” அவுஸ்திரேலியா மெல்பனில் 1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை மாணவர் கல்வி நிதியம் தங்கு தடையின்றி இயங்கி 28 ஆண்டுகளை நிறைவுசெய்து மற்றும் ஒரு புதிய ஆண்டில் கால் பதிக்கின்றது. இதுவரை காலத்தில் இலங்கையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிய இந்நிதியம், இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கும் அன்பர்களின் பேருதவியினால் அனுப்பி பட்டதாரிகளாக்கியுள்ளது. எனினும் இலங்கையில் நீடித்த போரினால் பாதிப்புற்ற தமிழ் மாணவர்களின் தேவைகள் நீடித்துக்கொண்டே இருக்கின்றன.”
இவ்வாறு கடந்த ஞாயிறன்று ( 16 ஆம் திகதி) அவுஸ்திரேலியா மெல்பனில் நடைபெற்ற இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் 28 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டத்தில் தலைமையுரையாற்றிய நிதியத்தின் தலைவர் திரு. விமல் அரவிந்தன் குறிப்பிட்டார். மெல்பன், வேர்மண் தெற்கு சமூக மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிதியத்தின் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர். இலங்கையிலும் உலகநாடெங்கிலும் போர்களினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் உயிரிழந்த மக்களுக்கும், கடந்த ஆண்டு இறுதியில் மறைந்த நிதியத்தின் முன்னாள் தலைவர் எழுத்தாளர் திருமதி அருண். விஜயராணியை நினைவுகூர்ந்தும் ஒரு நிமிடம் மௌனம் அனுட்டிக்கப்பட்டது. நிதியத்தின் 2015- 2016 ஆண்டறிக்கையை துணை நிதிச்செயலாளர் திரு. லெ. முருகபூபதியும் நிதியறிக்கையை நிதிச்செயலாளர் திருமதி வித்தியா ஶ்ரீஸ்கந்தராஜாவும் சமர்ப்பித்தனர்.