வாசிப்பும், யோசிப்பும் 272: நடிகர்கள் நாட்டின் செல்வங்கள்!

நடிகை ஸ்ரீதேவிஅண்மையில் நடிகை ஸ்ரீதேவி மறைவினையொட்டி நடைபெற்ற அவரது இறுதி நிகழ்வில் நடைபெற்ற ஒரு விடயம் என்னைக் கவர்ந்தது. அவரது மரணத்தை மகாராஷ்ட்டிர அரசானது அரச மரியாதைகளுடன் நடத்தி அவரைக் கெளரவித்தது. இது சிலருக்கு மனக்கொதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கூத்தாடிக்கு இவ்வளவு மரியாதை தேவைதானா என்று கேட்கும் இந்தச்சிறுமதிக் கூட்டம்தாம் அக்கூத்தாடிகளின் கலைத்திறமையில் தம் இருப்புப் பிரச்சினைகளையெல்லாம் மறந்து இன்பமடைவது அதிகம். இந்தச்சிறுமதிக்கூட்டம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சினிமா, நாடக நடிகர்களும் எழுத்தாளர்கள் போல், இசைக்கலைஞர்களைப்போல், ஓவியர்களைப்போல் மக்களை அவர்கள்தம் வாழ்வியற் பிரச்சினைகளிலிருந்து சிறிதளவாவது கவனத்தைத் திருப்பி இன்பமடைய வைப்பவர்கள்; வாழ்வுக்கு வேண்டிய ஆரோக்கியமான அறிவுரைகளைத் தம் நடிப்பின் மூலம் உணர வைப்பவர்கள்; நாடொன்றின் பெருமையினை உலகெங்கும் வெளிப்படுத்துவதில் பெரும் பங்காற்றுபவர்கள். எல்லாக் கலைகளிலுள்ளதைப்போல் நடிப்புக் கலையிலும் திறமையான கலைஞர்களுள்ளனர். இவர்கள் ஏனைய துறைக்கலைஞர்களைப்போல் நாடொன்றின் செல்வங்கள். அந்த வகையில் நாடொன்றானது பல்வேறு உயரிய விருதுகளைக் கொடுத்து அவ்வப்போது இக்கலைஞர்களைக் கெளரவிக்கிறது. அதுபோன்றதொரு உயர் கெளரவம் தான் இவ்விதமான அரச மரியாதை என்பதும். அதற்கு முற்றிலும் தகுதியானவர்தான் நடிகை ஸ்ரீதேவி.

தமிழகத்தில் பிறந்த ஒருவரின் இழப்பில் பாரதத்தின் அனைத்து மாநில மக்களும் இன,மத, மொழி , மாநில வேறுபாடுகளற்றுப் பங்குபற்றுகின்றார்கள் என்றால், அரசியல்வாதிகள், நடிகர்கள், பொதுமக்கள் அனைத்துப் பிரிவுகளைச்சேர்ந்தவர்களும் அவர் இழப்பால் துயருகின்றார்கள் என்றால், அங்குதான் நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பாளுமை, திறமை என்பன தங்கியுள்ளன. அனைத்து மக்களையும் பாதிக்கும் வகையில் அவரது கலையுலகப் பங்களிபபு அமைந்துள்ளது. இந்த வகையில் அவரது இறுதிச்சடங்குகளை அரச மரியாதைகளுடன் நடாத்திய மகாராஷ்டிர மாநில அரசினைப்பாராட்ட வேண்டும். ஒரு மாநில அரசுக்கு நாட்டின் செல்வமான கலைஞர்களின் பங்களிப்பைப் பொறுத்து எவ்விதம் கெளரவிக்க வேண்டுமென்று தீர்மானிக்கும் முழு உரிமையுமுண்டு. அது மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கும் உண்டு. அதனை அவர்கள் பாவிக்க வேண்டிய தருணத்தில் சரியாகப் பாவித்திருக்கின்றார்கள்.

Continue Reading →

கட்டக்கலைக்குறிப்புகள் 7 : லெ கொபூசியேவின் (Le Corbusier) நவீனக்கட்டடக்கலைக் கருதுகோள்கள்!

