[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த ‘தாயகம்’ பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் ‘அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்’ என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த ‘மண்ணின் குரல்’ தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் ‘பதிவுகள்’ இணைய இதழில் வெளியாகின்றது. மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க ‘புதிய பாதை’ என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் ‘புதிய பாதை’ என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான ‘டீச்சர்’ பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் ‘புதிய பாதை’ என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் ‘புதிய பாதை’ என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]
அத்தியாயம் பத்து! அகலிகையும், அவளும் !
அவன் சென்று நெடுநேரமாகி விட்டிருந்தது. இவளுக்கு நித்திரை வரமாட்டேன் என்கிறது. மனம் ஒரு நிலையில் நிற்கமாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. படுக்கையில் புரண்டு புரண்டு படுக்கிறாள். அலுப்பாக, மனம் சினக்கிறது. எழுந்து ‘லைற்’றைப்போட்டாள். கண்ணாடியில் தெரிந்த உருவத்தை ஒருவித ஆர்வத்துடன் முதன்முறையாக பார்ப்பதுபோல் பார்க்கிறாள். கூந்தல் விரிந்து தோள்களில் புரண்டு நிற்கிறது. அழகான உதடுகளை உவப்புடன் எடை போட்டாள். கூரிய அகண்ட பெரிய கண்களை வியப்புடன் நோக்கினாள். அவளுக்கு தன்னை நினைக்க சிரிப்பாக இருந்தது. அதே சமயம் பெருமிதமாகவும் இருந்தது. கர்வம் கூட ஓரத்தே எட்டிப்பார்க்கவும் செய்யாமலில்லை. ஏதாவது குடித்தால் பரவாயில்லை போல் பட்டது. பிரிட்ஜிலிருந்து ‘ஓரென்ஜ் யூஸ்” எடுத்துப் பருகியபடி சோபாவில் வந்தமர்ந்தாள். ரி.வி.யைத் தட்டினாள். குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை. ஊர் ஞாபகம் வந்தது. கடை குட்டிகளின் ஞாபகம் வந்தது. இந்நேரம் ஆவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? ஏ.கேயும் கையுமாக ஏதாவது சென்றிகளில் நிற்பார்களோ? அல்லது தாக்குதலில் முன்னணியில் நிற்பார்களோ? இவ்வளவு துணிச்சல் அந்தப் பிஞ்சுகளுக்கு எப்படி வந்திருக்க முடியும்? இவளால் அவர்களை உணர்ந்துகொள்வது கஷ்டமாக இருந்தது. சிறுவனின் ஞாபகம் கூட எழுந்தது. சிறுவனின் நட்பு நெஞ்சில் இதமாக இருந்தது. கணவனின் ஞாபகம் எழுந்தது. நெஞ்சில் ஒருவித கனிவு படர்ந்தது. அவனது நெஞ்சிலே படர்ந்து அடங்கி மனப்பாரத்தை இறக்கவேண்டும் போலிருந்தது. நான் எவ்வளவு தூரம் இன்னமும் அவரை விரும்புகிறேன். ஏன் அன்று என் உணர்வுகளுக்கு அடிமையாகிப்போயிருந்தேன்? தன்னையே கேட்டுக்கொண்டாள். எதற்காக? எதற்காக அவர் என்ன குறை வைத்தார். பின் எதற்காக? ஏன் அவ்விதம் நடந்து கொண்டேன்? பதில் அவ்வளவு சுலபமாக கிடைப்பதாக தெரியவில்லை. அன்று இவ்விதம் நடந்துகொண்ட நான் பின் எதற்காக அவர் இன்று நடந்து கொண்ட முறையைக் கண்டு கோபப்பட்டேன்? இவரை நான் உண்மையிலேயே விரும்புகிறேனோ? என் அடிமனதில் இவருடன் வாழ்வதை நான் உண்மையிலேயே விரும்பவில்லையா? எதற்காக என்னுள் இத்தனை முரண்பாடுகள். இப்படித்தான் பொதுவில் எல்லோருமா? அல்லது நான் தான் வித்தியாசமானவளோ? நான் நடந்த முறை தெரிந்தும் இவர் எப்படி என்னை ஏற்க முனைந்தார்? என்னில் ஏற்பட்ட கோபத்தை விட அவர் என்னை விரும்புகிறாரா? இவ்வளவு நிகழ்வுகள் சம்பவித்தபின்னும் இன்னும் அவருடன் சேர்ந்து வாழ்வது இயலக்கூடியது தானா? என்னால் தான் இயல்பாக இருக்கமுடியுமா? இவருக்கு துரோகம் செய்த நான் எதற்கு இன்று இவ்விதமாக ஆசைப்படுகின்றேன். நான் சுயநலக்காரியா? இந்தக் கேள்விகளைக் கேட்பதன்மூலம் தன்னை மேலும் அறிய முயன்றாள். இவ்வாறான நேரங்களில் சோர்வு நீங்கி ஒருவித தென்பில் மனம் துள்ளி எழுந்து விடுகிறது. செய்த செயல்களில் சரி,பிழைகளை சரியாக இனம் காண்பதன் மூலம் தவறுகளுக்கு பொறுப்பேற்பதன்மூலம் மனம் சுத்தமாகிவிடுகிறது. ஆடிப்பாடத் தொடங்கிவிடுகிறது.