நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்: இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது !

 Stephen Rapp

– நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்!-

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் வழங்கப்படாமை, மிகவும் ஆபத்தானது என்று யுத்தக்குற்றங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் விசேட தூதுவர் ஸ்டீவன் ரெப் தெரிவித்துள்ளார்.  ஜெனீவாவில் நடைபெற்று வருகின்ற 37வது மனித உரிமைகள் மாநாட்டின் உபகுழு கூட்டம் ஒன்றில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தது.

கடந்த காலங்களில் குற்றங்களைப் புரிந்த பலர் தண்டனைகளில் இருந்து தப்பிக் கொள்ளும் நிலைமை அதிகம் உள்ளது. அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அதிகாரிகள் போன்றோர் பாரிய அளவில் மனித உரிமை குற்றங்களில் ஈடுபடுகின்ற போதும், அவர்களுக்கு சட்ட ரீதியான தண்டனை வழங்கப்படுவதில்லை. இதன் விளைவுகளாலே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாத தாக்குதல்கள் உள்ளிட்ட பல வன்முறைகள் இடம்பெற்றன. குற்றங்களைப் புரிந்துவிட்டு தப்பிக் கொள்வதற்கான வழிகள் இருக்கின்றன என்பதை வன்முறையாளர்கள் அறிந்திருக்கின்றனர்.

இந்தநிலைமையை மாற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், தண்டனை வழங்கப்படாமை மிகப்பெரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாகக் காட்டுகின்றது என பன்னாட்டு சட்டவாளர் றிச்சர்ட் ஜே றோஜெர்ஸ்.  குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாகக் காட்டுகின்றது என பன்னாட்டு சட்டவாளர் றிச்சர்ட் ஜே றோஜெர்ஸ் தெரிவித்துள்ளார். இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு சுயாதீனமாக இயங்கி வரும் இலங்கையின் நிலைமாறுகால நீதிச்செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழு வின் (Sri Lanka Monitoring and Accountability Panel. MAP) ஒருங்கிணைப்பாளராக றிச்சர்ட் செயற்படுகின்றார். மேலும், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் கம்போடிய கலப்பு நீதிமன்றத்தின் சட்டவாளராகவும் றிச்சர்ட் காணப்படுகின்றார்.

Continue Reading →

ஆனமடுவ மக்களைப் பாராட்டுவோம்!

ஆனமடுவ மக்களைப் பாராட்டுவோம்!ஆனமடுவ மக்களே! நீங்கள் வாழி!
நீங்கள் சீர் செய்தது உணவகத்தை மட்டும்
அல்ல;
இனங்களுக்கிடையிலான குரோதங்களையும்தாம்.
நீர் வாழி! உம் செயல் வாழி!
வெறிபிடித்த மானுட உணர்வுகள்
விளைவித்த அழிவினை மட்டுமா
சீர் செய்தீர்! கூடவே
மானுட நேயமென்னும் பண்பினையும்தான்
மலர்வித்தீர்!
மானுடரே! நீர் வாழி! வாழி!

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற முஸ்லீம் மக்களுக்கெதிரான வன்முறையின்போது ஆனமடுவப் பகுதியில் சேதத்துக்குள்ளாக்கப்பட்ட முஸ்லிம் உணவகத்தை அப்பகுதிச் சிங்கள மக்கள் , பெளத்த மதகுருமார் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைந்து சீரமைத்துக்கொடுத்திருக்கின்றார்கள் என்னும் செய்தியினை பி.பி.சி.தமிழ் இணையத்தளத்தில் வாசித்தேன். மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இவ்விதம் தாங்களாகவே முன் வந்து இனவாதிகளால் சேதமாக்கப்பட்ட உணவகத்தைச் சீராக்கியதன் மூலம் அப்பகுதிச் சிங்கள மக்கள் அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்கின்றார்கள். அவர்கள் சேதமாக்கப்பட்ட உணவகத்தை மட்டுமல்ல சீர் செய்தது, இனங்களுக்கிடையிலான குரோத உணர்வுகளையும்தாம். அச்செய்தியினை முழுமையாகக் கீழே தருகின்றேன் ஒரு பதிவுக்காக:


பி.பி.சி தமிழ் செய்தி!

பி.பி.சி தமிழ்: இன மோதலால் சிதைக்கப்பட்ட உணவகத்தை சீரமைத்து தந்த பெளத்த மதகுருமார்கள்

இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற இன மோதலில் ஆனமடுவவில் சேதப்படுத்தப்பட்ட முஸ்லிம் உணவகத்தை உள்ளூர் சிங்கள மக்கள், பௌத்த மதகுருமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் சீரமைத்து கொடுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் கண்டி மாவட்டத்திலும், அம்பாறையிலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள் நடந்தபோது பெரிதும் இலக்கு வைக்கப்பட்டவை முஸ்லிம்களின் வணிக நிறுவனங்கள்தான். அவற்றில் பெரு வணிக நிறுவனங்களும் மிகச் சிறிய கடைகளும் உணவு விடுதிகளும் அடக்கம். குறிப்பாக, கண்டி மாவட்டத்தின் நிலைமை மிகவும் மோசம். முஸ்லிம்கள் அங்கு பெருத்த சேதத்தை எதிர்கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது நாம் கூறப்போகும் நிகழ்வு நடந்தது புத்தளம் மாவட்டத்தில் ஆனமடுவ என்னும் இடத்தில். இங்கும் முதலில் நடந்தது வன்செயல்கள்தான் என்றாலும் இங்கு மனிதம் இன்னமும் உயிர்வாழ்கிறது என்று காண்பிக்கும் ஒரு நிகழ்வும் அதன் தொடர்ச்சியாக நடந்துள்ளது. அது மட்டுமல்ல சிங்கள மக்கள் தமது மனித நேய உணர்வை பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய நிகழ்வு இது என்றேகூட சொல்லலாம்.

