எளநீர் மனசழகி எதுக்கு இந்த எளஞ்சிரிப்பு! ( கிராமியப் பாடல்)

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

எளநீர் மனசழகி எதுக்கிந்த எளஞ்சிரிப்போ!
வளமான கிராமத்து வனப்பெண்ணிச் சிரிக்கிறியோ!
குளத்தோரக் காற்றின் குளுகுளுப்பில் கும்மாளமோ!
களவான எண்ணத்துக் குறுகுறுப்பில் சிரிக்கிறியோ!
அளந்து வெச்சயிந்த அழகான எளஞ்சிரிப்போ!

எடுத்த வெச்ச மச்சான் வரிக்கு
எசப்பாட்டுத் தேடறியோ!
எகத்தாள வரியெடுத்து ஏளனஞ் செய்வாயோ!
எதிர்காலம் எப்படியோவென்று எண்ணங்கள் தடுமாறுதோ!
எடுத்துச் சொல்லடி ஏனிந்த எளஞ்சிரிப்போ!

தனியே சிரிச்சாக்க தப்பாக நினைப்பாக
குனிந்ததலை நிமிராத குலவிளக்கா இருக்கோணுமடி!
கனிமரம் நீயடி கலகலப்பைக் குறைச்சிடடி!
செனிச்ச பயன் சீராகச் சிறப்பைச் சேரடியோ!
தனிமை எதுக்கடி தண்ணிக்கொடம் நிறைச்சிடடி!

Continue Reading →

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவுநுட்பம்

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இன்றைய அறிவியல் உலகில் அண்டவெளி பிரபஞ்சத்தை பற்றி (Universal) நொடியொரு பொழுதும் ஆராய்ந்து கொண்டே வருகின்றனர்.  நீண்ட மனித வாழ்வின் அறிவியல் தேடலும், நவீன அறிவியல் கருவிகளின் வரவுமே இவ்வுலகை இன்று ‘அறிவியல் யுகமாய்’ மாற்றியிருக்கின்றது.  ஆனால் பண்டைய காலம் அப்படி இல்லை.  ஊழி காலத்துள் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்வதற்கான போராட்டம் மிகப்பெரும் சவாலாக விளங்கியது.  பின்னர் தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றி ஆய்வினில் இறங்கினர்.  அதனால் இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வினை அதனோடு இயற்கைப் புறவெளியையும் ஆய்ந்தனர்.  அறிவியலுள் ‘வானியல் அறிவும் பண்டைத் தமிழகத்துள் மிகுந்திருந்தது.  வான்வெளியில் நிகழும் மாற்றங்கள், கோள்களின் இயக்கப் போக்குகள் அதனால் புவியில் ஏற்படும் மாற்றங்கள், பருவ மாற்றங்கள் என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்தனர்.

பண்டைய இந்தியாவிலும், ‘வானியல் அறிவு’ சிறப்பாக இருந்தது என்பர்.  “ரிக் வேதத்தின் மூலம் வேதகாலத்து இந்தியர்கள் வானியல் சிந்தனைகள், சூரியனின் பாதை சந்திரனின் பருவங்கள், கோள்களின் இயக்கம் போன்றவற்றைப் பற்றிய தேவையான அறிவைப் பெற்றிருந்தனர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.  சந்திரனை அடிப்படையாக வைத்து மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.  சந்திரனுக்கு ‘மாச கிருத்தா அல்லது மாதத்தை உருவாக்குபவர்’ என்ற பெயரும் உண்டு.  சந்திர மாதங்களின் பெயர்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி ஏற்படுகிறதோ அந்தந்த நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.  ‘சந்திரனின் வீடுகள்’ (Iunarmansions) என்றழைக்கப்படும் நட்சத்திர இராசி முறை இந்தியாவிற்கே உரித்தான ஒன்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(பக். 67 கு.வி. கிருட்டிணமூர்த்தி, அறிவியலின் வரலாறு)

தமிழ் மாநிலத்துள் ஐநில மக்களின் வாழ்வும் இயற்கைச் சூழலுக்கேற்ப அமைந்திருந்தது.  கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய 6 – வகை பருவங்களை வகுத்து, அப்பருவங்களுக்கு ஏற்ப வாழ்வு அமைத்து இயற்கை வாழ்வு வாழ்ந்தனர்.  ஞாயிறு, திங்கள் பிற கோள்கள், நட்சத்திரங்களின் இயல்புகள் சிலவற்றை கண்டறிந்தனர்.  அதன் அடிப்படையில் கால கணிதம் தோற்றுவித்தே ஒவ்வொரு நிகழ்வினையும் செய்தனர்.  பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள் வரையும் வானின் செயல்களை வைத்தே நிகழ்வினை செய்தனர்.

