– முனைவர் ஆர்.தாரணியின் ‘‘An Immigrant’: A poignant autobiographical sketch of V.N. Giritharan’ என்னும் கட்டுரையின் முக்கியமான தமிழாக்கம் செய்யப்பட்ட பகுதிகள். – பதிவுகள் –
குடிவரவாளன் கனடிய எழுத்தாளர் வ.ந.கிரிதரனுக்குப் புனைகதையைப்பொறுத்தவரையில் மிகப்பெரிய பாய்ச்சல். இந்நூலானது அந்நிய நாடொன்றில் எல்லா வகையான முயற்சிகளும் தோல்வியுற்ற நிலையில் , இருப்புக்கான இன்னல்களை எதிர்கொள்ளும் ஒரு மனிதனைப்பற்றிக்கூறுவதால் மிகவும் கவனத்துடனும் கருத்தூன்றியும் வாசிக்க வேண்டிய ஒன்று, இக்கதையானது ஒவ்வொருவரினதும் இதயத்தையும் எழுச்சியூட்டுவதாக அமைந்துள்ளது. இக்கதையின் நாயகனான இளங்கோ என்னும் மனிதனின் தப்பிப்பிழைக்கும் போராட்டத்தை அதிகமாக இப்படைப்பு வலியுறுத்தியபோதிலும், தற்போதும் அனைத்துலகத்தையும் சீற்றமடையைச்செய்துகொண்டிருக்கும், மிகவும் கொடிய ,ஈவிரக்கமற்ற ஶ்ரீலங்காவின் இனப்படுகொலையினைத்தாங்கிநிற்கும் பலமான வாக்குமூலமாகவும் விளங்குகின்றது. கதாசிரியர் வ.ந.கிரிதரன் தன் சொந்த அனுபவங்கள் மூலம் எவ்விதம் தமிழ் மக்கள் சிங்களக்காடையர்களின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இலங்கையில் நடைபெற்ற 1983 ஜூலைக் இனக்கலவரத்தில் தம் உயிர்களை, உடமைகளை, நாட்டை மற்றும் மானுட அடையாளத்தைக்கூட இழந்த மக்களுக்கான தனித்துவம் மிக்க அஞ்சலியாகவும் இந்நூல் இருக்கின்றது. நாவலின் ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் , கதாசிரியர் , கலவரத்தினுள் அகப்பட்ட இளங்கோ என்னும் இளைஞனின் நிலையினை உயிரோட்டத்துடன் விபரிக்கின்றார். தன் சொந்த மண்ணில் இனத்துவேசிகளால் சிக்கவைக்கப்பட்டுள்ளதாக உணரும் இளங்கோ அந்தப்பூதங்களிலிருந்து தன்னால் முடிந்த அளவுக்குத்தப்புவதற்கு முயற்சி செய்கின்றான். இப்படைப்பானது கலவரத்தைப்பற்றிய , இளங்கோ என்னும் மனிதனின் பார்வையில் , நெஞ்சினை வருத்தும் வகையிலான ஆசிரியரின் விபரிப்பாகும்.
சாதாரண வாசகரொருவரை இந்நூலின் நேரடியான கூறுபொருளும், நடையும் எழுச்சியூட்டும். ஆயினும், இந்ந நூலானது பலபடிகளில் அர்த்தங்களைத்தருவதிலும், தகவல்களின் விபரிப்புகளில் பொதிந்திருக்கும் ஆழ்ந்த அறிவுமிக்க கருத்துகளிலும், விமர்சனத்துக்குரிய சிக்கலான எண்ணங்களைக்கொண்டிருப்பதிலும் மிகவும் வியப்பூட்டுவதாகும். இது வெறுமனே 83 கலவரத்திலிருந்து தப்பிக் கனடாவுக்குச் சென்ற இளங்கோ என்பவனின் கதை மட்டுமில்லை. கதாசிரியர் பல சவால்மிக்க விடயங்களை, சட்டவிரோதக்குடிவரவாளன் என்ற நிலை அப்பாவி மனிதனொருவன் மேல் திணிக்கப்பட்டமை, அமெரிக்கா போன்ற அபிவிருத்தியடைந்த நாடொன்றில் மறுதலிக்கப்பட்ட மனித உரிமைகள், தடுப்புமுகாமின் கடுமையான வாழ்க்கை, சமூகக் காப்புறுதி அட்டை இல்லாததால் வேலை தேடுவதில் ஏற்படும் இன்னல்கள், ஹரிபாபு, ஹென்றி போன்ற நடைபாதை வியாபாரிகளின் தந்திரங்கள், பீட்டர், பப்லோ போன்ற முகவர்களின் சுரண்டல் நடவடிக்கைகள், சட்டத்தரணி அனிஸ்மன்னின் கோழைத்தனம், எல்லாவற்றுக்கும் மேலாக நியூயார்க் நகரில் வசிக்கும் சட்டவிரோதக்குடிவரவாளர்கள் அங்கீகரிக்காமை போன்ற பல விடயங்களைப்பற்றி இந்நூலில் உரையாடுகின்றார். அனைவரையும் கவரும் தன்மை மிக்க நகரின் மறுபக்கம் நாவலின் நாயகனை மட்டுமல்ல வாசகர்களையும் அதிர்ச்சியடைய வைக்கின்றது.