பறை என்பதை ஆதிகாலம் தொடக்கம் இற்றைவரை தென் இந்தியத் தமிழ் நாட்டு மக்களும், சிறி – இலங்காவின் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களும் தம் இசைக் கருவியாகப் பாவித்து வருகின்றனர். பறை என்பதற்கு முரசு, முரசொலி, தட்டு, கொட்டு, மிடா, முரசடிப்பவர் என்றும் அகராதிச் சொற்கள் உள. பறை என்றால் ‘அறிவித்தல்’ என்ற பொருளும் உண்டு. இது தமிழரின் பாரம்பரிய இசைக் கருவியுமாகும். இது எல்லாத் தோல் இசைக் கருவிகளுக்கும் தாய்க் கருவியாகும். இதன் ஒலி அரைக் கி.மீ. தூரம் வரை சென்று அங்குள்ளோரைத் தன்வசப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.
ஆதிகாலத்தில் கூத்தாடல், பிண ஊர்வலம், கோயில் திருவிழா, விளையாட்டு நிகழ்ச்சிகள், அறுவடை காலத்தில் விழா நடத்துவதற்கும், பறவைகளைத் துரத்துவதற்கும், போர் காலத்தில் வெற்றி தோல்வி அறிவிக்கவும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கட்டளைகள், செய்திகள். உத்தரவுகள் ஆகியன அறிவிக்கவும், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றிற்குப் பறையினைப் பெரும்பாலும் பாவித்தனர். மேலும், சுகப் பிரசவம் வேண்டிக் கோயில்களில் பறை முழக்குவதும் அன்றிலிருந்து இற்றைவரை காணக்கூடிய தெய்வ நம்பிக்கைக்குரிய ஒரு நிகழ்ச்சியாகும். இன்னும், ஒரு சிலர் கோயிற்; பூசை நிகழ்வின்போது தெய்வ உருவெடுத்துக் குறி கூறுவதையும் காண்கின்றோம். இதன்போது பறையை அடித்து அடித்து உருவேற்றுவர் பறையடிப்பவர்கள்.
பறை பசுவின் தோலால் ஆக்கப்பட்டது. அதை இரண்டு தடிகளால் அடித்து முழக்குவர். அதில் ஒரு தடி 28 செ.மீ. நீளமுடையது. மற்றத் தடி 18 செ.மீ. நீளமுடையது. இரு தடிகளும் மூங்கில் தடிகளாகும். பறையை நின்று கொண்டும், நடந்து கொண்டும், இருந்து கொண்டும் அடிப்பார்கள். பறையின் முரசறைவை 1. ஒத்தையடி என்றும், 2. தென்மாங்கு என்றும், 3. சாமியாட்டம் என்றும், 4. துள்ளல் என்றும், 5. உயிர்ப்பு என்றும் வுகுத்துக் கூறுவர்.
பறையில் பல்வேறுபட்ட பறைகள் உள்ளன. அவற்றில் 1. ஆரியப் பறை, 2. ஆறிருப் பறை, 3. உவகைப் பறை, 4. சாப் பறை, 5. வெற்றியின் பறை, 6. மீன்கோற் பறை, 7. மருதநிலப் பறை, 8. குறவைப் பறை, 9. தடாருப் பறை, 10. குறும் பறை, 11. கேற் பறை, 12. தடாரிப் பறை, 13. நிசாளம் பறை, 14. தலைப் பறை, 15. பண்டாரப் பறை, 16. பான்றிப் படை, 17. முருகியம் பறை, 18. வெறியாட்டுப் பறை, 19. வீரணம் பறை, 20. பஞ்சமாசதம் பறை என்பவை ஒரு சிலவாகும்.