Continue Reading →

அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!

அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!
அனிதாவுக்கு அஞ்சலி!அனிதா: ஒரு கணமேனும் ஒளிர்ந்திட்ட சிறு மின்னல் நீ!


‘ப்ளஸ் டூ தேர்வில்’ 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், ‘நீட்’ தேர்வு காரணமாகத் தன் வாழ்வை முடித்துக்கொண்ட மாணவி அனிதாவின் மறைவுச் செய்தி இன்று என்னை மிகவும் பாதித்த செய்தி. வறுமைச்சூழலிலும் அவர் திறமையாகப் படித்திருக்கின்றார். ப்ளஸ் டூ’வில் 1176 மதிப்பெண்கள் வாங்கியிருக்கின்றார். இவ்விதம் திறமையாகச் சித்தியடைந்திருந்தும் அனிதாவுக்கு மருத்துவ பீடத்துக்கான இடம் கிடைக்கவில்லை. முறையற்ற அமைப்பு அநியாயமாக ஒரு திறமையான மாணவியின் உயிரைப்பறித்துள்ளது.


அனிதா! உன் விடாமுயற்சியாலும், திறமையாலும் நீ உன்னைப்பெற்றவர்களுக்குப் பெருமை சேர்த்தாய். நீ பிறந்த மண்ணுக்குப் பெருமை சேர்த்தாய். இருந்தும் உன்னை இந்த அமைப்பு பாதுகாக்கத்தவறி விட்டதே! ஊழற் பெருச்சாளிகளையெல்லாம் காப்பதற்காகக் கோடிகளைக் கொட்டும் நீ பிறந்த மண்ணில் இறுதி நேரத்தில் உன்னைக் காப்பாற்ற யாருமில்லையே என்பது சோகத்தைத்தருகின்றது. புது தில்லி வரை சென்று போராடிய உன் துணிச்சலை நான் போற்றுகின்றேன். உன் முடிவு சோகத்தைத்தந்தாலும், எதிர்காலத்திலாவது அனிதாக்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படும் நிலை உருவாகவாவது உன் முடிவு வழி கோரட்டும். இருந்தாலும் உன் முடிவானது மிகப்பெரிய இழப்பு. ஈடு செய்ய முடியாத இழப்பு.

உனது முயற்சியும், திறமையும் எல்லோருக்கும் அவ்வளவு இலேசில் கிடைத்துவிடுவதில்லை. உனக்கு அவை கிடைத்திருந்தன . இருந்தும் அவற்றை யாரும் இனங்காணவில்லையே என்பது இதயத்தைத் தாக்குகின்றது. ஆனால், உனது முடிவால் உன்னை இம்மண் இழந்து விட்டாலும், நீ வரலாற்றில் எப்பொழுதும் நிலைத்து நிற்பாய். எத்தகைய சூழலிலும் திறமையாகக் கற்க முடியுமென்பதற்கு உன் சாதனைகள் முன்மாதிரியாக இருக்கட்டும். சிறுமியாகத் தனித்து உன் உரிமைக்காக நீதி கேட்டுப் புது தில்லி வரை சென்றாயே. அந்தப்போர்க்குணத்தால், மனவுறுதியால் நீ எல்லோர் உள்ளங்களிலும் நிறைந்து விட்டாய்.

Continue Reading →

வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 2 (சென்ற இதழ் தொடர்ச்சி) , கண்டவர்: கே.எஸ்.சுதாகர் [ஞானம் , இலங்கை, சஞ்சிகையின் செப்டம்பர் 2017 இதழில் வெளியானது.]

