மொழி என்பதோர் திரவிய கூடம் தாகத்தோடும் தேடலோடும் அதன் உட்புகுந்து தெரிதல் நிகழ்த்தும் ஒருவன் மொழிசார் கலைவடிவங்கள் எதையேனும் தனது படைப்புகளைத் தரும் ஒரு ஊடகமாகக் கொள்ளுதல் இயலும். அத்தகைய ஒரு தெரிதலின்போது, அவன் தனது அனுபவங்கள் மூலம் வடிவமைத்துக் கொண்ட நுண்புலனின் திறனைப் பிரயோகிக்கிறான். அந்த நேரத்தில் அவன் தெரிவு செய்கிற சொற்கள் தேர்ந்து கொள்கிற சொல்முறை வெளிப்படுத்துகிற உணர்வுகள் எல்லாம் ஒருங்கிணைந்து அவனுக்கான கலைவடிவ உருவாக்கத்தைத் தீர்மானிக்கின்றன.
மேற்சொன்ன கிரியை கவிதை படைத்தல் குறித்து நிகழ்த்தப்படும்போது, ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பாளுமையின் வலிமையைப் பிரயோகிக்க நேர்கிறது. அது ஒரு திட்டமிட்ட பொறிமுறையுமல்ல. கவிதை படைத்தலுக்கான கணங்கள் சம்பவிக்கையில் ஒரு நுண்மையான உட்புலனுணர்வின் உந்துகை அவனது படைப்பை வெளிக்கொணர்கிறது. ஒரு குறித்த சொல் அல்லது ஒரு தொடர், ஒரு நினைவுக்கீற்று எதுவாயினும் அந்தப் படைப்பின் அடிப்படையாக அமையமுடியும். அதனை அடியொற்றி அவன் கட்டமைக்கின்ற கவிதையின் வைப்பொழுங்கு அதில் வெளிப்படுகின்ற உணர்வு அந்த உணர்வு வெளிப்படுத்தப்படுகின்ற முறைமை என்பனவெல்லாம் இணைந்து அந்தப் படைப்பின் சிறப்பைத் தீர்மானிக்கின்றன. படைப்புக்கான உந்துதல் ஒருவனைக் கவிதையில் வழிநடத்தும்போது அவனது பார்வை அங்கு பிரதானத்துவம் கொள்கிறது.
குறித்த ஒரு விடயம் பற்றிய பார்வை அல்லது அணுகுமுறை ஆளுக்காள் வேறுபட முடியும். உதாரணத்துக்கு காகக்கூட்டில் ஜனித்து, காகங்களாலேயே போஷிக்கப்பட்டு வளர்கிற ஒரு குயிற்குஞ்சு இனங்காணப்படுகின்ற தருணம், தாயென்றும் தந்தையென்றும் எண்ணிக் கொண்டிருந்த காகங்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகிக் கொத்தித் துரத்தப்படுகின்ற அந்தப்போதுகள்… ஒரு கலைஞனால் பார்க்கப்படுவதற்கும் சாதாரண மனிதனால் பார்க்கப்படுவதற்கும் ஒரு கவிஞனால் பார்க்கப்படுவதற்கும் இடையில் நிறைய வித்தியாசங்களிருக்கின்றன.
இத்தகைய ஒரு தவிப்பும் துயரும் சவாலும் நிரம்பிய தருணம் குறித்துத் தனது உணர்வுகளைப் பதிவு செய்ய விழையும் ஒரு கவிஞன் அற்புதமானதோர் கவிதையைப் படைத்துவிடமுடியும்.