தமிழகம் நன்கறிந்த பாவலராகவும் தமிழ்வளர்ச்சிக்குப் பாடுபடுபவராகவும் இன்று நம்மிடையே வாழ்ந்து வருபவர்; ம.இலெனின் தங்கப்பா (08.03.1934). பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், பாவலர், படைப்பாளர், தமிழ்ப்போராளி எனப் பல தளங்களில் பயணிப்பவர். பன்மொழி அறிஞர் இளமையிலேயே தன் தந்தையாரிடம் தமிழ்க்கவிதை பற்றியும், பகுத்தறிவுப் பார்வை பற்றியும் அறிந்து கொண்ட இவர் இன்றுவரை அவற்றைக் கடைப்பிடித்து வருகிறார். உயர்நிலைப்பள்ளியில் பதினான்கு ஆண்டுகள் வரலாறும், ஆங்கிலமும் பயிற்றுவித்த இவர், கல்லூரியில் இருபது ஆண்டுகள் தமிழ்இலக்கியம் கற்பித்தார். இளமைக்காலத்தில் ஆங்கிலத்தை விரும்பிக்கற்றார். இயல்பாகவே இயற்கை எழிலில் மிகுந்த நாட்டம் கொண்டவராதலால் ‘ஷெல்லி’, கீட்ஸ், வோர்ஸ்வொர்த் ஆகியவர்களின் பாடல்கள் இவரை ஈர்த்தன.
இயற்கை நலம்:
இவரது பாடல்களில் இயற்கை, தமிழர்நலம், சுற்றுச்சூழல், வாழ்வுநலம், விழிப்புணர்வு, மாந்தரிடையே நல்லுறவு பேணுதல் போன்ற சிந்தனைகள் மேலோங்கி காணப்படுகின்றன. இவரது இயற்கை ஈடுபாட்டிற்குச் சான்றாக ஒரு பாடல்,எளிமையும், இனிமையும் இயற்கையழகும் பயின்று வருவதைக் காணலாம். (த.நே.45,g.4,5)
“விரிகின்ற நெடுவானில், கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில், பள்ளத் தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில், காட்டில்
புல்வெளியில், நல்வயலில், விலங்கில் புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே, தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே, மெய்யே, மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே.”- (ப.66)
இயற்கையோடு இயைந்த வாழ்வே உயரியவாழ்வு என்பது இவர் கருத்து. மாணவர்களுக்கு இயற்கை அழகையும், சுற்றுச்சூழலைப் பற்றிய புரிதலையும் உணர்த்தும் முறையில் விடுமுறை நாட்களில் மிதிவண்டியில் மாணவர்களோடு பயணம் மேற்கொண்டார்.