வாசிப்பும், யோசிப்பும் 277: அஞ்சலி: இதழாசிரியர் ம.நடராஜனின் மறைவு! | கவிதை: பரிணாமம் |

'புதிய பார்வை' ஆசிரியர் ம.நடராஜன்அண்மையில் மறைந்த ‘புதிய பார்வை’ சஞ்சிகையின் ஆசிரியரான ம.நடராஜனுக்கு இலக்கியம், அரசியல் என இரு முகங்கள். கலை, இலக்கியரீதியில் அவரது ‘புதிய பார்வை’ சஞ்சிகைக்கு முக்கியமானதோரிடமுண்டு. அந்த வகையில் அதன் ஆசிரியரான ம.நடராஜனும் தமிழ் இலக்கிய வரலாற்றில் தடம் பதித்தவர்களிலொருவராகின்றார். முனைவர் ம.நடராஜன் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளிலும் அப்பிமானம் பெற்றவர். ‘மகளிர் முன்னேற்றத்தில் இதழ்களின் பங்கு’ என்னும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். அரசியலைக் கடந்து கலை, இலக்கியவாதிகள் மத்தியிலும் நட்பினைப் பேணியவர். 1967இல் தமிழகத்தில் நடைபெற்ற தனது மாணவப்பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொண்ணூறுகளில் கோமல் சுவாமிநாதனை ஆசிரியராகக் கொண்டு ‘சுபமங்களா’ வெளிவந்துகொண்டிருந்த காலகட்டத்தில் , அதே சாயல் மிக்க வடிவமைப்புடன் வெளியான சஞ்சிகை ‘புதிய பார்வை’. அக்காலகட்டத்தில் அதன் இணை ஆசிரியரான பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’ நாவல் தொடராக வெளியாகிக்கொண்டிருந்தது.

புதிய பார்வை சஞ்சிகை விடயத்திலும், அதன் ஆசிரியர் ம.நடராஜன் மீதும் என் மனத்தில் மென்மையான உணர்வுமுண்டு. அதற்குக் காரணமுமுண்டு. 1996இல் தமிழகத்தில் ஸ்நேகா பதிப்பகம் மங்கை பதிப்பகத்துடன் (கனடா) இணைந்து வெளியிட்ட எனது நூலான ‘அமெரிக்கா’ (அமெரிக்கா சிறு நாவல் மற்றும் சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு) வெளியானபோது புதிய பார்வை அதற்கு புத்தக மதிப்புரையொன்றினை எழுதி தனது மே 1997 இதழில் வெளியிட்டிருந்தது. அதனை ஜி.சுவாமிநாதன் என்பவர் எழுதியிருந்தார். ‘அமெரிக்கா’தான் தமிழகத்தில் வெளியான எனது முதலாவது நூல். ஆனால் அந்த நூலுக்கு மதிப்புரை எழுதி என் நூலுக்கு வரவேற்பு கொடுத்திருந்த ‘புதிய பார்வை’ சஞ்சிகை மீது அந்த விடயத்தில் எனக்கு எப்பொழுதுமே மதிப்புண்டு. குறை நிறைகளுடன் அமைந்திருந்த அந்த விமர்சனம் வெளியான ‘புதிய பார்வை’ சஞ்சிகைப்பக்கத்தினையே இங்கு நீங்கள் காண்கின்றீர்கள்.

Continue Reading →

தமிழ்நதியின் பார்த்தீனியம்

தமிழ்நதியின் பார்த்தீனியம்தமிழ்நதிஇரண்டு விதமான எழுத்தாளர்கள் உண்டு. ஒருவகையினர் நரிகள் மாதிரி அவர்களுக்கு முழுக்காடும் பாதுகாப்பை அளிக்கும். எங்கும் நுளைந்து வருவார்கள். மற்றவர்கள் முள்ளம்பன்றிபோல். அவர்களது பாதுகாப்பு அவர்களது முட்கள் மட்டுமே. ஆனால் அது வலிமையாகவிருக்கும். இந்த உதாரணம் ஈழத்து மற்றும் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கும் பொதுவானது. பெரும்பாலானவர்களது பேசுபொருள் ஈழப்போராட்டமே.போர் முடிந்தாலும் இந்த போர் நிழலாகத் தொடர்ந்து வருகிறது. போரைவைத்து சிறப்பாக பலர் இலக்கியம் படைத்திருக்கிறார்கள். நெப்போலியனது படையெடுப்பு நடந்து நூறு வருடங்கள் பின்பாகவே டால்ஸ்டாயின் போரும் வாழ்வும் எழுதப்பட்டது. இதனால் இன்னமும் தொண்ணுறு வருடங்களுக்கு போர்காலத்தை நம்மவர் எழுதக்கூடும். இலங்கைப்போரால் ஈழத்தமிழர்கள் களைத்து சோர்ந்தாலும் சினிமாவில் மட்டும் போரைப் பார்த்த தமிழகத்து உறவுகளுக்கு ஈழப்போராட்டம், திருநெல்வேலி அல்வா மாதிரி. சில செவ்விகளையும் கட்டுரைகளையும் பார்த்தபின் ஈழப் போராட்டம் முடிந்ததே தெரியாமல் தமிழக சஞ்சிகையாளர்கள் உள்ளார்களா என எனக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. சமீபத்தில் நான் படித்த தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் 500 பக்கங்கள் கொண்டது. படிக்கும்போது தொடர்சியாக வாசிக்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. அதில் உள்ள சம்பவங்கள் விடுதலைப்புலி இயகத்தினரால் நடத்தப்பட்ட உண்மையான சம்பவங்களாக இருந்ததே அதன் காரணம். சம்பவங்கள் நாவலாசிரியரால் நகர்த்தப்படாது, விடுதலைப்புலித்தலைவர் பிரபாகரனால் நாவலில் நடத்தப்படுகிறது. கிரேக்க மொழி அறிவு மட்டுமல்ல, படிப்பே இல்லாத மத்தியூவிற்கு புதிய விவிலியத்தை எழுதும்போது துணை நின்ற தேவதை போன்று விடுதலைப்புலிகள் தமிழ்நதிக்கு துணை நிற்கிறார்கள்.

என்னைப்பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் முகாம்கள் இந்தியாவில் இருந்தபோது கேள்விப்பட்டவை. அதை நிர்வகித்தவர்களில் முக்கியமாக பொன்னம்மான், ராதா என்பவர்கள் என் கல்லூரித்தோழர்கள். அவர்களைப் பல முறை இந்தியாவில் சந்தித்ததால் அவர்கள் பற்றிய விடயங்கள் வாசிப்பதற்கு சுவையாக இருந்தது. பின்பகுதிகள் இந்திய சமாதானப்படையினரால் நடந்த விடயங்கள்.அறிந்தவை. நமது நாட்டுச் செய்திகள் தொகுக்கப்பட்ட கதை என்பதால் சுவாரசியமாக வாசிக்க முடிந்தது.உண்மையான சம்பவத்தில் பாத்திரங்களை நடமாடவிட்டிருப்பது வாசிப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. அந்தவிதத்தில் தமிழ்நதியின் மொழி ஆளுமையும் நன்றாக உள்ளது. ஒரு விதத்தில் தமிழ் காட்டாறாக ஓடுகிறது. பாரத்தீனியத்தில் குறைகள் இருந்தாலும் நாம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். பொதுவான அபிப்பிராயத்தின் அப்பால் நாவலை உட்புகுந்து பார்ப்போம்

Continue Reading →