உளவியல் தொடர்: வெற்றியின் இரகசியங்கள் (4): சுயவசியம் செய்வதெப்படி?

அ.ந.கந்தசாமியின் வெற்றியின் இரகசியங்கள்அறிஞர் அ.ந.கந்தசாமி– சுயவசியம் பற்றி அ.ந.க.வின் இந்நூலைப் படிப்பதற்கு முன்னர் எனக்குத் தவறானதொரு எண்ணமிருந்தது. அது தவறானது. தவறான செயல்களுக்குப் பயன்படுவது. இவ்விதமான தவறான எண்ணங்களைக் கொண்டிருந்த எனக்கு அ.ந.க.வின் சுயவசியம் பற்றிய இந்த அத்தியாயம் சுயவசியம் என்றால் என்ன? அது பற்றிய உளவியல் அறிஞரும் , மருத்துவருமான எமில் கூ அவர்களின் கருத்துகள் எவை போன்ற விடங்களையெல்லாம் மிகவும் தர்க்கரீதியாக அறியத்தந்த அத்தியாயம் இந்த அத்தியாயம். இந்த அத்தியாயத்தைப்படித்ததுமே எனக்கு முதன் முதலில் சுயவசியம் என்னும் இத்தத்துவத்தை எவ்விதம் மானுடராகிய நாம் எம் வாழ்க்கையின் வெற்றிக்குப் பயனுள்ள வகையில் பாவிக்க முடியும் ? என்னும் விளக்கம் ஏற்ப்ட்டது. எவ்விதம் விளம்பரதாரர்கள், உணர்ச்சி வெறியினைத்தூண்டு சுய இலாபம் அடையும் அரசியல்வாதிகள், மத போதர்கள் மற்றும் முனிவர்கள் எல்லாரும் பாவிக்கின்றார்கள் என்பது பற்றிய அறிவு பூர்வமான புரிதல் ஏற்பட்டது. மானுடர் ஒருவர் எவ்விதம் சுயவசியம் என்னும் இக்கோட்பாட்டினை மிகவும் இலகுவாகக் காதல், கல்வி போன்ற விடயங்களுக்கெல்லாம் ஆரோக்கியமான முறையில் பயன்படுத்த முடியுமென்றெல்லாம் பற்றிய அறிவினை இந்த அத்தியாயம் புரிய வைத்தது.

இவ்விதமாக மிகவும் ஆரோக்கியமான சுயவசியமென்னும் இக்கோட்பாட்டினை எவ்விதம் பாவிக்கலாம்? அதற்குரிய விதிகளெவை? போன்ற விடயங்களையெல்லாம் மிகவும் எளிய, துள்ளு தமிழ் நடையில் அ.ந.க விபரித்திருக்கின்றார் அ.ந,க.  இத்தத்துவத்தை அ.ந.க விளங்கப்படுத்தும் மொழி நடையே வாசிக்கும்போது ஒருவருக்கு இன்பத்தைத் தந்து விடுகின்றது. அவர் கூறுவதை இலகுவாக, தர்க்கரீதியாகப் புரிய வைத்து விடுகின்றது. தமிழில் மிகவும் எளிமையுடன் கூடிய ஆழத்துடன் சுயவசியம் பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரையாக அ.ந.க.வின் சுய வசியம் பற்றிய இக்கட்டுரையினைக் கூறுவதில் எனக்குத் தயக்கமேதுமில்லை. வாசித்துப் பயனடையுங்கள் நண்பர்களே!  – வ.ந.கிரிதரன் –


சுயவசியம் செய்வதெப்படி?

நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும்
முன்னேறி முன்னேறி வருகிறேன் நானே?

"நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ அந் நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட் டிருக்கிறது.” வாழ்க்கை முன்னேற்றத்திற்கு எமில் கூ வகுத்துத் தந்த மந்திரம்தான் மேற்கண்ட வசனம். இந்த வசனம் சோர்வைப் போக்கிச் சுறுசுறுப்பை அளிக்கும். நம்பிக்கையின்மையை ஒழித்துத் தன்னம்பிக்கையைக் கொடுக்கும். பயத்தை ஒழித்து வீரத்தைத் தரும். மனக் குழப்பத்துக்குப் பதில் மன அமைதியை வளரச் செய்யும். தோல்விக்குப் பதில் வெற்றியையும், வெட்கத்துக்குப் பதில் ஆண்மையையும், வறுமைக்குப் பதில் செல்வத்தையும், நோய்க்குப் பதில் தேகாரோக்கியத்தையும், திறமை இன்மைக்குப் பதில் திறமையையும், அழகின்மைக்குப் பதில் அழகையும் தரும். ஆம், வாழ்க்கையில் ஒரு மனிதன் அடைய விரும்பும் எல்லாவற்றையும் தரவல்ல அதியற்புத மந்திரம் இது என்று சொன்னுல் அது மிகையாகாது. பகவான் புத்தர் “தம்ம பத’த்தில் பின்வருமாறு கூறினர்:-

“நாம் இன்று என்ன நிலையில் இருக்கிறோமோ அந் நிலையை நமக்கு அளித்தது நமது எண்ணங்கள்தான். நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டிருக்கிறது.”

ஆகவே சரியான எண்ணங்கள் நமக்கு நல்ல வாழ்க்கையைத் தரும். பிழையான எண்ணங்கள் அதற்கேற்ற பலன்களையே தரும். “நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும் முன்னேறி முன்னேறி வருகிறேன் நானே? “என்ற வார்த்தைகளில் நாம் காண்பதென்ன? சுபிட்ச மான எதிர்காலத்தை நோக்கி என்னால் முன்னேற முடியும், முன்னேறிக் கொண்டிருக்கிறேன் என்ற தன்னம்பிக்கை அந்த வசனத்தை முற்றிலும் ஊடுருவி நிற்பதை நாம் காண்கிறோம். இதைத் திரும்பத் திரும்பச் சொல்பவன் மனதில் தன்னம்பிக்கை நிறைந்த அந்த எண்ணம் சிலை மேலெழுதிய எழுத்துப்போல் பதித்து விடுகிறது. பின்னர் அந்த எண்ணம் புத்தர் சொல்லியுள்ளதுபோல எம் வாழ்க்கையையே உருவாக்கி விடுகிறது.

சுயவசியம் செய்வதென்பது ஆக்கபூர்வமான கருத்துகளை எமது உள்மனதில் விதைப்பதுதான். இதற்கு நாம் அனுஷ்டிக்கும் முறை பழைய காலத்தில் மந்திரங்களை உச்சாடனம் செய்து மந்திர சக்தி பெற நமது முன்னேர்கள் அனுஷ்டித்த அதே முறையாகும். ஜபம், தவம், என்பனவே அவை, திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம்-ஆயிரம் முறை, இரண்டாயிரம் முறை ஒரு மந்திரத்தை ஜபிப்பதன் மூலம் ஒரு குறித்த தெய்வத்தின் அருளைப் பெற்று மந்திர சக்திகளைத் தம் வசமாக்கிக் கொள்ள முடியும் என்று அக் காலத்தில் நம்பப்பட்டது. இவ்விதமாக மேற்கொள்ளப்படும் முயற்சிக்கே தவம் என்று பெயர். இவ்வித மந்திரோச்சாடனத்தையே உருவேற்றுதல் என்ற வார்த்தை யாலும் அழைத்தார்கள். ‘ எமில்கூவின் வசிய முறையும் உருவேற்றுதலை அடிப்படையாகக் கொண்டதுதான்.

“நாள்தோறும் நாள்தோறும் எல்லா விதத்திலும்
முன்னேறி முன்னேறி வருகிறேன் நானே?”

இதுவே மந்திரம். இதை உச்சாடனம் செய். முழு நம்பிக்கையுடன், உணர்ச்சியோடு, உள்மனதில் அது இறங்கத்தக்க முறையில் உச்சாடனம் செய். அது உன் வாழ்க் கையை மாற்றும். சகல விதத்திலும் படிப்படியாக மலர்ந்து மணம் வீசும் நல்வாழ்வை நீ பெறுவாய் என்கிறார் கூ.

