாம கோயில் கட்டிப் பத்து வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் படையல் போட்டு அமர்க்களப்படுத்திடனும் தலைவரே.இதுதான் என்னோட ஆசை” கோவில் செயலாளர் காளி பெரிய எதிர்பார்ப்புடன் கூறுகிறான்.
“பத்தில்ல காளி…. இருபது கிடாக்கள வெட்டி நம்ம கம்பம் மட்டுமல்லாம…சுற்று வட்டாரத்துல இருக்கிற ஏழைபாளைகளுக்கெல்லாம் பெரிய அளவில பத்தாமாண்டுக் கோவில் திருவிழாவையும் தீபாவளி விருந்தையும் தடபுடலா விருந்து வெச்சு அசத்திடுவோம் அசத்தி…..!” தலைவர் மாயாண்டி உற்சாகமாகப் பேசுகிறார்.
“இந்த வட்டாரத்தில, இதுவரையிலும் யாரும் நடத்திடாத அளவில மிக விமர்சியா தீபாவளி விருந்தை நடத்திக் காட்டுவோம் காளி” மீசையை வேகமாக முறுக்கிவிடுகிறார் தலைவர்.
“தலைவரே….உங்கப் புண்ணியத்தாலே வருசா வருசம் கோவில்ல தீபாவளி விருந்துல சுவையான ஆட்டுக் கறியோட வயிறாரச் சோறு சாப்பிட முடியுது. என் புருசன் இறந்த பிறகு நான் ஒண்டியா…. உழைச்சு சின்னஞ்சிறுசுகளா இருக்கிற என்னோட ஐந்து புள்ளைங்களக் காப்பாற்ற பாடு இருக்கே அந்த முனியாண்டி சாமிக்குத்தான் தெரியும்.நீங்க மவராசனா இருக்கனும் சாமி”