Continue Reading →

முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ அமைச்சர் சுவாமிநாதன்!

முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ அமைச்சர் சுவாமிநாதன்!– சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் (கொழும்பு) முகவரியிட்டு, சுயாதீன இளம் ஊடகவியலாளரும், சிவில் சமுக மனித உரிமைகள் செயல்பாட்டாளருமான அ.ஈழம் சேகுவேரா என்பவர், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த மடல், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘காலைக்கதிர்’ பத்திரிகையில் (04.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று) பிரசுரமாகியிருந்தது. அதன் முழுவிவரம்:  –


அமைச்சர் அவர்களே! முன்னாள் போராளிகளை ‘கடனாளிகள் ஆக்கும்’ தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் தொடர்பாக,

தங்கள் அமைச்சின் வாழ்வாதார உதவித்திட்டம் ஊடாக ‘முன்னாள் போராளிகள்’ கால்நடைகளை வளர்த்து தமது வாழ்வாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள விண்ணப்பிக்கும் போது, அந்த உதவித்திட்டத்தில் உள்ள நிர்வாக ஒழுங்குபடுத்தல் குறைபாடுகள் காரணமாக ‘குறித்த வாழ்வாதார உதவித்திட்டமே போராளிகளை நிரந்தர கடனாளிகளாக ஆக்கிய’ துன்பியல் நிலைமைகள் தொடர்பாகவும், மிகவும் மோசமான இந்த இடர்நிலைமைகளை களைந்து அவர்களது ‘வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மாற்றுத்தீர்வுகள்’ தொடர்பாகவும், தங்களுக்கு இந்த மடலை எழுதுகிறேன்.

*** ஒரு இலட்சம் ரூபாய் (100,000) நிதி ஒதுக்கீட்டுக்குள் வாழ்வாதாரத்துக்கான கால்நடைகளை (மாடுகள்,ஆடுகள்,கோழிகள்) தெரிவுசெய்யுமாறு பயனாளிகளுக்கு பணிக்கப்படுகின்றது.

பயனாளிகளும் தமது விருப்பத்துக்கு ஏற்றவாறு கால்நடைகள் அமையும் வரை அலைந்து திரிந்து, பண்ணையாளர்களை தேடிக்கண்டறிந்து, தமக்கு பொருத்தமான கால்நடைகளை இனங்கண்டபின்னர், அரசாங்க கால்நடை வைத்தியரை தமது சொந்தச்செலவில் அழைத்துச்சென்று, கால்நடைகளுக்கு காது இலக்கத்தகடு இட்டு, தங்கள் அமைச்சினால் வாழ்வாதார உதவித்திட்டத்துக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள படிவத்தை பூரணப்படுத்தி, பண்ணையாளர்களிடம் உள்ள கால்நடை உரிம அட்டையை பயனாளிகள் தமக்கு உரிமம் மாற்றம் செய்து, அவற்றை கச்சேரியில் கொண்டு வந்து ஒப்படைத்த பின்னர், குறித்த கால்நடைகளை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு, ‘மூன்று மாத காலம் வரை’ காத்திருக்குமாறு கச்சேரி உத்தியோகத்தர்களால் கூறப்படுகின்றது.

யாராவது ஒரு நபர் கூடிய சீக்கிரம் தனது செலவுக்கு பணம் தேவைப்படும் (நோய், விபத்து, சத்திரசிகிச்சை, வெளிநாட்டு பயணம், உயர்கல்வி, புதிய தொழில் முனைப்பு, கடன் பிரச்சினை) சந்தர்ப்பங்களில் மாத்திரமே, கைக்குத்தேவையான பணத்தை புரட்டுவதற்கு பல வழிகளிலும் முயன்று எதுவும் கைகூடிவரவில்லை என்றானபோது, ‘தன்னிடம் உள்ள அசையும் அசையா சொத்துகள் – துரவுகளை விற்பது’ எனும் இறுதித்தீர்மானத்துக்கு வருவார். ஆனால் இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தங்கள் அமைச்சின் உதவித்திட்டத்தின் போது ‘மூன்று மாத காலம் வரை காத்திருக்குமாறு’ பண்ணையாளர்களிடம் கூறுமாறு பயனாளிகளிடம் சொல்லப்படுகின்றது.

‘அவசர பணத்தேவை காரணமாக, அவ்வளவு காலத்துக்கு தம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று கூறும் பண்ணையாளர்கள், கூடிய சீக்கிரம் தமக்கு பணம் தந்து உதவக்கூடிய வேறு நபர்களுக்கு கால்நடைகளை விற்று, துரிதகதியில் தமது பண நெருக்கடி பிரச்சினையை சமாளித்துக்கொள்கிறார்கள்.

Continue Reading →