காலத்தால் அழியாத கானங்கள் 4: நாரே நாரே நாரே! நன்னாரே நன்னாரே நன்னாரே நானாரே
இன்று இந்தியத்திரையுலகில் கொடி கட்டிப்பறக்கும் பாடகிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடகியாக ஸ்ரேயா கோஷலைக் கூறுவேன். அவரது பிறந்த தினம் மார்ச் 12. மார்ச் 12, 1984 பிறந்த ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்க மாநிலத்தில் பிறந்தவர். ‘சரிகமப’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபற்றி சிறந்த பாடகியாகப் புகழ்பெற்று, திரைப்படத் தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியால் இனங்காணப்பட்டு (Sanjay Leela Bhansali ) , அவரது தேவதாஸ் இந்தித் திரைப்படத்தில் (2002) பாடகியாக அறிமுகப்படுத்தப்பட்டு, அப்படத்தின் மூலமே இந்திய மத்திய அரசின் மற்றும் ஃபிலிம்ஃபெயர் சஞ்சிகையின் சிறந்த பாடகிக்கான விருதினைப்பெற்றவர். குறுகிய காலத்தில் நான்கு தடவைகள் இந்திய மத்திய அரசின் தேசிய விருதினையும், ஆறு தடவைகள் ஃபிலிம்ஃபெயரின் விருதினையும் சிறந்த பாடகிக்காகப் பெற்றவர். இவை தவிர தமிழக அரசின் மாநில விருதினை இரு தடவைகளு, மூன்று தடவைகள் கேரள மாநில அரசின் விருதினையும் , மேலும் பல விருதுகளையும் பெற்றவர். இங்கிலாந்திலுள்ள Madame Tussauds அருங்காட்சியத்தில் மெழுகினால் சிலையாக வடிக்கப்பட்ட முதலாவது இந்தியப் பாடகர் என்ற பெருமையினையும் பெற்றவர். இவரது பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையானவை. திரைப்படங்கள் மட்டுமல்லாது, சொந்தமாகவும் இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் இசை ஆல்பங்கள் தயாரித்தும் வெளீயிட்டுள்ளார்.
இவர் பாடகர் உதய் மஜும்தாருடன் பாடிய மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான ‘குரு’ படத்தில் பாடிய ‘நன்னாரே’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களிலொன்று. இப்பாடலின் சிறப்புகளாக ஸ்ரேயா கோஷலின் குரல், ஏ.ஆர்.ரகுமானின் இசை, கவிஞர் வைரமுத்துவின் வரிகள் , இயற்கையெழிலின் அழகிய காட்சிகளை வெளிப்படுத்தும் ஒளிப்பதிவு மற்றும் ஐஸ்வர்யா ராஜி`ன் நடிப்பு, நடன அசைவுகள் ஆகியவற்றைக் கூறுவேன்.