திருமாலின் திருக்கலியாண குணங்களில் ஆழ்ந்திருப்போர் ஆழ்வார்கள். இவா்களது பாசுரங்கள் இனிய எளிய தமிழில் அமைந்துள்ளன. ஆயினும் அவற்றின் பொருளோ மிகவும் ஆழமானவை. அரிய தத்துவங்களை உள்ளடக்கியுள்ளவை. இறைவன் எங்கும் நிறைந்திருப்பவன். உயிர்களின் நலனையே தனது விருப்பாகக் கொண்டவன். இறைவனுடைய இப்பண்புகளை திருக்கலியாண குணங்கள் என்று குறிப்பிடுவா். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் சுட்டியுள்ள இறைவனின் திருக்கலியாண குணங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
திருக்கலியாண குணங்கள்
திருமாலுடைய குணங்களை வைணவா்கள் திருக்கலியாண குணங்கள் என்று குறிப்பிடுவா். “இறைவன் எல்லா குற்றங்களுக்கும் எதிரிடையாக இருப்பவன். அதாவது இருளுக்கு ஒளி போலவும் பாம்புக்குக் கருடன் போலவும் திகழ்பவன். தன்னைச் சரணடைந்தவருடைய துன்பங்களைப் போக்குபவன். இடத்தாலும் காலத்தாலும் பொருளாலும் அளவுபடுத்தப் பெறாதவன். அதாவது இன்ன காலத்தில் உள்ளான். இன்ன காலத்தில் இல்லான் என்கிற கால அளவு இல்லாத நித்தியன். இன்ன இடத்தில் உள்ளான் இன்ன இடத்தில் இல்லான் என்கிற தன்மை இல்லாதவன்”1 என்று குறிப்பிடுவா்.
“விஷ்ணு என்ற சொல்லுக்கு எங்கும் பரந்துள்ளவன். நன்மை செய்பவன். அடியவா்களை மாயையிலிருந்து விடுவிப்பவன். எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்பவன் என்றெல்லாம் பொருள் கூறினும் இச்சொல்லை விடவும் பகவான் என்ற சொல்லையே ஆழ்வார்கள் பல இடங்களிலும் பயன்படுத்துகின்றனா். இதனாலேயே பாகவத சமயம் பாகவத தருமம் எனத் திருமால் நெறியைக் கூறி வருகின்றனா். பகவான் என்னும் பெயரின் அடிச்சொல் பகம் என்பது. இஃது ஆறு என்னும் பொருளை உடையது. இதனால் ஆறு கல்யாண குணங்களை உடையவன் பகவான் ”2 என்று குறிப்பிடுவா்.
“ ஞானம் ( அறிவு ) ஐசுவரியம் ( ஒரு தலைவனுக்குரிய இயல்பு ) சக்தி ( ஆற்றல் ) பலம் ( வலிமை ) வீரியம் ( ஆண்மை ) தேஜஸ் ( ஒளி மயமாக இருத்தல் ) ”3 என்பனவே அக்குணங்களாகும். இப்பண்புகள் அனைத்தும் இறைவனுடைய தலைமைத் தன்மையை விளக்கிக் காட்டுவனவாக அமைந்துள்ளன எனலாம்.
ஞானம்
எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் உள்ள எல்லாப் பொருட்களின் பண்புகளையும் ஒன்றுவிடாமல் ஒரே இடத்தில் கண்கூடாகக் காணுதலே ஞானம் எனப்படும். ஞானம் குறித்து “ ஞானம் என்பது அறிவு எனப்படும். சேதனனிடம் உள்ள துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை ஈயவும் அறிவதற்குத் தகுதியாக உள்ள எல்லாப் பொருட்களையும் ஒரே காலத்தில் நேராகக் காணவல்ல அறிவே ஞானம் ” 4 எனப்படும் என்பா்.
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும்பாயார்க் களித்தாலுன் சுடா்ச்சோதி மறையாதே
( திருவாய்மொழி 3 – 1 : 9 )
என்ற பாசுர அடிகளில் இறைவனுடைய ஞானம் என்னும் குணத்தினை நம்மாழ்வார் விளக்கிக் காட்டுகிறார்.