அன்பின் ஆசிரியருக்கு, வணக்கம். மறைந்த விடுதலைப் புலிகளின் மகளிரணித் தலைவி தமிழினியின் சுயசரிதை சிங்கள மொழியில் வெளிவந்து, தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு இலங்கையில் அதிகளவில் விற்பனையான நூலாக சாதனை படைத்திருக்கிறது. அந் நூலைக் குறித்த சிங்கள வாசகர்களது கருத்துக்களோடு ஒரு கட்டுரையை எழுதி இணைத்திருக்கிறேன்.
இப் புத்தக வெளியீடு, 2016.05.13 அன்றும், மற்றும் கலந்துரையாடல்கள் கொழும்பு, Sri Lanka Foundation Institute, ஹொரண, நகர மண்டபம், கண்டி புத்தகக் கண்காட்சி, ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனம், கொழும்பு தேசிய நூலக மண்டபம், சர்வதேச புத்தகக் கண்காட்சி போன்ற பல இடங்களில் இப்போது வரையில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேயிருக்கின்றன. இந் நிகழ்வுகளில் இலங்கையின் பல முக்கியமான எழுத்தாளர்கள், கலை இலக்கியவாதிகளோடு, பதிப்பாளர் திரு.தர்மசிறி பண்டாரநாயக்க, மொழிபெயர்ப்பாளர் சாமிநாதன் விமல், தமிழினியின் கணவர் திரு.ஜெயக்குமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருக்கின்றனர். கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கள், இந் நூல் தொடர்பான நேரடி மற்றும் சமூக வலைத்தள கலந்துரையாடல்களின் போது பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
‘இதை ஏன் எழுத வேண்டும்? என என்னை நானே பல தடவைகள் கேட்டுக் கொண்டேன். என்னை எழுத ஊக்குவித்தது ஒரே ஒரு பதில்தான். அது, நான் உயிராக நேசிக்கும் மக்களிடம், எனது குரல்வளைக்குள் சிறைப்பட்டிருக்கும் சில உண்மைகளை வெளிப்படையாகக் கூற வேண்டும் என்பதாகும்.’
இலங்கை சமூகத்துக்கு விலை மதிப்பற்ற கொடையாகக் கருதப்படுகிறது முன்னாள் போராளியும், புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தலைவியாகவுமிருந்த தமிழினி எழுதிய அவரது வாழ்க்கைச் சரிதத்தின் சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுப்பு. இந்திய காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்த ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ தொகுப்பானது, ‘Thiyunu asipathaka sevana yata’ எனும் தலைப்பில் திரு.சாமிநாதன் விமலினால் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, 260 பக்கங்களில், எழுத்தாளர் தர்மசிறி பண்டாரநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இத் தொகுப்பே அண்மைக்காலமாக இலங்கையில் அதிகம் விற்பனையான சிங்கள மொழி புத்தகமாக அறியப்பட்டுள்ளது. சுரஸ பதிப்பகத்தால் வினியோகிக்கப்படும் இத் தொகுப்பானது, ஒரு மாதத்துக்கு இரண்டு பதிப்புக்களென அச்சிடப்படுகிறது எனும்போது, இப் புத்தகம் சிங்கள மொழி வாசகர்களை எந்தளவுக்கு ஈர்த்துள்ளதென்பதை அறியக் கூடியதாக இருக்கிறது.