வ.ந.கிரிதரன் நேர்காணல் பகுதி 2 – இலங்கையிலிருந்து எழுத்தாளர் தி.ஞானசேகரனை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் ‘ஞானம்’ மாத சஞ்சிகையின் ஆகஸ்ட் 2017 இதழில் நேர்காணலின் முதற் பகுதி வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அது இங்கு மீள்பிரசுரமாகின்றது. –

(வ.ந.கிரிதரன் மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டிடடக்கலை பயின்றவர். இலங்கையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அதிகார சபை ஆகியவற்றில் பணிபுரிந்தவர். கனடாவிற்குப் புலம்பெயர்ந்த பின்னர் அங்கு இலத்திரனியல் பொறியியல் மற்றும் தகவல் தொழில்னுட்பத்துறையில் தகமைகள் பெற்றுள்ளார். சிறுகதை, கவிதை, கட்டுரை, ஆராய்ச்சி மற்றும் நாவல் என்ற துறைகளில் தனது பங்களிப்பைச் செலுத்தியுள்ளார். அத்துடன் 2000ஆம் ஆண்டிலிருந்து ‘பதிவுகள்’ (pathivukal – http://www.geotamil.com/)  என்னும் இணைய இதழையும் நடத்தி வருகின்றார். ‘’குடிவரவாளன்’ நாவல், ’அமெரிக்கா’ நாவல்/சிறுகதைகள் தொகுப்பு,, ‘மண்ணின் குரல்’ நான்கு நாவல்களின் தொகுப்பு , ’நல்லூர் ராஜதானி: நகர அமைப்பு’ , ‘எழுக அதிமானுடா’ (கவிதைத்தொகுப்பு) மற்றும் ‘மண்ணின் குரல்’ (நாவல் கட்டுரை மற்றும் கவிதைகளின் தொகுப்பு) போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார்.)


நேர்காணல் பகுதி 2

9. நீங்கள் எழுதிய அறிவியல் / அமானுஷ்ய சிறுகதைகள், புகலிட வாழ்வனுபவம் சார்ந்த படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.

எனக்கு அறிவியற் துறையில் மானுட இருப்பினை அறிந்து கொள்வதற்குரிய துறைகள் மிகவும் பிடிக்கும். உளவியல், உயிரியல், மானுட சமுதாயப்பொருளியல் மற்றும் வானியற்பியல் ஆகிய துறைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவற்றில் வானியற்பியல் எப்பொழுதும் என்னை மிகவும் கவர்ந்த துறை. என் சிந்தனையை விரிவு வைக்கும் துறை. இத்துறையில் ஸ்டீபன் ஹார்கிங்ஸ், பிரயன் கிறீன் மற்றும் மிஷியோ ககு போன்றொர் சாதாரண மக்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதிய வானியற்பியல் சம்பந்தமான அறிவியல் நூல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இவர்கள் யாவரும் சிறந்த அறிவியல் அறிஞர்கள். தாங்கள் அறிந்ததை, புரிந்துகொண்டதை, கண்டு பிடித்ததை எல்லாம் சாதாரண மக்களும் அறிந்துகொள்வது அவசியம் என்று கருதுபவர்கள். ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம், குவாண்ட இயற்பியல் போன்ற துறைகளைப்பற்றி சாதாரண வாசகர்களும்  புரியும் வகையில் இவர்கள் எழுதினார்கள். பிரபஞ்சம் பற்றிய இவர்கள் பற்றிய கருதுகோள்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. குறிப்பாக மூன்று பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்களை உள்ளடக்கி உயிரினங்கள், இப்பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சங்கள் இருக்கக் கூடிய சாத்தியங்களைப்பற்றியெல்லாம் இவர்களின் நூல்கள் விபரித்தன.  இப்பல்பரிமாண உலகும், உயிர்களும் இருக்கக்கூடிய சாத்தியங்கள் எப்பொழுதும் எனக்கு மிகவும் வியப்பினைத் தந்த அதே சமயம் என் சிந்தனையையும் கேள்விகளுக்குள்ளாக்கி விரிவுபட வைத்தன. நான்  எழுதிய அறிவியற் சிறுகதைகளில் ‘தேவதரிசனம்’ மற்றும் ‘நான் அவனில்லை’ ஆகியவை  முப்பரிமாணங்களுக்கும் அதிகமான பரிமாணங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு’ ‘தொலைகாவுதல்’ (Teleporting) என்னும் அடிப்படையில் ஆத்மா என்னும் தத்துவத்தையும் இணைத்துச் சிந்தித்ததன் விளைவாக உருவான சிறுகதை.

Continue Reading →