அறிஞர் அ.ந.கந்தசாமியின் முதலாவது சிறுகதையினை அண்மையில் வாசிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. எழுத்தாளர் செங்கை ஆழியான் தொகுத்து பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு – கிழக்கு மாகாணம், திருகோணமலை) வெளியிட்டிருந்த ‘ஈழகேசரிச் சிறுகதைகள்’ தொகுப்பு நூல் உள்ளடக்கியுள்ள ‘குருட்டு வாழ்க்கை’ என்னும் சிறுகதைதான் அது. 17.5.1942 ஈழகேசரிப்பிரதியில் வெளியான சிறுகதை இது. இதனை எழுதியபோது அ.ந.க.வுக்கு வயது பதினேழு. இதுவே அவரது முதலாவது சிறுகதை என்று செங்கை ஆழியான நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் சிறுகதை வெளியாகியுள்ள பக்கத்தில் அ.ந.க ‘சிப்பி’ என்னும் புனைபெயரில் ‘பகல் வெள்ளி’ (1941) என்னுமொரு சிறுகதையினையும் ஈழகேசரியில் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன்படி ‘பகல்வெள்ளி’யே அ.ந.க.வின் முதலாவது சிறுகதையாகவிருக்க வேண்டும். ‘குருட்டு வாழ்க்கை’ வெளியான ஆண்டு 1942. ‘பகல் வெள்ளி’ வெளியான ஆண்டு 1941. அ.ந.க.வின் பிறந்த ஆண்டு 1924 என்பதால் (ஆகஸ்ட் 8, 1924) இச்சிறுகதை வெளியானபோது அவருக்கு வயது பதினேழு.
இச்சிறுகதையை வாசித்த போது இன்னுமொர் உண்மையினையும் அவதானிக்க முடிந்தது. அ.ந.க எழுதி தினகரனில் தொடராக வெளியான ஒரேயொரு நாவல் ‘மனக்கண்’. இந்நாவலின் கதையமைப்பும், ‘குருட்டு வாழ்க்கை’ சிறுகதையின் கதையமைப்பூம் ஒரே மாதிரியானவை. குருட்டு வாழ்க்கை சிறுகதையில் வரும் நாயகன் அம்மை நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இது போலவே மனக்கண் நாவலிலும் நாயகன் ஶ்ரீதர் கண் நோயினால் கண் பார்வையினை இழக்கின்றான். இரண்டிலுமே கண் பார்வை இழந்த நாயகர்களின காதலிகள் நாயகர்களை ஒதுக்கி விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களின் பெற்றோர்கள் அவர்களது காதலிகள் என்று கூறி வேறு பெண்களை அவர்களுக்கு மணம் முடித்து வைத்து விடுகின்றார்கள். இரண்டிலுமே நாயகர்களுக்கு கண் சத்திர சிகிச்சை செய்து பார்வை திரும்புகின்றது. இரண்டிலுமே உண்மை அறிந்த நாயகர்கள் தாம் பெற்ற பார்வையினைத் தாமே பறித்து விடுகின்றார்கள். அவ்விதம் செய்வதன் மூலம் காதலிகள் அல்லாத மனைவியர்களுடன் குடும்பத்தை நடாத்த அவர்களால் முடிகின்றது. ஆனால் குருட்டு வாழ்க்கை சிறுகதை இந்நிலையுடன் நின்று விடுகின்றது. மனக்கண் நாவலிலோ கதை மேலும் தொடர்கின்றது. மனக்கண் நாவலில் நாயகன் தன்னை மணந்து கொண்ட பெண்ணைப்பற்றி மேலும் சிந்திக்கின்றான். அவளது தியாகத்தின் அளவை உணர்ந்துகொள்கின்றான். மீண்டும் கண் பார்வையைப் பெற விரும்புகின்றான். செல்வந்தரும், செருக்கும் மிக்க அவனது தந்தையார் இறுதியில் தன் கண்களைக் கொடுத்து அவனைக் காப்பாற்றி மறைந்து விடுகின்றார்.
குருட்டு வாழ்க்கை சிறுகதையைப்பற்றிக் குறிப்பிடுகையில் செங்கை ஆழியான் ‘ஈழகேசரித் தொகுப்பு நூலில் ‘நல்லதொரு சினிமாப்பாணிக் கதை. ஆனால் வாசித்ததும் வலிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். மனக்கண் நாவலின் இறுதியில் அ.ந.க எழுதிய முன்னுரையில் அ.ந.க ஏன் அவ்விதமானதொரு சுவை மிகுந்த கதையினைப் பின்னினார் என்பதற்கும், தான் நாவலில் பாவித்த சுவையான நடையினைப்பற்றியும் விளக்கம் தந்திருக்கின்றார். அதில் அவர் பின்வருமாறு கூறுவார்: