இலங்கையில் பிரபல சிங்கள எழுத்தாளர் மார்டின் விக்கிரமசிங்கா, மாத்தறை கொக்கல என்ற பிரதேசத்தைச்சேர்ந்தவர். அவர் எழுதிய கம்பெரலிய நாவலை, தென்னிலங்கை பேருவளMartin-Wickramasingheையைச்சேர்ந்த கலாநிதி எம். எம் உவைஸ் ” கிராமப்பிறழ்வு” என்ற பெயரில் மொழிபெயர்த்தார். கம்பெரலிய நாவல் மட்டுமன்றி, மார்டின் விக்கிரமசிங்காவின் மடோல்தூவ, யுகாந்தய முதலான நாவல்களும் திரைப்படமாகி விருதுகளையும் பெற்றன. மடோல் தூவ நாவலை, வீரகேசரியில் பணியாற்றிய ஊர்காவற்துறையைச்சேர்ந்த கே. நித்தியானந்தன், ” மடோல்த்தீவு” என்ற பெயரில் மொழிபெயர்த்து, வீரகேசரியில் தொடராக வெளியிட்டார். மஹரகமையைச்சேர்ந்த தெனகம சிரிவர்தன எழுதிய குருபண்டுரு என்ற சிங்கள நாவலை, தென்னிலங்கை பண்டாரகமவைச் சேர்ந்த திக்குவல்லை கமால், குருதட்சணை என்ற பெயரில் மொழிபெயர்த்து தமிழ் வாசகர்களுக்கு வழங்கினார். ஹொரணையில் கும்புகே என்ற கிராமத்தைச்சேர்ந்த கருணாசேன ஜயலத் எழுதிய கொளுஹதவத்த என்ற நாவலை, புங்குடுதீவைச்சேர்ந்த, கொழும்பில் வசித்த தம்பிஐயா தேவதாஸ் ஊமை உள்ளம் என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இதனை வீரகேசரி பிரசுரம் வெளியிட்டது. மினுவாங்கொடையைச்சேர்ந்த வண. ரத்னவன்ஸ தேரோ, யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த செங்கைஆழியானுடைய வாடைக்காற்று நாவலை சிங்களத்தில் அதே பெயரில் மொழிபெயர்த்தார். அத்துடன் திக்குவல்லை கமாலின் எலிக்கூடு கவிதை நூலையும் சிங்களத்தில் தந்தார். வந்துரம்ப என்ற சிங்களப்பிரதேசத்தைச்சேர்ந்த பந்துபால குருகே எழுதிய செனஹசின் உப்பன் தருவோ நாவலை கொழும்பில் வசிக்கும் இரா. சடகோபன் ” உழைப்பால் உயர்ந்தவர்கள்” என்னும் பெயரில் தமிழில் வரவாக்கினார். உசுல. பி. விஜயசூரியவின் அம்பரய நாவலை தேவா என்பவர் தமிழில் தந்துள்ளார். கண்டி கல்ஹின்னையைச்சேர்ந்த எஸ்.எம். ஹனிபா எழுதிய மகாகவி பாரதியின் சுருக்கமான வரலாற்றை அதே பெயரில் தெஹிவளையில் வசித்த கே.ஜீ. அமரதாஸ சிங்களத்திற்கு வரவாக்கினார்.
இந்தப்பதிவில் படைப்பாளிகளின் பெயர்களையும் அவர்கள் வாழ்ந்த ஊர்களையும் மொழிபெயர்த்தவர்களின் பெயர்களையும் அவர்களின் ஊர்களையும் குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது. இவர்கள் அனைவரும் இலங்கையர்! வேறு வேறு இனங்களைச்சேர்ந்தவர்களாகவும் வேறு மொழிகளை தாய்மொழியாகவும், வேறு மதங்களை ( பௌத்தம், இந்து, இஸ்லாம், கத்தோலிக்க) பின்பற்றுபவர்களுமாவர். இலங்கையில் தமிழர்களும் முஸ்லிம்களும் தமிழைப்பேசுகின்றனர். தமிழ்பேசும் கத்தோலிக்கர்களும் இங்கு வாழ்கின்றனர். இவர்கள் தேசிய சிறுபான்மை இனத்தவர்கள். பெளத்த மதத்தை பின்பற்றும் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சிங்களவர்களும் கத்தோலிக்க மதத்தைப்பின்பற்றும் சிங்களம் பேசும் மக்களும் வாழ்கின்றனர். இவர்கள் மத்தியிலிருந்துதான் இங்கு குறிப்பிடும் எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் நாம் பெற்றிருக்கின்றோம்.