tamilbook.kalam@gmail.com
avan.siva55@gmail.com
ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்ததினம் மார்ச் 14..
நவீன இயற்பியலின் தந்தை என்பர் ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனை. நவீன இயற்பியலின் இரு அடித்தளங்களாக சார்பியற் தத்துவத்தையும் (சிறப்புச் சார்பியற் தத்துவம் மற்றும் பொதுச் சார்பியற் தத்துவம்) , சக்திச்சொட்டுப் பெளதிகம் அல்லது ‘குவாண்டம் பிசிக்ஸ்’ஸையும் குறிப்பிடலாம். இவ்விரண்டு கோட்பாடுகளின் மூலவராக ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனைக் குறிப்பிடலாம். அரிஸ்டாட்டில், சேர் ஐசாக் நியூட்டன் போன்றோரின் கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்திருந்த நவீன இயற்பியலின் அடித்தளங்களையே அடியோடு மாற்றி வைத்தவை ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வந்த வெளி (Space) காலம் (Time) ஆகியவை பற்றி நிலவி வந்த கோட்பாடுகளை அடியோடு மாற்றி வைத்தவை ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடான சிறப்புச் சார்பியற் தத்துவக் கோட்பாடு. அதுவரை வெளி, நேரம் ஆகியவை சுயாதீனமானவை என்று கருதப்பட்டு வந்தன. அவை சுற்றிவர நடைபெறும் இயக்கங்களால் பாதிப்புறுவதில்லை என்று கருதப்பட்டு வந்தன. ஆனால் ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடோ வெளி, நேரம் ஆகியவை இரண்டும் சுற்றிவர நடைபெறும் இயக்கங்களால் பாதிக்கப்படுபவைதாம் என்று கூறின. அவை சுயாதீனமானவை அல்ல மாறாகச் சார்பானவை என்பதை வெளிப்படுத்தின. நேரமானது வேகத்தால் பாதிக்கப்படுகின்றது. வெளியானது பொருளொன்றின் திணிவினால் பாதிக்கப்படுகின்றது. திணிவு கூடிய பொருளொன்றானது தன்னைச் சுற்றியிருக்கும் வெளியினை வளைத்து விடுகின்றது என்பதை ஐன்ட்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவக் கோட்பாடு வெளிப்படுத்தியது. அத்துடன் காலத்தையும் , நேரத்தையும் தனித்தனியாக ஒருபோதுமே பிரித்து வைத்துப் பார்க்க முடியாது என்றும் , நாம் வாழும் இப்பிரபஞ்சமானது ‘வெளிகால’ (SpaceTime) அல்லது ‘காலவெளி’யால் ஆன ஒன்று என்றும் அச்சிறப்புச்சார்பியற்க்கோட்பாடு கூறியது.
இது போல் புவியீர்ப்பானது நியூட்டன் கூறியதுபோல் ஒரு விசையேயல்ல என்றும், அது காலவெளிப்படுதாவில் பொருளொன்று ஏற்படுத்திவிடும் வடிவவியல் மாறுதலின் விளைவு என்றும் எடுத்துக் காட்டியது ஐன்ஸ்டைனின் பொதுச்சார்பியற் தத்துவம். பொருளொன்றின் திணிவின் அளவினால் சுற்றிவர இருக்கும் காலவெளியில் ஏற்படும் வளைவின் காரணமாகவே ஒரு பொருளானது வளைக்கும் பொருளைச் சுற்றிவருவதன் காரணம் என்பதை அக்கோட்பாடு எடுத்துக்காட்டியது. அவரது சிறப்புச் சார்பியற் தத்துவமே கருந்துளைகள் போன்ற பிரபஞ்சச் சாத்தியங்களை எதிர்வு கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவக் கோட்பாடுகளை மையமாக வைத்து நான் எழுதிய வானியற்பியற் பற்றிய கட்டுரைகள் தொண்ணூறுகளில் வீரகேசரி வாரவெளியீட்டில் வெளிவந்துள்ளன. தமிழகத்தில் கட்டுரையொன்று கணையாழி சஞ்சிகையில் வெளியானது./ பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனின் பிறந்தநாள் மார்ச் 14. அவர் நினைவாக இச்சிறு குறிப்பினையும், முன்பு எழுதிய கவிதைகள் இரண்டினையும் இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இலங்கையிலிருந்து வெளியாகும் லக்பிமா (lakbima) சிங்களத் தினசரிப்பத்திரிகையின் 18.03.2018 ஞாயிறு பதிப்பில் எனது சிறுகதையான ‘நடுவழியில் ஒரு பயணம்’ சிறுகதையின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இச்சிறுகதை டிசம்பர் 2006இல் ‘பதிவுகள்’ மற்றும் ‘திண்ணை’ ஆகிய இணைய இதழ்களில் வெளியாகிய சிறுகதை. இச்சிறுகதையினைத் தமிழிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவர் எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப் படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி.சரத் ஆனந்த. அவருக்கும், லக்பிமாவில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பானவருமான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe) அவர்களுக்கும் நன்றி. இச்சிறுகதை வெளியான ‘லக்பிமா’ : http://epaper.lakbima.lk/last_18_03_18/manjusawa.pdf
ஏற்கனவே எனது இன்னுமொரு சிறுகதையான ‘உடைந்த காலும், உடைந்த மனிதனும்’ சிறுகதையினை ஜி.ஜி.சரத் ஆனந்த சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்து ‘லங்கஇரிடா’ (Lankairida)) பத்திரிகையில் வெளியிட்டுள்ளார். அச்சிறுகதை ‘லங்கஇரிடா’வின் பெப்ருவரி 18, 2018 பதிப்பில் வெளியாகியுள்ளது.
