ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்துத் தெருக்களில் ‘டபுள் டெக்கர் பஸ்’கள் ஓடித்திரிந்தன. எழுபதுகளின் இறுதிவரையில் ஓடியதாக ஞாபகம். கே.கே.ஸ். வீதிவழியாக மானிப்பாய் வரையில் அவ்விதமோடிய ‘டபுள் டெக்கரில்’ சில தடவைகள் பயணித்திருக்கின்றேன். ‘டபுள் டெக்கரில்’ பயணிக்கையில் எனக்கு எப்பொழுதுமே மேற்தட்டில் பயணிப்பதுதான் விருப்பம். ‘டிக்கற்’ எடுத்ததுமே மேலுக்கு ஓடிவிடுவேன். மேல் தட்டிலிருந்தபடி இருபுறமும் விரியும் காட்சிகளைப்பார்த்தபடி, அவ்வப்போது பஸ்ஸுடன் உராயும் இலைகளை இரசித்தபடி செல்வதில் அப்பொழுது ஒரு ‘திரில்’ இருக்கத்தான் செய்தது.
‘டொராண்டோ’வில் உல்லாசப்பிரயாணிகள் நகரைச்சுற்றிப்பார்ப்பதற்காக இவ்விதமான ‘டபுள் டெக்கர்’ பஸ்களை இன்னும் பாவிக்கின்றார்கள். அவற்றைப்பார்க்கும் சமயங்களிலெல்லாம் அன்று யாழ்ப்பாணத்தில் ‘டபுள் டெக்கரி’ல் பயணித்த பால்ய காலத்து அனுபவங்கள்தாம் நினைவுப் புற்றிலிருந்து படம் விரிக்கும். ‘டபுள் டெக்கரில்’ பயணிப்பதைப்பற்றி ஏன் துள்ளிசைப்பாடகர்கள் ‘டபுள் டெக்கரில்’ பஸ்ஸில் போனேனடி!’ என்று பாடல்கள் எதுவும் எழுதவில்லை என்று இவ்விதமான சமயங்களில் தோன்றுவதுண்டு.
‘டபுள் டெக்கர்’ பஸ் என்றதும் ஞாபகத்துக்கு வரும் இன்னொரு விடயம். நண்பரொருவர் மானிப்பாய்ப்பக்கமிருந்து வருபவர். அவரது High school sweet heart’ ஒருவர் யாழ் வேம்படியில் படித்துக்கொண்டிருந்தார். இவர் என்ன செய்வாரென்றால் பாடசாலை முடிந்து அந்தப்பஸ்ஸில் பயணிக்கும் அந்தப்பெண்ணைப்பார்ப்பதற்காக, அவரது கவனத்தைக் கவர்வதற்காக யாழ் பொது சனநூலகத்துக்குச் சென்று , காத்திருந்து, பாடசாலை முடிந்து அந்த பஸ்ஸில் பயணிப்பார். ஒருபோதுமே நூலகப்பக்கமே செல்லாத நண்பன் இவ்விதம் நூலகம் சென்றது அக்காலத்தில் எமக்கு வியப்பினைத்தந்தது. பின்னர்தான் உண்மை புரிந்தது. ஆனால் அவரது முயற்சி அவருக்கு வெற்றியளிக்கவில்லை. இவ்விதம் யாழ்ப்பாணத்து ‘டபுள் டெக்கர்’களில் பல காதல் காவியங்களும் நிகழ்ந்ததுண்டு 🙂 காதல் காவியங்கள் எல்லாமே தோல்வியில் முடிபவைதாமே. 🙂 அந்த வகையில் நண்பரின் காதலும் காவியமாகிவிட்டது. 🙂