எமில் கூஇந்நூலில் சுயவசியம், சுயமந்திரம் என்ற வார்த்தைகளை நான் Auto Suggestion என்ற சொல்லுக்காக இதுவரை உபயோகித்து வந்திருக்கிறேன். ஆயினும் உண்மையில் Suggestion என்ற வார்த்தைக்குச் சொல்லிக் கொடுத்தல், அதுவும் அதிக அழுத்தமின்றிச் சொல்லிக் கொடுத்தல், அதுவும் அதிக அழுத்தமின்றி இலேசான முறையில் சொல்”லிக் கொடுத்தல் என்றுதான் பொருள். குறிப்பாயுணர்த்தி ஏற்கும்படி செய்தல். காரண காரியங்களைத் தர்க்கரீதியாகக் காட்டிக்கொண்டு நிற்காமல் உணர்ச்சிமயமான ஒரு நிலையில், நனவு மனம் தன் சக்தியை ஒரளவு அல்லது முற்றாக இழந்து ஒரு கனவு நிலையில் சஞ்சரிக்கும் நிலையில் “ஒரு கருத்தை எடுத்துச் சொல்லி ஏற்கச் செய்தல் என்பது தான் Suggestion என்ற வார்த்தையின் பொருள். இதை இவ்வாறு இங்கு விபரமாகக் கூறவேண்டியிருப்பதற்குக் காரணம் தமிழ் மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உள்ள காரணம். தமிழ் மொழிக்கும் ஆங்கில மொழிக்கும் உள்ள சொல் வேற்றுமைகளேயாகும். ஒருமொழியிலுள்ள கருத்தை இன்னேர் மொழியில் எடுத்துக் சொல்ல முயலும்போது சில சமயங்களில் இவ்வித இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. உதாரணமாகத் தமிழில் ஊடல் என்ற வார்த்தை இருக்கிறதல்லவா? இதை ஆங்கிலத்தில் எடுத்துச் சொல்லச் சரியான வார்த்தைகள் இல்லாததால் Love Quarrel, Temporary Variance என்ற வார்த்தைகளைத் திருக்குறளை மொழி பெயர்த்த ஜி. யு போப் போன்றவர்கள் உபயோகித்திருக்கிருர்கள். Suggestion என்ற ஆங்கில வார்த்தை இத்தகைய ஒரு இடர்ப்பாட்டையே தமிழில் ஏற்படுத்துகிறது. ஒரு சில அறிஞர் கருத்தேற்றம் என்ற வார்த்தையை உபயோகிக்கின்றனராயினும், Suggestion என்ற ஆங்கில வார்த்தைக்கு நான் கொடுத்திருக்கும் விளக்கத்திலுள்ள பொருளின் முழுமையில் ஒரு பங்கு தானும் அதில் இல்லை என்றே கூறவேண்டும். ஆனால் ஒருவர் உணர்ச்சி வசமாகி மயங்கி இருக்கும். நிலையில் அவர் மனதில் கருத்துகளை ஏற்றுதல் இலகுவான காரியம் என்பது தமிழ் மக்கள் அறிந்திருந்த ஒன்று தான். உதாரணமாக பஞ்சணை மெத்தையில் தன் மனைவி யோடு கொஞ்சிக் குலாவியிருக்கும் கணவன் அன்புக்கும், இன்பத்துக்கும் அடிமையாகிவிட்ட ஒருவன், அவ்வேளையில் அவன் மனம் தேனுண்ட வண்டுபோல் மயங்கிக் கிடக்கிறது. சாதுரியமான பெண் இச்சூழ்நிலையை நன்கு உபயோகித்துத் தனக்கு வேண்டிய விஷயங்களை எல்லாம் அவனை ஏற்றுக் கொள்ளும்படி செய்து விடுகிறாள். இதனைத் தான் “தலையணை மந்திரம்’ என்ற வார்த்தையில் நாம் குறிக்கிறோம். அதாவது படுக்கை அறையில் கணவனின் மயக்க நிலையை உபயோகித்து அவனுக்குப்  போதிக்கப்படும். புத்திமதிகள் இவ்வார்த்தையால் குறிக்கப்படுகின்றன.

