கவிதைகள் சார்ந்து தமிழ் மொழியிலும், பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் தொடராக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை கவிதைகளாக, கவிதை பற்றிய ஆய்வுகளாக, கவிஞர்கள் சேர்ந்த தொகுப்புகளாக, கவிஞரின் தனி நூலாக என பல்வகைத் தளங்களில் உலாவருகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் தமிழ்மொழிக்கு இன்னொரு புதிய வரவாக ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூல் கிடைக்கின்றது. பல்வேறு நாடுகளினைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமான கவிஞர்களின் கவிதைகளினை ஒரே நூலில் காணும் வாய்ப்பினை வழங்கும் நூலே ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலாகும்.
2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இந்த நூலுக்கான கவிதைகள் பெறுவது தொடர்பான செய்திகள் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணைய ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் என்பவற்றில் வெளிப்படுத்தப்பட்டன. உலக அளவில் ஆகக்குறைந்தது 25 நாடுகளின் கவிஞர்களையாயினும் இணைப்பதே இப்பணியின் முதல் இலக்கு எனினும் பணி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்குள்ளாகவே பாரிய வரவேற்பு உலகெங்கிலும் இருந்து கிடைத்தது. ஒவ்வொரு தேசங்களில் இருந்தும் கவிதைகளினை பெறும்பொருட்டு அந்தந்த தேசங்களுக்கு ‘செயலாற்றுநர்’ எனும் பணியில் பலர் ஈடுபட்டனர். இலங்கை, இந்தியா போன்ற தேசங்களுக்கு மாவட்ட ரீதியாகவும், மாநில ரீதியாகவும் செயலாற்றுநர்கள் இயங்கினர். செயலாற்றுநர்களின் தீவிரமான முயற்சியினால் விரைவாகவே கவிஞர்கள் நூலுடன் இணைந்துகொள்ளத் தொடங்கினர். குறிப்பாகச் சொல்வதென்றால் இந்தியா தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களின் கவிஞர்களும் இப்பெருநூலில் இடம்பெறுகின்றனர். இலங்கையின் அனைத்துப் பிரதேச கவிஞர்களும் பெருநூலுக்கு கவிதை அளித்துள்ளனர்.
‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலில் 32 நாடுகளின் 1098 கவிஞர்கள் இடம்பெறுகின்றனர். நூலின் மொத்தப் பக்கங்கள் 1861 ஆகும். இப்பக்கங்கள் ஏ4 தாள் அளவு கொண்டவை. நூலொன்றின் மொத்த நிறை 04.415 கிலோகிராம் ஆகும். நூலினை வள்ளுவர்புரம் செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடுகின்றது.
இலங்கையின் மூத்த கவிஞர்கள் என சொல்லத்தக்கவர்கள் பலரும் பெருநூலினை அலங்கரிக்கின்றனர். சேரன், சோ.பத்மநாதன், எம்.ஏ.நுகுமான், அனார் என இப்பட்டியல் நீள்கின்றது. இந்திய அளவில் மூத்த, இளைய, சினிமாசார் கவிஞர்கள் என பலரும் நூலில் உள்வாங்கப்பட்டனர். அப்துல் ரகுமான், வைரமுத்து, கலைஞர் கருணாநிதி, கமல்ஹாசன், அறிவுமதி, பா.விஜய், தாமரை என யாவரும் இப்பெருநூலில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நூலின் பின் அட்டைக்குறிப்பினை தமிழுலகு அறிந்த உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் வரைந்திருக்கின்றார்.
நூலில் 12 வயதுடைய பிள்ளைக்கவி முதல் தொண்ணூறு வயது கடந்த கவிஞர்கள் வரையும் இடம்பெற்றுகின்றனர். இந்தியா தமிழ்நாட்டின் மாவட்டங்கள் தவிர புதுடில்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களின் கவிஞர்களும் நூலில் இடம்பெறுகின்றமை சிறப்பு.