ஸ்டீபன் ஹார்கிங் , அண்மைக்காலத்தில் எம்முடன் வாழ்ந்த தலைசிறந்த வானியற்பியற் துறை அறிஞர் தனது 76ஆவது வயதில் இன்று காலை (மார்ச் 14, 2018) தன்னியக்கத்தை நிறுத்தி விட்டார். இவரது அறிவு மட்டுமல்ல இவரது வாழ்க்கை கூட அனைவரையும், மருத்துவர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியதொன்று. இளமைப்பருவத்தில் தனது இருபத்தியிரண்டாவது வயதில் ‘மோட்டார் நியூரோன் டிசீஸ்’ என்னும் ஒருவகையான நரம்பு நோயால் உடல் நிலை பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியே வாழ்வாக அமைந்து விட்ட நிலையிலும், சிறிது காலமே வாழ்வார் என்று மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையிலும் இவற்றையெல்லாம் மீறி இத்தனை ஆண்டுகள் இவர் வாழ்ந்திருக்கின்றார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்.ஐசக் நியூட்டன் வகித்த பதவியினை வகித்திருக்கின்றார். திருமண வாழ்வில் ஈடுபட்டு தந்தையாக வாழ்ந்திருக்கின்றார். இவர் மூன்று குழந்தைகளுக்குத்தந்தை.
நவீன வானியற்பியற் துறைகளின் தந்தையான அல்பேர்ட் ஐன்ஸ்டைனின் சார்பியல் இயக்க மற்றும் கருந்துளைகள் பற்றிய ஆய்வில், சக்திச்சொட்டுப் பெளதிகத்தில் தன்னை ஈடுபடுத்தி மேலும் பல ஆய்வுகளைச் செய்திருக்கின்றார். அவற்றின் வாயிலாகப் பல முடிவுகளை, உண்மைகளை அறிய வைத்திருக்கின்றார். குறிப்பாகக் கருந்துளைகள் பற்றிய, நாம் வாழும் இப்பிரபஞ்சம் பற்றிய இவரது கோட்பாடுகள் நவீன வானியற்பியத்துறைக்கு வளம் சேர்ப்பவை.