Continue Reading →

மண்டைப் பாணர் – ஓர் ஆய்வு

ஆய்வுக்கட்டுரை வாசிப்போமா?பாணர் குறித்த செய்திகள் சங்கப் பாக்களிலும் தொல்காப்பியத்திலும் காணப்படுகின்றன. இப்பாணர் மூன்று வகையினர் என்று கூறிய அறிஞர் பெருமக்கள், மண்டைப்பாணர் என்றொரு வகையையும் கூறியுள்ளனர். பாணர் மரபில் மண்டைப்பாணர் என்றொரு வகை இருந்தனரா? மண்டை என்பது பாணர்க்கு மட்டும் உரிய ஒன்றா? மண்டை என்பது யாழ்க்கருவி போல் இசைக்கருவியா? மண்டைப்பாணர் என ஏன் அழைக்கின்றனர்? போன்ற வினாக்கள்  தோன்றுகின்றன. எனவே, ‘மண்டைப் பாணர் என்றொரு வகையினர் சங்கக் காலத்தில் இருந்தனரா?’ என்னும் சிக்கலை முன்னிறுத்தி இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

மண்டை என்பது என்ன?
மண்டை என்பது சங்கக்கால இரவலர்கள் உணவு பெற்று உண்பதற்காக வைத்திருந்த ஓர் உணவுப் பாத்திரம் ஆகும். மன்னரது அரண்மைக்குச் சென்ற இவர்கள், மன்னனைப் புகழந்து பாடி முடித்த பின்பு அரசர்கள் கொடுக்கும் கள், சோறு போன்ற உணவுகளை இம்மண்டையில் பெற்று உண்டுள்ளனர். அரண்மனைக்காரர்களும் அம்மண்டையில்தான் உணவுகளை வழங்கியுள்ளனர். இம்மண்டை இரவலர்களின் உண்கலமாக இருந்துள்ளது எனப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறியுள்ளன. இதனைப் பின்வரும் தலைப்பின் கீழ் காணலாம்.

புறநானூற்றில் மண்டை இடம்பெறும் சூழல்
புறநானூற்றுப் பாக்கள் பல செய்திகளை எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் மண்டை என்பதைக் குறித்து சில பாடல்கள் கூறியுள்ளன. அவற்றினை இப்பகுதியில் எடுத்துக்காட்டி ஆராயப்பட்டுள்ளன.  விறலியை ஆற்றுப்படுத்திய ஒளவையார், ‘கவிழ்ந்து கிடக்கும்  உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்? என ஏங்கி காட்டில் இருந்த சில்வளை விறலியே!, சேய்மைக்கண்ணன்றி அண்மையிலேயே நெடுமான்ஞ்சி உள்ளான். அவன்பால் செல்வையாயின், அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருட்களை, ஒரு பொழுதும் ஈரம் பார்க்காத மண்டை நிரம்ப ஊன் கொடுப்பதில் வல்லவன். அவனை நாடிச் செல்க’ எனக் கூறியுள்ளார்.  இதனை,

“ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரன்முத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே”            -புறம்.103

Continue Reading →

நூல்வெளியீட்டு அறிமுகம் : முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான “முல்லை நிலமும் நந்திக்கடலும்”

– முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான “முல்லை நிலமும் நந்திக்கடலும்” எனும் நூல் வெளியீடு! | இடம்: செல்லமுத்து பதிப்பகம் | காலம்: மார்ச் 25, 2018 பிற்பகம் 3 மணி –

நூல்வெளியீட்டு அறிமுகம் : முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான "முல்லை நிலமும் நந்திக்கடலும்"

முல்லை மண் பெற்றெடுத்த முத்துக்களில் ஒன்றாக அண்ணன் முல்லைதிவ்யனின் ஏழாவது நூலான “முல்லை நிலமும் நந்திக்கடலும்” எனும் நூலானது 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அலை கொஞ்சும் வல்லை கரையோரம் செல்லமுத்து வெளியீட்டகத்தின் குழந்தையாக பிரசவிக்க இருக்கிறது. கவிக்காதலர்களை அழைப்பதில் செல்லமுத்து வெளியீட்டகத்துடன் அண்ணனுடன் தம்பியாக பெருமைகொள்கிறேன்.

Continue Reading →