‘நடுவழியில் ஒரு பயணம்’ சிறுகதையினை முழுமையாகக் கீழே வாசிக்கலாம்:
நடுவழியில் ஒரு பயணம்’ – வ.ந.கிரிதரன் –
பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். ‘டவரின்’ வீதியும் ‘புளோர்’ வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு ‘தொராண்டோ’ நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ அல்லது இருப்பிடங்களை அறிந்து கொள்வதோ மிகவும் இலகுவானது). ‘பஸ்’சை எதிர்பார்த்து நின்றிருந்தான். காலம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இரவு பாதுகாவற் பணியினை முடித்துக் கொண்டு என்னிருப்பிடம் திரும்புவதற்காக ‘பஸ்’ தரிப்பிடம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சமயத்தில்தான் அவனை நோக்கினேன். நள்ளிரவில் பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் ‘பஸ்’சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகள். இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை, உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம். ‘லாண்ட்ஸ்டவு’னுக்கருகிலிருந்த கேளிக்கை விடுதியான ‘ஹவுஸ் ஆவ் லங்காஸ்டர்’இலிருந்து நிர்வாண நடனமாதர் சிலர் வெளியில் வந்திருந்து புகை பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றி மல்லர்களைப் போன்ற தோற்றமுடைய இரு வெள்ளையர்கள் , பார்வைக்கு இத்தாலியர்களைப் போலிருந்தார்கள், அப்பெண்களுடன் அளவளாவியபடி கவசங்களாக நின்றார்கள். வீதியின் அடுத்த பக்கத்தில், வடபுறத்தில், சில கறுப்பின போதை மருந்து விற்றுப் பிழைக்கும் சுய வியாபாரிகள் சிலர் வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடியிருந்தார்கள். மேலும் சிலர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள் என்னைப் போல். இததகையதொரு சந்தர்ப்பத்தில்தான் நான் அவனை அந்த பஸ் தரிப்பிடத்தில் சந்தித்தேன்.
“ஏ! நண்பா! எப்படிச் சுகம்” என்று உரையாடலினைத் தொடர்ந்தேன்.
“நான் நல்லாத்தானிருக்கிறேன். நீ எப்படி?”யென்றான். அப்பொழுதுதான் கவனித்தேன் அவன் போதை இன்னும் தணியாததை.
“நானும் நலமே! நன்றி!” என்றேன்.
அவன் அவ்வழியால் சென்று கொண்டிருந்த டாக்ஸிகள் சிலவற்றை மறித்தான். ஒருவராவது அவனுக்காக நிற்பாட்டுவதாகத் தெரியவில்லை.
“பார். கறுப்பினத்தவனென்றதும் ஒருத்தனாவது நிற்பாட்டுகிறானில்லை. அங்கு பார். அந்த கறுப்பின டாக்ஸிச் சாரதி கூட நிற்பாட்டுகிறானில்லை” என்றான்.
“அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பத்திரிகைகளில் பார்த்திருப்பாயே. எத்தனை தடவைகள் அவர்கள் தாக்கப்பட்டிருப்பார்கள். சிலர் கொல்லப்பட்டுமிருக்கிறார்களே. மிகவும் ஆபத்தான பணிதான். உனக்கென்ன டாக்ஸிதானே வேண்டும். நான் மறிக்கவா?” என்றேன்.
“அவ்விதம் செய்தால் நன்றியுள்ளவனாகவிருப்பேன்” என்றான்.
“அது சரி. நீ எங்கு போக வேண்டும்?”
“கோடன் ரிட்ஜ் தெரியுமா? ‘டான்வோர்த்’ வீதியும் ‘மிட்லாண்ட்’ வீதுயும் சந்தியும் சந்திக்குமிடத்திற்கண்மையில்..” என்றான்.