மானுடர்களில் கலைஞர்கள் (எழுத்தாளர்கள் உள்ளடங்கி), அரசியல்வாதிகள் இவர்களைப்பொறுத்தவரையில் ஓய்வு என்பது உடலில் வலு உள்ளவரையே. உடல், உள்ளம் வலுவாக உள்ளவரை இவர்கள் இயங்கிக்கொண்டேயிருப்பார்கள். இருப்பை இவ்விதம்தான் எதிர்நோக்க வேண்டும். இதனால்தான் மனோரமா போன்ற கலைஞர்கள் தாம் இறுதிவரை நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உண்மையில் இருப்பினை ஆரோக்கியமாக எதிர்நோக்கும் பண்பு இது. இவ்விதமே மனிதர்கள் இருக்க வேண்டும் என்பது என் பெரு விருப்பு.
இப்பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே இயங்கிக்கொண்டேயிருக்கின்றன கதிர் உட்பட. இயக்கத்துக்கு ஓய்வு என்பதே கிடையாது. ஆனால் சாதாரண மானுடரைப்பொறுத்தவரையில் தம் வாழ்க்கையை ஓய்வு பெறுதல் என்பதன் அடிப்படையில அமைத்துக்கொள்கின்றார்கள். இதனால் ஓய்வு பெறும் இலக்கை மட்டுமே வைத்துக்கொண்டு உழைக்கின்றார்கள். கடுமையாக உழைக்கின்றார்கள். ஓய்வு பெற்றதும் இவர்களில் பலருக்கு என்ன செய்வதென்றே தெரிவதில்லை. ஒய்வு பெற்றதும் எல்லாமே முடிந்து போய்விடுகின்றது என்று தளர்ந்து விடுகின்றார்கள். விரைவிலயே முதுமை பெற்று உடல்ரீதியாக, உடல் ரீதியாக வாடிப்போகின்றார்கள். பலர் ஒன்றுக்கும் இயலாத இயலாமையில் ஓய்வு பெற்றதும் வாழ்வே இல்லை என்பது போல் ஒதுங்கி, ஓய்ந்து விடுகின்றார்கள்.
இதனால் ஓய்வு பெறுதல் (Retirement) என்னைப்பொறுத்த வரையில் எதிர் மறையானது என்பது கருத்து. இதற்குப் பதில் ஒருவர் தன்னிடமுள்ள ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாக இக்கால கட்டத்தைப் பார்க்கலாம். இளமையில் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்று விரும்பி, வாழ்க்கைச் சூழல்கள் காரணமாக அதனைச் செய்ய முடியாமல் போனவர்கள் படித்துப் பட்டங்கள் பெறுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளலாம். மேனாடுகளில் அன்றாடப் பணிகளிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பலர் முதுமையில் படித்துப் பட்டம் பெறுகின்றார்கள். ஓவியம், எழுத்து , நடிப்பு போன்ற தம் ஆற்றல்களை வளர்த்துக்கொள்கின்றார்கள். தன்னார்வத்தொண்டர்களாக ஏனைய மானுடர்களுக்குப் பயனுள்ளவர்களாக வாழ்கின்றார்கள்.
மானுடர்கள் ஓய்வு பெறும் காலகட்டத்தை இருப்பின் வளமான ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளும் காலகட்டமாகக் கருதித் தம் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவேண்டும். ஓய்வு பெறுதல் என்னும் சொல்லினைத் தம் வாழ்க்கையின் அகராதியிலிருந்து நீக்க வேண்டும். இருப்பில் மானுடர்களுக்கு ஓய்வு என்பது இருப்பின் முடிவில் மட்டுமே இருக்க வேண்டும் என்னும் வகையில் மானுடர்கள் தம் வாழ்க்கையினை அமைத்துக்கொள்ள வேண்டும்.