Le Corbusierநவீனக்கட்டடக்கலையின் முன்னோடிகளில் பன்முகத்திறமை வாய்ந்த ஆளுமைகளில் முதன்மையானவர் சுவிஸ்-பிரான்ஸ் கட்டடக்கலைஞரான லே கொபூசியே. சுவிஸில் பிறந்து பிரான்சு நாட்டின் குடிமகனானவர் இவரின் இயற்பெயர் சார்ள்ஸ் எடுவார்ட் ஜென்னெரெ  Charles-Édouard Jeanneret. நகர அமைப்பு, கட்டடக்கலை, ஓவியம், தளபாட வடிவமைப்பு , எழுத்து எனப்பன்முகத்திறமை வாய்ந்த ஆளூமை மிக்கவர் இவர். உலகின் பல நாடுகளிலும் ஐரோப்பா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலெல்லாம் இவரது கை வண்ணம் மிளிர்கிறது. சுதந்திர இந்தியாவில் முதன் முதலாகப் புதிதாக அமைக்கப்பட்ட சண்டிகார் நகர வடிவமைப்பினை அமைத்தவர் இவரே. அத்துடன் அந்நகரிலுள்ள பல முக்கியமான கட்டடங்களையும் வடிவமைத்தவரும் இவரே.

நவீனக் கட்டடக்கலையில் முன்னோடிகளில் முக்கியமான எனக்குப் பிடித்த ஆளுமைகளாக ஃப்ராங் லாயிட் ரை (Frank Lloyd Wright ) , மீஸ் வான்ட ரோ (Mies van der Rohe)  , லி கொபூசியே ஆகியோரையே குறிப்பிடுவேன். இவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவராக நான் கருதுவது லி கோபுசியேயைத்தான். அதற்குக் காரணம் இவரது பன்முகத் திறமையும், படைப்பாக்கத்திறனும், சீரிய சிந்தனை மிக்க எழுத்துகளும்தாம். இம்மூவரும் முறையாகக் கல்விக்கூடங்களில் கட்டடக்கலைத்துறையில் கற்று கட்டடக்கலைஞராக வந்தவர்களல்லர். தம் சொந்தத் திறமையினால் , அனுபவம் வாய்ந்தவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற பயிற்சிகள் மூலம், இத்துறை சார்ந்த பாடங்கள் மூலம் தம் கட்டடக்கலையாற்றலை வளர்த்துச் சாதித்தவர்கள். முறையாகக் கர்நாடக சங்கீதம் கற்காமல் வந்து சிறந்த பாடகர்களாக விளங்கும் பாடகர் பாலசுப்பிரமணியம் போன்று , தம் சொந்தத்திறமை காரணமாகச் சிறந்து விளங்கியவர்கள்.

லி கொபூசியே என்றால் முதலில் நினைவுக்கு வருபவை அவரது புகழ்பெற்ற கூற்றான ” ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்”  (“A house is a machine to live in”), என்னும் கூற்றும், நவீனக் கட்டடக்கலையில் கட்டட வடிவமைப்பு சார்ந்து அவர் கொண்டிருந்த ஐந்து முக்கிய கருதுகோள்களும் ஆகும். ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம் என்னும் அவரது கூற்றின் முக்கிய அர்த்தம் என்னவெனில் ஒரு வீட்டின் சகல உறுப்புகளுமே மனித வாழ்வின் தேவைகளைத் தீர்ப்பதற்கான இயந்திரங்களே என்பதுதான். குளியல் அறை, சமையலறையிருந்து அனைத்து அறைகளுமே இயந்திரங்கள்தாம். இவ்விதமான பல இயந்திரங்களை உள்ளடக்கிய பெரும் இயந்திரமே ஒரு வீடு என்னும் அர்த்தத்தையே இவரது கூற்றான ” ஒரு வீடானது வாழ்வதற்குரிய இயந்திரம்” என்னும் கூற்று வெளிப்படுத்துகின்றது.

அடுத்து நவீனக் கட்டடக்கலையில் கட்டடமொன்றின் வடிவமைப்பைப்பொறுத்தவரையில் லி கொபூசியேயின்  ஐந்து பிரதான கருதுகோள்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. தரைத்தளத்திலிருந்து கட்டடமொன்றினை உயர்த்திப்பிடிக்கும் தூண்கள் (Pilotis): உருக்குக் கம்பிகளினால் அல்லது உருக்கு வலையினால் வலிதாக்க்கப்பட்ட காங்கிரீட்டினால் ஆன தூண்கள். (Reinforced Concrete). இவ்விதமாகக் கட்டடமானது அதன் தரைத்தளத்திலிருந்து உயர்த்திப்பிடிக்கும் தூண்களினால் உயர்த்திப்பிடிக்கும் வகையில் கட்டடங்கள் அமையும்போது, அதனால் உருவாகும் வெளியினால் அதிக வெளிச்சம் அப்பகுதிக்குக் கிடைக்கின்றது. வாகனத்தை நிறுத்த அல்லது மேலும் பல தேவைகளுக்கு அவ்வெளியினைப் பயன்படுத்தும் நிலை உருவாகின்றது.

Continue Reading →