இடைச் சங்ககாலத்தில் எழுந்த தொல்காப்பியம் என்ற அரும் பெரும் மூத்த நூலை ‘ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்’ எனப் போற்றப்பெறும் தொல்காப்பியனார் (கி.மு. 711) என்பவர் யாத்துத் தந்தனர். தொல்காப்பியம் -எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களைக் கொண்டJ. அவை ஒவ்வொன்றும் ஒன்பது இயலாக வகுக்கப் பட்டுள்ளன. இதில், பொருளதிகாரத்தை அகத்திணையியல், புறத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களாக அமைக்கப்பட்டுள்ளன. மெய்ப்பாடு என்ற சொல்லுக்கு, புகழ், உண்மை, உள்ளத்தின் நிகழ்வு புறத்தார்க்கு வெளிப்படுத்தல், இயற்கைக் குணம் ஆகியவற்றை அகராதி கூறும். இதில் மெய்ப்பாட்டியல் என்ற இயல் கூறும் தன்மையினை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்காகும்.
மெய்ப்பாட்டியலை- மெய்ப்பாடுகளின் வகை, எண்வகை மெய்ப்பாடுகள், ஐந்திணைக்குரிய மெய்ப்பாடுகள், ஏனைத் திணைக்குரிய மெய்ப்பாடுகள், புறனடை என ஐவகையாக வகுத்துக் காண்பர் தொல்காப்பியர்.
(1) மெய்ப்பாடுகளின் வகை
1. விளையாட்டு ஆயத்தின்கண் தோன்றிய முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று கூறுவர்.
‘பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப.’ – (பொருள். 245)
2. மேற்கூறப்பட்ட பதினாறு பொருளும், எட்டாக வரும் இடமும் உண்டு. அவையாவன, குறிப்புப் பதினெட்டனையும் சுவையுள் அடக்கிச் சுவையை எட்டாக்கி நிகழ்த்துவதாகும்.
‘நாலிரண் டாகும் பாலுமா ருண்டே.’ – (பொருள். 246)