சங்க இலக்கியம் இயற்கையின் உயிர் அகவமைப்பை ஒளித்திரையெனக் காட்டும் தொகை இலக்கியம். சங்கத்தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நெறியை அது தெற்றென எடுத்துக்காட்டுகிறது. தொல்காப்பியர் உயிர் வகைக்கோட்பாட்டைக் கூறுகையில் (தொல்.மரபு.நூற்.1526 )உயர்திணை உயிர்கள், அல்திணை உயிர்கள் என்கிறார். இவற்றுள் அல்திணை உயிர்கள் பற்றிய (விலங்குகள் மட்டும்) பதிவினை ஆற்றுப்படை நூல்களில் இடம்பெற்றிருப்பனவற்றைக் குறித்து இக்கட்டுரை இயங்குகிறது. கீழ்க்காணுமாற்று விலங்குகள் ஆற்றுப்படை நூல்களுள் பதிவு செய்யப்பெற்றிருப்பனவாகக் காணப்படுகின்றன.
01.ஆடு , 02.ஆமான், 03.ஆளி, 04.எருது, 05.ஒட்டகம், 06.கரடி, 07.குரங்கு, 08.சிங்கம், 09.நாய், 10.பன்றி, 12.புரவி, 13.புலி, 14.மரையான், 15.மான், 16.முயல் என்னும் விலங்குகள் இடம்பெற்றுள்ளன. அவைகளை குறித்து விளக்கமாகக் காணலாம்.
01.ஆடு:
சங்க இலக்கியத்தில் ஆட்டை வெள்ளாடு, செம்மறி ஆடு, வருடை ஆடு, தகர், துருவை என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறது. முருகன் மயிலையும் குற்றமில்லாத கோழிக்கொடியோடு ஆட்டுக்கிடாவையும் கொடியாகக்கொண்டவன் என்பதனை,
“தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் கொடியன்” திருமுருகு.210
என்கிறார் நக்கீரர். பெரிய காலை உடையதாகவும் மிக்க வலிமை உடையதும் உள்ள ஆட்டுக்கிடாயினது உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை சிறு பலியாக முருகப்பெருமானுக்கு இட்டு வழிப்பட்ட செய்தியை,
“மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடை
குருதியொடு விரைஇய தூவெள்ளரிசி” திருமுருகு.232-233
என்கிறது சங்க இலக்கியம். சிறிய திணை அரிசியைப் பூக்களோடு கலந்து பிரப்பரிசியாக வைத்தும் மறியை அறுத்தும் அவ்விடத்தில் இறைப்பொருள் நிலைத்து நிற்க வேடர்கள் விழா செய்தனர் என்பதனை,
“சிறுதிணை மலரொடு மறியறுத்து” திருமுருகு.218
என்று திருமுருகாற்றுப்படை கூறுகிறது. அருகம்புல்லின் பழுதையை தின்று நன்றாகக்கொழுத்த செம்மறி ஆட்டின் பருத்த மேல்தொடையின் பதமான இறைச்சியை இரும்புக் கம்பியில் கோர்த்து சுடப்பட்டதைக் கரிகால் வளவன் பொருநனுக்கு அளித்த நிகழ்வை,