எழுத்தாளர் அ.முத்துலிங்கம் பற்றியொரு நனவிடை தோய்தல்!

 எழுத்தாளர் அ.முத்துலிங்கம்–  தமிழ் இலக்கிய உலகில் அறுபது ஆண்டுகாலமாக எழுத்தூழியத்தில் ஈடுபட்டுவரும் கனடாவில் வதியும் மூத்த எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் எழுத்துலகத்தைக் கொண்டாடும் விழா எதிர்வரும் ஏப்ரில் மாதம் கனடாவில் நடக்கவிருக்கிறது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் (2009 மார்ச் ) மல்லிகை இதழின் முகப்பை அலங்கரித்த முத்துலிங்கம் பற்றி அதே இதழில் எழுதிய பதிவு, மீண்டும் வாசகர்களுக்கு – முருகபூபதி –


ஒரு நல்ல சிறுகதையைப் படிக்கும் வாசகனுடைய சிந்தனையானது கதை முடிந்த பின்னும் சிறிது தூரம் ஓடவேண்டும். சிறுகதையின் முழுமை அவன் சிந்தனை ஓட்டத்தில்தான் நிறைவேற வேண்டும். ஒரு உண்மையான சிறுகதை அது முடிந்த பிற்பாடுதான் தொடங்குகிறது. – இப்படிச்சொல்லியிருப்பவர் தன்னை ஒரு இலக்கிய விமர்சகராகவோ அல்லது இலக்கியப்பேராசிரியராகவோ அறிமுகப்படுத்திக்கொண்டவர் அல்ல. ஒரு குடும்பத்தில் திடீரெனக் காணாமல் போனவர் திடுதிப்பென சுமார் இருபத்தியைந்து ஆண்டுகளுக்குப்பின்னர் விந்தையான இயல்புகளுடனும் கருத்தையும் கவனத்தையும் ஈர்க்கும் தோற்றத்துடனும் திரும்பிவந்து இதோ நான் இன்னமும் இருக்கின்றேன் எனச்சொல்லும்போது அந்தக் குடும்பத்தினரிடம் தோன்றும் வர்ணிக்க வார்த்தைகளைத்தேடும் பரவசம் இருக்கிறதே அது போன்றதுதான் நண்பர் அ.முத்துலிங்கம் அவர்களின் இலக்கிய மறுபிரவேசம் என்று நினைக்கின்றேன்.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர் நான் இலக்கிய உலகிற்குள் பிரவேசித்த 1970 காலப்பகுதியில் ஒரு மாலைவேளையில் கொள்ளுப்பிட்டி தேயிலைப்பிரசார மண்டபத்தில் நடந்த ஒரு இலக்கியநிகழ்வில் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரைச்சுட்டிக்காட்டி அவர்தான் அக்கா கதைத்தொகுதி எழுதிய அ.முத்துலிங்கம் என்று ஒரு இலக்கிய நண்பர் சொன்னார். எனினும் அன்று அவருடன் பேசும் வாய்ப்புக்கிடைக்கவில்லை. ‘அக்கா’ தொகுதியும் படிக்கக் கிடைக்கவில்லை. அதன் பின்னர் முத்துலிங்கம் பற்றிய எந்தத்தகவலும் கிடக்கவில்லை. அவரையும் அவரது அக்காவையும் தேடியும் கண்களுக்குத்தென்படாமல் மறைந்து விட்டார்கள்.

1987 இல் நானும் அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டபின்னும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். எதிர்பாராமல் எனது வீட்டு முகவரிக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு புத்தகப்பார்சல் வந்தது. அனுப்பியிருந்தவர். முத்துலிங்கம். புத்தகம் ‘திகடசக்கரம்’ கதைத்தொகுதி. உடனே பதில் எழுதினேன். அவரிடமிருந்து பதில் இல்லை. ‘திகடசக்கர’த்தை வைத்துக்கொண்டு, மீண்டும் தேடுதல் படலம். ஐ.நா. அதிகாரியாக அவர் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாக நான் விசாரிப்பவர்களெல்லாம் சொன்னார்களே தவிர, சரியான தகவலைத் தரவில்லை. என்னாலும் அவரது சரியான இருப்பிடத்தையோ முகவரியையோ கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. அவர் தமது உத்தியோகத்திலிருந்து நிரந்தரமாக ஓய்வுபெறும் வரையில் காத்திருக்கவேண்டியிருந்தது. எனினும், என்னைப்போன்ற வாசகர்களை காத்திருக்கச்செய்யாமல் தமது கதைகள், கட்டுரைகள் மூலம் இலக்கிய மறுபிரவேசத்துடன் அறிமுகமாகிக்கொண்டிருந்தார்.

Continue Reading →