தொடர் : வெற்றியின் இரகசியங்கள்: அத்தியாயம் மூன்று: எமில்கூ காட்டிய வழி!

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்அறிஞர் அ.ந.கந்தசாமி அறிஞர் அ.ந.கந்தசாமி எழுதித் தமிழகத்தில் பாரி பதிப்பக வெளியீடாக 1966இல் வெளியான நூல் ‘வெற்றியின் இரகசியங்கள்’. வாழ்வின் வெற்றிக்கு அறிவுரைகள் கூறும் சிறந்த தமிழ் நூல்களிலொன்று. இந்நூலில் அ.ந.க மனத்தின் தன்மைகளை, அது பற்றிய நவீன அறிவியற் கோட்பாடுகளையெல்லாம் மிகச்சிறப்பாக, துள்ளு தமிழ் நடையில் எழுதியிருக்கின்றார். அந்த வகையில் சிறந்த உளவியல் நூலாகவும் இதனைக் கொள்ளலாம். இந்நூல் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராக வெளிவரும். –


3. எமில்கூ காட்டிய வழி!

மனத்தின் இயல்புகளை விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அதை ஒரு அறிவுத் துறையாக பிராய்ட், ஜூங், அட்லர் போன்றவர்கள் வளர்த்து வர பிரான்ஸ் தேசத்தைச் சேர்ந்த ட்ரோய்ஸ் நகரில் பிறந்த எமில்கூ என்ற வைத்தியர் மனோதத்துவத்தை மனிதனுக்கு உடனடியான பலன்களைத் தரத்தக்க ஒரு கலையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பெரிய வெற்றியும் ஈட்டினர். அவர் தாம் கண்டுபிடித்த மனோதத்துவ முறைக்கு (Auto Suggestion) ‘சுய மந்திரம்’ அல்லது ‘சுய வசியம்’ என்று பெயரிட்டார். இந்த முறையினால் ஒருவன் தனது கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கவும், நல்ல பழக்கங்களை வளர்க்கவும் முடியுமென்பது அவர் சித்தாந்தம். அதுமட்டுமல்ல. உடல் நோய்களில் பல மனப்பிராந்திகளால் ஏற்படுகின்றனவென்றும் சுயமந்திர முறையினால் அவற்றை வேரோடு கல்லி வீச முடியுமென்றும் அவர் திடமாக நம்பினர். இன்னும், ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அரும்பெரும் சாதனைகளைச் செய்து முன்னேற விரும்பினால் அதற்கும் இச்சுயமந்திர சக்தியை உபயோகிக்கலாம் என்பது அவர் கருத்து. இக்கருத்துக்களின் அடிப்படையில் அவர் செய்த பரிசோதனைகள் மிகவும் ஆச்சரியமான பலன்களை நல்கவே 1910-ம் ஆண்டில், அதாவது தமது 53-வது வயதில் நான்சி என்னும் இடத்தில் சுயவசிய சிகிச்சை நிலையம் ஒன்றையும் அவர் நிறுவினார். இங்கு அவர் அடைந்த வெற்றிகள் ஐரோப்பா முழுவதிலும் அவருக்குப் பெரும் புகழைக் கொடுத்தது. உலகம் முழுவதும் எமில்கூவின் முறைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.

 எமில்கூ என்ற வைத்தியர் மனோதத்துவத்தை மனிதனுக்கு உடனடியான பலன்களைத் தரத்தக்க ஒரு கலையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பெரிய வெற்றியும் ஈட்டினர்எடுத்த எடுப்பில் பார்த்தால் கூவின் முறைகள் சிறு பிள்ளைத்தனமானவையாகத் தோன்றும். சிலருக்கு அவை: ஒரு பைத்தியக்காரனின் கேலிக்கூத்துப் போலவும் தோன்றக்கூடும். ஆனால் ஆரம்பத்தில் அவை பரிகசிக்கத்தக்கவையாகக் காட்சியளித்தாலும் நாளடைவில் அவற்றின் அபார சக்தியை எவரும் நன்கு உணரவே செய்வார்கள். சோர்ந்திருந்த உள்ளம் சுறுசுறுப்புப் பெறும்போது, நைந்திருந்த, நரம்புகளில் புது உணர்ச்சி ஏறும்பொழுது, கூன்விழுந்த முதுகு குத்திட்டெழும்போது யார்தான் சுயவசிய முறையின் சக்தியை மறுக்க முடியும்?

இந்நூலின் ஆரம்பத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு முயற்சி அத்தியாவசியம் எனக் குறிப்பிட்டோம். ஆனால் முயற்சி என்ற சொல்லின் பொருள் என்ன என்பதை நாம் சரியாக விளங்கிக் கொண்டால்தான் அதனை முறையாக மேற்கொண்டு நாம் முன்னேற்றத்தை எய்தலாம். சிலர் முயற்சி என்றதும் மாடுபோல் உழைத்தல் என்று எண்ணி விடுகிறார்கள். சிந்தனையற்ற வெறும் உழைப்பினால் தேவைக்கதிக களைப்பு ஏற்படுமே தவிர பிரயோசனம் அதிகம் இருக்காது. உதாரணமாக ஒரு வாழை மரத்தை, நாம் வெட்டி வீழ்த்த வேண்டுமென்று வைத்துக் கொள்வோம். அதற்குக் கூர்மையுள்ள பெரிய கத்தியொன்றைக் கையில் எடுத்து அதனால் வெட்டி வீழ்த்த வேண்டும். அப்படிச் செய்யாது ஒரு சவர அலகைக்கொண்டு இவ்வேலையைச் செய்ய முயன்றால் அதனால் காலம் விரயமாகும். கைகள் வலிக்கும். சில சமயம் விரல்கள் வெட்டுக் காயத்துக்கும் ஆளாகும். இன்னும் வேலை முடிவதற்குள் சவர அலகு இரண்டாக முறிந்து விடவும் கூடும். வாழை மரமும் வெட்டப்படாது தப்பித்துக் கொள்ளும்! ஆகவே முயற்சி என்பது கடின உழைப்பன்று. புத்திசாலித்தனமான, விவேகமான உழைப்பு. அறிவின் துணையோடு மேற்கொள்ளப்படும் முயற்சிதான் பலன்தர வல்லது என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும்.

Continue Reading →